ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் '21'ஆவது திருத்தச்சட்டமூலம் தயார்!
'திங்கள் அமைச்சரவையில் முன்வைப்பு
'பஸிலின் எம்.பி. பதவியும் பறிபோகும் நிலை
" அரசமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் எதிர்வரும் திங்கட்கிழமை (23) அமைச்சரவையில் முன்வைக்கப்படும்." - என்று நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரான ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று முற்பகல் பதவிப்பிரமானம் செய்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, பிற்பகல் வேளையில் நீதி அமைச்சில், தமது கடமைகளை பொறுப்பேற்றார்.
அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே, 19 ஆவது திருத்தச்சட்டத்துக்கு புத்துயிர் கொடுப்பதற்காக 21 ஆவது திருத்தச்சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழியை வழங்கினார்.
" 19 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக ஜனநாயக முறைமை ஏற்படுத்தப்பட்டது. எனினும், 20 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக அது இல்லாது செய்யப்பட்டது. எனவே, அரசமைப்பில் மறுசீரமைப்பை ஏற்படுத்துவதற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படும். அதன்பின்னர் வெகுவிரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம்." - என்றும் விஜயதாச குறிப்பிட்டார்.
'19' இன் நிலை மீண்டும் ஏற்பட்ட பிறகு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டு, நாடாளுமன்ற ஆட்சிமுறைமை பலப்படுத்தப்படும்.
உயர்பதவி நியமனங்களுக்கான அரசியலமைப்பு பேரவை மீள ஸ்தாபிக்கப்படும். ஜனாதிபதி அமைச்சு பதவிகளை வகிப்பது தடைபடும்.
அதேவேளை, இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக தடை விதிக்கப்பட்டிருந்தது.
எனினும், இரட்டை குடியுரிமை உடைய பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதற்காக இந்த சரத்து 20 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக நீக்கப்பட்டது. பஸில் எம்.பியானார். அமைச்சரவையிலும் இடம்பிடித்தார்.
தற்போது 21 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக 'இரட்டை குடியுரிமை' தடை மீள அமுலாகும் என நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் பஸில் ராஜபக்சவின் எம்.பி. பதவியும் பறிபோகும் நிலை ஏற்படும்.
2015 பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கீதா குமாரசிங்க, 19 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இரட்டை குடியுரிமை உடையவர் என்பதால், உயர்நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக எம்.பி. பதவியை இழந்தார். அதே நிலை பஸிலுக்கு ஏற்படும் என்பதே நீதி அமைச்சரின் தர்க்கமாகும்.
அரசமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் அவசியம். எனவே, 'இரட்டை குடியுரிமை தடை' என்ற சரத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு பஸில் ராஜபக்சவின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவளிக்குமா என்ற வினாவும் எழுகின்றது.
0 comments :
Post a Comment