இது பற்றிய கடிதத்தில் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது, பாராளுமன்றத்தில் இல்லாத கட்சியாக எமது கட்சி இருந்த போதும் நாடு இன்று எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கான எமது ஆலோசனைகளை முன் வைப்பது ஒரு அரசியல் கட்சி என்ற வகையில் எமது கடமை என்ற வகையில் எமது ஆலோசனைகளை முன் வைக்கிறோம்.
அந்த வகையில் 21வது அரசியல் திருத்தம் சம்பந்தமாக எமது கட்சியின் கருத்துக்களாவன.
நிறை வேற்று ஜனாதிபதி முறைமையை ஒரேயடியாக நீக்காது அதில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். ஜனாதிபதியாக இருப்பவர் பாராளுமன்றத்துக்கு பதில் சொல்பவராக இருப்பார். ஜனாதிபதி ஒரு தீர்மானம் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை வாக்குகளால் கேள்விக்குட்படுத்த முடியும். அப்போது அது செல்லுபடியற்றதாக ஆகும். ஜனாதிபதி பதவியின் ஆயுட்காலம் நான்கு வருடங்களாகும். ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்குதலை முழுவதும் நீக்காமல் கொலை, கற்பழிப்பு, இனங்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்தல் போன்ற கிரிமினல் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது. ஒரு பாராளுமன்ற தேர்தல் நடந்த பின்னரே ஜனாதிபதி தேர்தல் நடை பெற வேண்டும். பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சியில் இருக்கும் ஒருவர் எதிர் கட்சிக்கு அல்லது எதிர் கட்சியில் உள்ளவர் ஆளுங்கட்சிக்கு மாறினால் அல்லது ஆதரவளித்தால் அவரது பாராளுமன்ற உறுப்புரிமைய ரத்து செய்ய கட்சிகளுக்கு முடியும். நாட்டில் ஒரு மதத்துக்கு மட்டும் சிறப்புரிமை வழங்காமல் சகல மதங்களும் சகல இனங்களும் சரி சமம் என்பது பிரகடனப்படுத்தப்பட வேண்டும். ஆங்கில மொழி நாட்டின் கல்வி மொழியாகவும் சிங்களம், தமிழ் இரண்டாம் மொழியாகவும் இருக்கும். இதுவே சர்வதேச நாடுகளுடன் போட்டியிடக்கூடிய புத்திஜீவிகளை உருவாக்கும். அத்துடன் பாடசாலைகளில் 1 முதல் 10 வரை முஸ்லிம் பாடசாலைகளில் அரபு மொழி மூன்றாவது கட்டாய பாடமாக்கப்பட வேண்டும். ஏனைய மாணவர்களுக்கு விருப்பத்துக்குரிய கற்பிக்கப்படும். மாகாண சபைகள் ஒன்பது என்றில்லாது ஐந்து மாகாண சபைகள் உருவாக்கப்பட வேண்டும். அவை:
மேற்கு, வடக்கு, தெற்கு, கிழக்கு, மத்தி என்பனவாகும்.
மத்தியுடன் ஊவா, சப்ரகமுவ, வடமத்தி இணைக்க முடியும். வட மேல் மாகாணத்தை மேல் மாகாணத்துடன் இணைக்க முடியும். உள்ளூராட்சி தேர்தலில் வட்டாரங்கள் குறைக்கப்பட்டு உறுப்பினர்கள் தொகை குறைக்கப்பட வேண்டும். தற்போதுள்ள இரண்டு வட்டாரங்களை ஒன்றாக இணைப்பதன் மூலம் குறைக்க முடியும்.
புதிதாக சில தேர்தல் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும். அவை, அக்கரைப்பற்று, காத்தான்குடி, கிண்ணியா என்பன உருவாக்கப்பட வேண்டும்.
அதே போல் திகாமடுள்ள என்ற பெயரை ரத்து செய்து அம்மாவட்டத்தை இரண்டு தேர்தல் மாவட்டங்களாக்க வேண்டும். 1. அம்பாரை மாவட்டம். 2. கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் தொகுதிகளை இணைத்து கல்முனை தேர்தல் மாவட்டம்.
சமயத்தலைவர்கள் தமது சமய சீருடையுடன் அரசியல் மேடைகளில் அமர்வது, சீருடையுடன் பகிரங்க அரசியல் பேசுவது, சீருடையுடன் பாராளுமன்றம் போன்ற சபைகளின் உறுப்பினராக செல்வது தடை செய்யப்பட வேண்டும்.
பிறப்பால் இலங்கையை சேர்ந்த ஒருவர் இன்னொரு நாட்டின் பிரஜா உரிமை பெற்ற நிலையில் இலங்கை பிரஜா உரிமையையும் அவர் கொண்டிருந்தால் அவர் தேர்தல்களில் போட்டியிடுவதை தடை செய்வது ஜனநாயகத்துக்கு முரணானதாகும்.
நமது நாட்டிலிருந்து ஐரோப்பாவில் குடியேறி இரட்டை பிரஜா உரிமை கொண்ட பலர் அந்நாடுகளில் தேர்தலில் போட்டியிடுவதை மகிழ்வாக பார்க்கும் நாம் இதனை நம் நாட்டில் தடுப்பது முறையல்ல. இத்தகைய இரட்டை பிரஜா உரிமை கொண்டோர் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்வதை தடை செய்யலாமே தவிர தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்யக்கூடாது.
இனங்களின் தனியார் திருமண சட்டங்களில் யாரும் கைவைக்க இடமளிக்க கூடாது. முஸ்லிம் திருமண சட்டத்தில் எத்தகைய திருத்தமும் கூடாது என்பதை எமது கட்சி தொடர்ந்து சொல்லி வருகிறது. இனங்களுக்கிடையில் கசப்பை உருவாக்கும் இவ்விடயத்தை யாரும் பேசுவது தடைசெய்யப்பட வேண்டும். முஸ்லிம் திருமண சட்டத்தில் எதையும் நீக்காமல் ஜம்மிய்யத்துல் உலமாவின் அனுமதியுடன் சில விசயங்களை அதில் சேர்க்க முடியும்.
0 comments :
Post a Comment