ஜனாதிபதி 'கோட்டா'வுக்கு எதிராக குற்றப் பிரேரணையை நிறைவேற்றுவது பெரும் சவால்…!



குற்றப் பிரேரணை என்றால் என்ன?
ஜனாதிபதிக்கு எதிராக முன்வைக்கக்கூடிய குற்றச்சாட்டுகள் எவை?
குற்றப் பிரேரணையை எதிர்கொண்ட முதலாவது ஜனாதிபதி யார்?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. திரும்பும் திசையெல்லாம் ‘கோட்டா’ எதிர்ப்பு அலையே கோலோச்சியுள்ளது. சமூக வலைத்தளங்களில் ‘GoHomeGotta’ என்ற பரப்புரை சமர் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
ஆனாலும், ஜனாதிபதி பதவி விலகமாட்டார் என ஆளுங்கட்சியினர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
 
அத்துடன், ‘WeWantGotta’ என அவருக்கு சார்பாக மக்களையும் அணிதிரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதனால் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் அரசியல் நெருக்கடியும் உச்சம் தொட்டுள்ளது.
சரி, மக்கள் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி பதவி
விலகாவிட்டால், அடுத்தக்கட்டம் என்ன? அரசமைப்பு ரீதியில் அவரை எப்படி பதவி நீக்கம் செய்யலாம் என்பதே பலர் தொடுக்கும் கேள்விக்கணையாக உள்ளது. இதற்கு ‘குற்றப் பிரேரணை’ என்பதே பதில். அதனால்தான் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணையொன்றை கொண்டுவரும் முயற்சியில் ஐக்கிய மக்கள் சக்தி இறங்கியுள்ளது.
 
குற்றப் பிரேரணையை எவ்வாறு முன்வைப்பது, அதற்கான நடைமுறைகள் எவை, குற்றப் பிரேரணையை சபாநாயகர் ஏற்ற பின்னர் என்ன நடக்கும் என்பன குறித்து ஆராய்வோம்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியில் இருப்பவருக்கு எதிராக 6 விடயங்களை மையப்படுத்தியதாக குற்றப் பிரேரணையை முன்வைப்பதற்கு அரசமைப்பில் ஏற்பாடுகள் உள்ளன.
 
1978 இல்தான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை உள்ளடக்கிய அரசமைப்பு உருவாக்கப்பட்டது. இன்றளவிலும் அந்த அரசமைப்பே அமுலில் உள்ளது. இதுவரை 20 தடவைகள் அரசமைப்பு மறுசீரமைக்கப்பட்டிருந்தாலும் குற்றப் பிரேரணையை முன்வைப்பதற்கான நடைமுறையில் மாற்றம் வரவில்லை.
 
அந்தவகையில் -
1. உளரீதியான பாதிப்பு அல்லது உடல் அங்கவீனத்தால் ஜனாதிபதி பதவியை தொடர்ந்து முன்னெடுக்க முடியாமல் இருந்தால் -
2. அரசமைப்பை வேண்டுமென்றே மீறியிருந்தால் -
3. தேசத்துரோக செயலில் ஈடுபட்டிருந்தால் -
4. இலஞ்சம் வாங்கியிருந்தால் -
5. அதிகார துஷ்பிரயோகம் - துர்நடத்தை - ஊழலில் ஈடுபட்டிருந்தால் -
6. சட்டத்தைமீறி ஒழுக்கமற்ற விதத்தில் நடந்திருந்தால் -
 
மேற்படி காரணிகளில் ஏதேனும் ஒரு விடயத்தை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட காரணிகளை முன்வைத்து, அது அல்லது அவை தொடர்பில் உயர்நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டுமெனகோரி, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் குற்றப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்க முடியும்.
குறித்த குற்றப் பிரேரணையில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை எம்.பிக்கள் கையொப்பமிட வேண்டும் (150). அதற்கு குறைவான எண்ணிக்கையிலான கையொப்பம் இருந்தால் குற்றப் பிரேரணையை சபாநாயகர் நிராகரிக்க முடியும்.
 
அத்துடன், மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பகுதியினராவது - அதாவது 113 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கையொப்பமிட்டுகூட குற்றப்பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்கலாம்.
ஆனால் - மேற்படி குற்றப்பிரேரணையில் ஏற்றுக்கொளளக்கூடிய விடயம் அல்லது விடயங்கள் உள்ளன, அது தொடர்பில் அல்லது அவை தொடர்பில் உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தலாம் என சபாநாயகர் கருதினால் அதனை ஏற்பார். இல்லையேல் குற்றப் பிரேரணையை நிராகரிக்கும் அதிகாரம் அவருக்கு உள்ளது.
 
(1991 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவி வகித்த ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக அவரது கட்சி உறுப்பினர்களாலேயே நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டது. அப்போது சபாநாயகராக பதவி வகித்த எம். எச். மொஹமட், கையொப்பமிட்ட எம்.பிக்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு பிரேரணையை நிராகரித்தார். இதனால் ரணசிங்க பிரேமதாசவுக்கு ஏற்படவிருந்த ஆபத்து நிலை தவிர்க்கப்பட்டது.)
நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகர் ஏற்கும் பட்சத்தில், நாடாளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் குற்றப் பிரேரணை உள்ளடக்கப்படும்.
அதன்பின்னர் குற்றப் பிரேரணை தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும். (விவாதத்துக்கான காலப்பகுதி சபாநாயகர் தலைமையில் நடைபெறும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.)
 
விவாதத்தின் பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படும். பிரேரணை நிறைவேற்றிக்கொள்வதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகள் (150) அவசியம். அவ்வாறு 150 பேர் அல்லது அதற்கு மேற்பட்டோர் ஆதரித்தால் அடுத்தக்கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
(சிலவேளை, நாடாளுமன்றத்தில் போதுமானளவு வாக்குகள் கிடைக்கப்பெற்றாவிட்டால் குற்றப்பிரேரணை வலுவிழக்கும்)
குற்றப் பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டும் பட்சத்தில், அப்பிரேரணையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு அல்லது குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக குற்றப் பிரேரணை, சபாநாயகரால் உயர்நீதிமன்றத்துக்கு அனுப்படும்.
 
உயர்நீதிமன்ற விசாரணையின்போது தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் தமது நிலைப்பாட்டை தாமாகவோ அல்லது தனது சட்டத்தரணி ஊடாகவோ தெளிவுபடுத்தும் உரிமை - வாய்ப்பு ஜனாதிபதிக்கு உள்ளது.
ஜனாதிபதி குற்றவாளியாகி இருக்கின்றார் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் பட்சத்தில், குற்றப் பிரேரணைமீது நாடாளுமன்றத்தில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்படும். அதன்போதும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு அவசியம். குற்றமற்றவர் என உயர்நீதிமன்றம் கருதினால் குற்றப் பிரேரணை வலுவிழக்கும்.
தற்போதைய நாடாளுமன்றத்தில் சபாநாயகர் பதவியை வகிப்பவர், ஆளுந்தரப்புக்கு விசுவாசமாக
செயற்படக்கூடியவர் என்ற விமர்சனம் உள்ளது.
 
மறுபுறத்தில் 150 உறுப்பினர்களின் ஆதரவு ஐக்கிய மக்கள் சக்திக்கு இல்லை. தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மற்றும் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் அணிகளின் ஆதரவை திரட்டினால்கூட சாதாரண பெரும்பான்மை என்ற இலக்கையே அக்கட்சியால் அடையமுடியும்.
20 ஆவது திருத்தச்சட்டத்தை ஆதரித்த முஸ்லிம் எம்பிக்கள், அரவிந்தகுமார், டயானா உட்பட ஆளுங்கட்சி பக்கம் தற்போது உள்ளவர்களுள் 35 இற்கும் மேற்பட்டோரின் ஆதரவு திரட்டப்படுமானால் குற்றப் பிரேரணை ஊடாக 'நிறைவேற்று அதிகாரத்துக்கு' சவாலை கொடுக்கலாம். ஆனால் இதற்கான சாத்தியப்பாடும் குறைவு.
 அதேபோல அரசமைப்பின் 20 ஆவதுதிருத்தச்சட்டத்தின் பிரகாரம் உயர்நீதிமன்றத்துக்கான நியமனங்கள், ஜனாதிபதியால் வழங்கப்படுகின்றன.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் - குற்றப்பிரேரணையொன்ற கொண்டுவந்து நிறைவேற்றிக்கொள்வதென்பது கடும் சவாலுக்குரிய பணியாகும்.
இலங்கையில் 1978 ஆம் ஆண்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உருவாக்கப்பட்டது. 88 வரை அப்பதவியில் ஜே.ஆர். ஜயவர்தன நீடித்தார்.
1989 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரணசிங்க பிரேமதாச வெற்றிபெற்றார். அவருக்கு எதிராக அவரின் கட்சி சகாக்களே 1991 இல் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்தனர். மூன்றிலிரண்டு பெரும்பான்மை எம்.பிக்களின் கையொப்பம் இருக்கவில்லை. அதனை காரணம்காட்டி அப்போதைய சபாநாயகர் எம். எச். மொஹமட் , நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிராகரித்தார்.
அதன்பின்னர் டி.பி. விஜேதுங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன போன்றவர்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிகளை வகித்துள்ளனர். அவர்களுக்கு எதிராக குற்றப் பிரேரணை வரவில்லை. மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கொண்டுவருவதற்கு முஸ்தீபுகள் இடம்பெற்றாலும் அத்திட்டம் செயற்படுத்தப்படவில்லை.
நன்றி:ஆர்.சனத்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :