சில நாடுகளின் சதித்திட்டத்துக்கு எமது நாடு (இலங்கை) உள்ளாகி அதிலிருந்து உடனடியாக மீள முடியாமல் சிக்குண்டு தவிக்கின்றது.
நாடு சிக்குண்டால், அந்நாட்டிலுள்ள மக்களும் அதற்குள்ளாகித்தான் ஆகவேண்டும். இதுதான் நியதியாகும். இதிலிருந்து தப்புவதாக இருந்தால் அரசும், மக்களும் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே அப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு ஆட்சியை மாற்றினால் எல்லாம் சரியாகிவிடும் என்ற முடிவில் பொதுமக்கள் வீதிக்கிறங்கி நாடளாவிய ரீதியில் தொடரான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அவ்வாறு ஆட்சியை மாற்றினாலும்கூட நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடியான தீர்வினை எட்டிவிட முடியாது என்பது மறைமுகமான உண்மையாகும். இந்த உண்மையை அரசியல் தலைவர்களும், அரசில்வாதிகளும், புத்தி ஜீவிகளும் நன்கறிவார்கள்.
இதை அறிந்தும்கூட, அவர்களின் செயற்பாடுகள் யாவும் அரசியல் நோக்காகவும், சுயலாபம் கருதி மக்களின் கவனங்களை வேறுபக்கமாக திசை திருப்பி, இருக்கின்ற ஆட்சியை கைப்பற்றும் குறியில் அவர்கள் செயற்பட்டு வருகின்றனர். இதையறியாத அப்பாவி பொதுமக்களும், மாணவச் சமூகமும் தங்களின் உயிரைக்கூட மதியாது வீதிக்கிறங்கி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் மட்டும் காரணமல்ல என்பதை போராட்டத்தில் ஈடுபடுகின்ற அனைவரும் முதலில் அறியவேண்டும். இப்பிரச்சினை எங்கே ஆரம்பிக்கத் தொடங்கியது? அதற்கான முக்கிய காரணங்கள் என்ன? என்பதற்கான விடைகளை நாம் தேடவேண்டும். அதன் பின்னர் ஆட்சியாளர்களை மாற்றுவதா? இல்லையா? என்ற தீவிர முயற்சியில் ஈடுபட வேண்டும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மோசமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை கட்டுப்படுத்த போராடி வரும் நிலையில், அரசியல்வாதிகளும், பொதுமக்களும் தொடரான ஆர்ப்பாட்டங்களைச் இந்த அரசை மாற்றி அதில் வெற்றி காண்பதற்காகவே துடியாய் துடிக்கின்றனர். இந்த செயற்பாடுகள் எமது நாட்டை இன்னுமின்னும் ஆபத்தில் கொண்டு சேர்க்குமே தவிர ஆரோக்கியமான விடயத்தில் கொண்டு சேர்க்காது என்பதை போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, போராட்டங்களை கையில் எடுத்தவர்கள் முதலில் எமது நாட்டுக்கு எவ்வாறு டொலர்களை வரவழைப்பது என்பதைப் பற்றியே சிந்திக்க வேண்டும்.
எமது உறவுகளையும், தாய் நாட்டையும் அழித்துவிட சில நாடுகள் துடித்துக்கொண்டிருக்கின்றன. அதற்காக அவர்கள் பாவிக்கும் ஆயுதங்கள் வெளிநாட்டிலுள்ள எமது உறவினர்களாகும். அவர்களின் இலக்கு வெற்றியடைந்து வருகின்றன. அதற்கு வெளிநாட்டிலுள்ளவர்கள் ஒருபோதும் ஆளாகி விடக்கூடாது. எமது நாட்டுக்கு அனுப்புகின்ற பணங்களுக்கு சிறு தொகை இலாபத்தைக் காட்டி (Black Market) சட்டவிரோத வழிமுறை பணப்பரிமாற்ற மாயைக்காட்டி அதன் மூலம் எமது நாட்டிலுள்ள உறவினர்களுக்கு பணங்களை அனுப்பி வைக்கச் செய்கின்றனர். இதன் மூலம் நாட்டுக்கு கிடைக்கின்ற டொலர்கள் தடைப்படுகின்றது. அதனால் எமது நாடும், நாட்டு மக்களும் பாரிய சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது என்பதை வெளிநாட்டிலுள்ள உறவினர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
டொலர்களின் வரவு இல்லை என்றால் எமது நாட்டுக்கு கிடைக்கப்பெறுகின்ற பெற்றோல், டீசல், மண்ணென்ணெய், கேஸ் போன்ற பல விதமான முக்கிய இறக்குமதிப் பொருட்களும் கிடைக்காமல் போய்விடும். அதனால் நாட்டிற்குள் இருக்கின்ற பொருட்களின் விலையேற்றம், பொருட்களின் தட்டுப்பாடு, கொலை, கொல்லை போன்ற பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவேண்டிவரும்.
இந்நிலைமையில், எந்த அரசாங்கம் இருந்தாலும் இப்பிரச்சினை இவ்வாறுதான் இருக்கும். நாம் ஆட்சியை மாற்றுவதற்கு முன்னர், வெளிநாடுகளில் தொழில் புரிகின்ற சகோதரர்கள், சகோதரிகள் அனைவரும் உங்கள் தாய் நாட்டை பிணையெடுக்க முன்வாரவேண்டும். அதற்காக இலங்கையில் இருக்கும் உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு Exchange Rate ஊடாக ஆகக் குறைந்தது 300$ (டொலர்) பணங்களை மிக விரைவாக நாட்டுக்கு அனுப்பி வைப்பதன் மூலமே தற்போது ஏற்பட்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஓரளவு தீர்வுகாண முடியும். ஆட்சியை மாற்றுவதன் மூலம் ஒருபோதும் தீர்வுகாண முடியாது.
வெளிநாட்டிலுள்ள உறவினர்கள் Black Market சட்டவிரோத வழிகளில் செய்யப்படுகின்ற பணப்பரிமாற்றத்தை முற்றாக தவிர்ந்து கொள்வதன் மூலம் எமது நாட்டின் எதிர்காலம், உறவினர்களின் எதிர்காலம், உங்கள் தாய், தந்தை, சகோதர சகோதரிகள், குழந்தைகள் ஆகியோர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும் என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை. நாமே நம் தேசத்தினை கட்டியெழுப்ப முயற்சிப்போம்.
0 comments :
Post a Comment