

3 முறை பதவியில் முழுமையாக நீடிக்கவில்லை - இம்முறையும் பதவி பறிபோகும் நிலை.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச, தனது 52 வருடகால அரசியல் பயணத்தில் நான்கு தடவைகள் பிரதம அமைச்சராக பதவியேற்றிருந்தாலும், மூன்று தடவைகள் - குறுகிய காலப்பகுதிக்கு மட்டுமே அவரால் அப்பதவியில் நீடிக்ககூடியதாக இருந்தது. இம்முறையும் ‘நம்பிக்கையில்லாப் பிரேரணை’ எனும் பலப்பரிட்சையை அவர் சந்திக்க நேரிட்டுள்ளது.
2018 இல் அரங்கேறிய 52 நாட்கள் ஆட்சிக்கவிழ்ப்பு சூழ்ச்சியின்போது பிரதமர் பதவியை ஏற்ற மஹிந்த ராஜபக்ச, அரசியல் களத்தில் - பிரதம அமைச்சராக முதலாவது நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொண்டார்.
மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான புதிய அரசுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, பெரும் கூச்சல் - குழப்பங்களுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் ‘குரல் பதிவு’ வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. எனினும், நாடாளுமன்றத்தின் இந்த முடிவை அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கவில்லை.
இதனால் அரசியல் நெருக்கடி உச்சம் தொட்டது. இந்நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டவிரோதம் என 2018 டிசம்பர் 13 ஆம் திகதி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து 2018 டிசம்பர் 15 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச, பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்.
52 நாட்கள் ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சியின்போது ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி நிலைமைக்கு ஒத்ததாகவே தற்போதைய அரசியல் களநிலைவரமும் காணப்படுகின்றது. அன்று ஆளும் மற்றும் எதிரணிக்கிடையில்தான் கடும் அரசியல் சமர். அதேபோல நிறைவேற்று அதிகாரத்துக்கும், சட்டவாத்துக்குக்கும் இடையில் அதிகார மோதல் மூண்டியிருந்தது. ஆனால் இன்று அரசுக்கு எதிராக மக்களுக்கும் வீதியில் இறக்கியுள்ளமை முக்கியத்துவம்மிக்கதாக கருதப்படுகின்றது.
2018 இல் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிக்கூட, இழுத்தடிப்புகளுக்கு மத்தியிலேயே மஹிந்த பதவி துறந்தார். தற்போதும் பதவி விலக அவர் மறுக்கின்றார். இடைக்கால அரசு அமைந்தால் அதிலும் தான்தான் பிரதமர் என்பதையும் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.
இந்நிலையில் பிரதமர் உட்பட அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி காய்நகர்த்தில் வருகின்றது.
பிரதமர் பதவி விலகமறுத்தால், நம்பிக்கையில்லாப் பிரேரணை நடவடிக்கைக்கு ஆதரவு என நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகள் அறிவித்துள்ளன. டலஸ் அழகப்பெரும உட்பட ஆளுங்கட்சியில் உள்ள 20 பேர்வரை, ஆளுந்தரப்புக்கான ஆதரவை கைவிடும் நிலைப்பாட்டிலேயே உள்ளனர்.
1970 ஆம் ஆண்டு நாடாளுமன்ற அரசியல் பயணத்தை பெலியத்த தொகுதி ஊடாக ஆரம்பித்த மஹிந்த ராஜபக்ச, 23 ஆயிரத்து 103 வாக்குகளைப்பெற்று நாடாளுமன்றம் தெரிவானார். 77 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தோல்வி அடைந்தார். 1989 இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்றார்.




2018 ஒக்டோபர் 26 ஆம் திகதி இலங்கையில் ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சி ஏற்பட்டது. பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவி வகித்த நிலையில், மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கி, புதிய அரசொன்றை அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உருவாக்கினார். அப்போது 2ஆவது தடவையாக பிரதமராக மஹிந்த ராஜபக்ச பதவியேற்றார்.
( 52 நாட்கள் ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சியின்போது ஏற்பட்ட முக்கியமான சில அரசியல் சம்பவங்களில் தொகுப்பை ஏற்கனவே பதிவிட்டுள்ளேன். அவற்றின் சுருக்கத்தை மீள வழங்குகின்றேன். )




அமைச்சுகளில் இருந்து வெளியேற சில ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். சில அமைச்சுகள் மஹிந்த அணியால் சுற்றிவளைக்கப்பட்டன. சில அரச அதிகாரிகளும், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக ஜனநாயக விரோதச் செயலுக்கு துணைபோகும் வகையில் செயற்பட்டனர்.







இதனையடுத்து பெரும் பரபரப்புக்கு மத்தியில் நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடியது. ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து தாவிய சிலர் மீண்டும் அக்கட்சிக்கு திருப்பினர்.


கூச்சல், குழப்பத்துக்கு மத்தியில் குரல்பதிவு வாக்கெடுப்பை நடத்தினார். இதனால், தோல்வியுடன் திரும்பவேண்டிய நிலை மஹிந்தவின் சகாக்களுக்கு ஏற்பட்டது.
நாடாளுமன்ற நிலையியற்கட்டளைகளை இடைநிறுத்தி, சபைநடவடிக்கையை முன்னெடுப்பதற்குரிய யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எம்.பி. முன்வைத்தார். அது நிறைவேறிய பின்னர், ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவால் நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

இதனால், 15, 16 ஆம் திகதிகளில் சபையில் மீண்டும் அடிதடி ஏற்பட்டது. குறிப்பாக 16 ஆம் திகதி மிளகாய்த்தூள் வீசிகூட தாக்குதல் நடத்தப்பட்டது.

மஹிந்த ராஜபக்சவின் பிரதமர் செலயகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை இடைநிறுத்தும் பிரேரணையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகியவற்றின் உதவியுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது .இதனால், மஹிந்தவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.


இதனால் 2018 டிசம்பர் 15 ஆம் திகதி பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ச இராஜினாமா செய்தார். மறுநாள் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி முன்னிலையில் மீண்டும் பதவியேற்றார். அதன்பிறகு அமைச்சரவையும் பதவியேற்றது. அரசியல் நெருக்கடியும் முடிவுக்கு வந்தது.
2019 நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்றதும், 2019 நவம்பர் 21 ஆம் திகதி பிரதமர் பதவியை ஏற்றார் மஹிந்த ராஜபக்ச. 2020 ஆகஸ்ட் 05 ஆம் திகதிவரை பதவியில் நீடித்தார்.
2020 ஆகஸ்ட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் குருணாகலையில் போட்டியிட்டு 527,364 வாக்குகளைப் பெற்றார் மஹிந்த. இலங்கை அரசியல் வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகளாகும். அதன்பின்னர் மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.
இரண்டு வருட காலப்பகுதிக்குள்ளேயே பிரதமர் பதவியை விட்டு அவர் வெளியேற வேண்டும் என அழுத்தங்கள் வலுத்துள்ளன.
இலங்கை அரசியல் வரலாற்றில் ரணில் விக்கிரமசிங்கவும் 5 தடவைகள்வரை பிரதமர் பதவியை வகித்துள்ளார். எனினும், எந்தவொரு தடவையும் அப்பதவியை முழுகாலப்பகுதிக்கும் அனுபவிக்க முடியாத நிலைமையே ஏற்பட்டது.
மஹிந்தவுக்கும் அப்படிதான்.( அதாவது பிரதமர் பதவியை ஏற்று அப்பதவியை 5 ஆண்டுகள்வரை தக்க வைத்துக்கொள்ளவில்லை. நாடாளுமன்ற தவணை காலம் முடிவு, ஜனாதிபதி தேர்தல் உட்பட ஏதோ காரணத்துக்காக குறுகிய காலப்பகுதிவரையே இருக்க முடிந்துள்ளது)
தற்போதைய நாடாளுமன்றத்தில் மஹிந்தவும், ரணிலும் மட்டுமே பிரதமர் பதவியை வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் அரசியலில் அடுத்த வாரம் முக்கியத்துவம்மிக்கதாக அமையபோகின்றது.
ஜனாதிபதி தலைமையில் நாளை (25.04.2022) நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தின்போது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்கான யோசனை பிரதமரால் அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாரம் முக்கியத்துவம் மிக்க சந்திப்புகளும் கொழும்பு அரசியலில் தொடரவுள்ளன.
0 comments :
Post a Comment