ஒவ்வொருநாட்களிலும் நூற்றுக்கணக்கான உழவுஇயந்திரங்கள் வரிசையில் நின்று எரிபொருளை பெற்றுக்கொள்கிறது. ஆனால் வயலில் இறங்கி ஒருசில உழவு இயந்திரங்களே விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இலங்கையின் அரிசி தேவையில் ஐந்தில் ஒருபங்கை பூர்த்திசெய்யும் அம்பாறை மாவட்ட விவசாயிகள் இவ்வாறு மெத்தனப்போக்குடன் இருப்பதானது பிற்காலத்தில் பாரிய உணவு நெருக்கடியை உண்டாக்கும் வாய்ப்பிருக்கிறது. விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க பள்ளிவாசல்கள் ஊடாகவும், பொலிஸாரின் உதவியுடனும் பல்வேறு அறிவுறுத்தல்களை செய்துள்ளோம். உழவுத்தேவைகளுக்காக தினமும் தனியான வரிசையமைத்து உழவுஇயந்திரங்களுக்கு எரிபொருள் வழங்கப்படுகிறது. கிராம சேவகர் ஊடக எரிபொருள் அட்டைகளை வழங்கியும், தாங்கிகளுக்கு முழுமையான அளவு எரிபொருள் வழங்கியும் 5-10 சதவீதமான நிலங்கள் மட்டுமே இப்போது உழுதுள்ளனர். காலம் கடந்து விவசாயம் செய்வதனால் பயிர்களுக்கு அரக்கொட்டியடித்து நஷ்டம் உண்டாகும் நிலை ஏற்படும் என சம்மாந்துறை பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எஸ்.எம். நவாஸ் தெரிவித்தார்.
சம்மாந்துறை நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் கருத்து வெளியிட்ட அவர், சம்மாந்துறை பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைகளை துரிதப்படுத்தி விவசாயத்தை மேம்படுத்த சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் விவசாய அமைப்பு பிரதிநிதிகளை அரச அதிபர் தலைமையில் சந்தித்து கலந்துரையாடல் நடத்தி கடந்த முதலாம் திகதி நீர்விநியோகம் செய்வதென்றும் 10ம் திகதிக்கு முன்னர் விதைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் எடுத்தோம். அதனடிப்படையில் கடந்த முதலாம் திகதி முதல் நீர்ப்பாசன திணைக்களம் நீர்விநியோகத்தை மேற்கொண்டிருந்தும் எரிபொருள் இல்லாத காரணங்களை காட்டி விதைப்பு நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ளவில்லை. அதன் காரணமாக விவசாயிகளின் வேண்டுகோளின் பிரகாரம் நீர்விநியோகத்தை தடைசெய்துள்ளோம்.
மீளவும் கடந்த நான்காம் திகதி மீண்டும் கூட்டமொன்றை கூட்டி கலந்துரையாடி கடந்த ஐந்தாம் திகதி முதல் மீள நீர் விநியோகம் செய்ய தீர்மானித்தோம். அதனிடையே போதியளவு மழை கிடைத்தமையினால் நீர் விநியோகத்தில் எவ்வித குறைபாடுகளுமின்றி எந்த நேரத்திலும் நீரை விநியோகிக்க தயாராக உள்ள சூழ்நிலையிலும் கூட வெயில்காலம் என்றபடியினால் குடிநீர், விவசாயம், கரும்பு செய்கைக்கு போதுமான நீர் மட்டுமே கைவசம் உள்ளது. எரிபொருள் பெற்றுக்கொள்வதில் உள்ள பிரச்சினைகள் காரணமாக விதைப்பு நடவடிக்கைகள் இன்னும் ஆரம்பிக்கப்படாமல் இருப்பது பின்நாட்களில் பல்வேறு சிக்கல்களை தோற்றுவிக்கும் வாய்ப்புள்ளது. ஒருசிலருக்காக மட்டும் நீரை திறந்துவிட்டு நீரை வீண்விரயம் செய்யமுடியாத நிலை நீர்ப்பாசன திணைக்களத்திற்கு உள்ளது.
24 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட சம்மாந்துறை பிரதேசத்தில் விவசாயிகளும், உழவு இயந்திரக்காரர்களும் சமூகநல சிந்தனையுடன் செயற்பட்டு மக்களின் பசியாற்றும் விவசாயத்தின் தேவையறிந்து உடனடியாக விதைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும் எரிபொருள் பிரச்சினைகளை தீர்க்க எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுடன் பேசியதில் வீடுகளில் எரிபொருள் சேமிக்கப்டுவதனாலையே இந்த நிலை உள்ளதாக தெரிவிக்கின்றனர். மட்டுக்கு மட்டாக நீர் கைவசமிருப்பதனால் விவசாயிகள் கால அட்டவணையை சரியாக பயன்படுத்தி உடனடியாக விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
0 comments :
Post a Comment