'பிரதமர் இராஜினாமா’! 1953 ஹர்த்தாலும் - 2022 போராட்டமும்!



ஆர்.சனத்-
லங்கை அரசியல் வரலாற்றில் 1953 ஆகஸ்ட் 12 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பூரண ‘ஹர்த்தால்’ அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் நடைபெற்ற முதலாவது பாரிய ‘ஹர்த்தால்’ நடவடிக்கையாகவும் இதுவே கருதப்படுகின்றது.
 
இலங்கையில் அப்போது ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியே நிலவியது. டட்லி சேனாநாயக்க பிரதம அமைச்சராக பதவி வகித்தார்.
மக்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டுவந்த அரிசி உட்பட பிரதான பொருட்களின் விலைகள் திடீரென எகிறின. அரிசி விலையேற்றமானது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அரசுக்கு எதிராக தன்னெழுச்சி போராட்டமும் வெடிக்க ஆரம்பித்தது. டட்லி சேனாநாயக்க தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
மக்கள் போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் லங்கா சமசமாஜக்கட்சி, கம்யூனிஸ் கட்பட உட்பட இடதுசாரி கட்சிகள் 1953 ஆகஸ்ட் 12 ஆம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தன. இதன்படி இலங்கை முற்றாக முடங்கியது. ஹர்த்தாலுக்கு மத்தியில் சிற்சில வன்முறைச் சம்பவங்களும் பதிவாகின.
மக்கள் எழுச்சிக்கு அஞ்சி, ஐ.தே.க. அரசின் அமைச்சரவைக்கூட்டம்கூட, நடுக்கடவில் கப்பலில் இடம்பெற்றுள்ளது. இலங்கையில் அமைச்சரவைக் கூட்டம் கப்பலில் நடந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
அவசரகால விதிகள் அமுல்படுத்தப்பட்டு, இராணுவம் களமிறக்கப்பட்டது. ஒரு நாள் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும் சில நாட்கள் அது தொடர்ந்தது. உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகின. சொத்துகளுக்கு சேதமும் விளைவிக்கப்பட்டன.
 
தமது குடியுரிமை பறிக்கப்பட்டு, வீடற்றவர்களாகவும், நாடற்றவர்களாகவும், உரிமையற்றவர்களாகவும் ஆக்கப்பட்டதால் ஐ.தே.க. ஆட்சிமீது மலையக அரசியல் தலைவர்களும், மக்களும் அப்போது கடும் அதிருப்தியில் இருந்துள்ளனர். ஹர்த்தாலுக்கும் பங்களிப்பை வழங்கினர் எனக் கூறப்படுகின்றது.
 
மக்களின் வெகுஜன எழுச்சி - ஹர்த்தாலின் எதிரொலியாக 1953 ஒக்டோபர் 12 ஆம் திகதி பிரதமர் டட்லி சேனாநாயக்க இராஜினாமா செய்தார். புதிய பிரதமராக சேர் ஜோன் கொத்தலாவல பதவியேற்றார். ஐ.தே.க. ஆட்சி தொடர்ந்தாலும் 1956 தேர்தலில் அக்கட்சி படுதோல்வியை சந்தித்திருந்தது.
சுமார் 69 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் இன்று நாடு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. சுகாதாரம், போக்குவரத்து, ரயில்வே, மின்சாரம், கல்வி உட்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழுக்கள் அடங்கிய சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இன்றைய ஹர்த்தாலுக்குத்தமது பூரண ஆதரவை வழங்கியுள்ளன. அரச நிர்வாகக் கட்டமைப்பும் போராட்டத்துக்கு நேசக்கரம் நீட்டியுள்ளன.
தொடர் விலையேற்றமும், வரிசை யுகமுமே மக்கள் மத்தியில் அரச எதிர்ப்பு அலையை உருவாக்கியது. தன்னெழுச்சி போராட்டம்வரை அழைத்துச்சென்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக நிற்கின்றனர். மக்களின் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தே ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
 
53 இல் போன்று கோட்டா அரசால் அண்மையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இராணுவமும் களமிறக்கப்பட்டது. கடும் எதிர்ப்பால் அந்த முடிவு பின்வாங்கப்பட்டது.
நேற்று முதல் நாடாளுமன்ற வளாகமும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. ‘ஹொரு கோகம’வும் உதயமாகியுள்ளது. இதனால் அன்று அமைச்சரவைக் கூட்டம் கடலில் நடந்ததுபோல் அல்லாமல், பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலேயே நாடாளுமன்ற அமர்வை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஹர்த்தாலின் எதிரொலியாக அன்று பிரதமர் பதவி விலகினார். அப்போது நாடாளுமன்ற ஆட்சி முறை. இப்போது ஜனாதிபதி ஆட்சிமுறை. எனவே, ஜனாதிபதி பதவி விலகுவாரா என்பதே கேள்வி.
 
மக்கள் போராட்டத்தின் பின்னர் 56 இல் நடைபெற்ற தேர்தலில் அப்போதைய அரசு மண்கவ்வியது. எனவே, தேர்தலொன்று நடத்தப்படுமானால் இந்த அரசு படுதோல்வி அடையும் என்பதையே மக்கள் எதிர்ப்பு அலை புடம்போட்டு காட்டுகின்றது. அன்று ஆட்சியில் இருந்த ஐ.தே.கவுக்கு சபையில் இன்று ஒருவரே உள்ளார். அக்கட்சி ஹர்த்தாலை ஆதரிக்கின்றது.
அன்று இடதுசாரிக் கட்சிகள் பலமாக இருந்தன. கொள்கை அடிப்படையில் செயற்படுகின்றன. இடதுசாரிகள் எனக் கூறிக்கொள்ளும் சிலர் இன்று கொள்கை மறந்து - ஆட்சி பீடத்துக்காக கோஷம் எழுப்புகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :