அடுத்த 24 மணிநேரத்துக்குள் அரசியலில் அதிரடி மாற்றங்கள்!



ஆர்.சனத்-

அடுத்த 24 மணிநேரத்துக்குள் அரசியலில் அதிரடி மாற்றங்கள்!
பிரதி சபாநாயகர் பதவியை மீண்டும் இராஜினாமா
மஹிந்த ராஜபக்சவும் பதவி விலக முடிவு
போராட்டங்களை கட்டுப்படுத்த வியூகம் வகுப்பு

பிரதி சபாநாயகராக நேற்று (05) தெரிவுசெய்யப்பட்ட, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அப்பதவியை மீண்டும் இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பான 'பதவி துறப்பு' கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இன்று (06) அவர் அனுப்பி வைத்துள்ளார்.
பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்து, அப்பதவிக்கே மீண்டும் தெரிவாகி, 24 மணிநேரத்துக்குள் மீண்டுமொருமுறை இராஜினாமா செய்யும் முடிவை அவர் எடுத்துள்ளமையானது, அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பல கோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுடனான, 'அரசியல் உறவை' ஏப்ரல் 05 ஆம் திகதி ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முறித்துக்கொண்டது. நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் முடிவையும் எடுத்தது.
இதனையடுத்து சுதந்திரக்கட்சி உறுப்பினரான ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்தார். எனினும், அவரின் பதவி துறப்பு கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை. ஜனாதிபதி விடுத்த கோரிக்கையின் பிரகாரம் ஏப்ரல் 30 ஆம் திகதிவரை அப்பதவியில் நீடிக்க தீர்மானித்தார்.
பிரதி சபாநாயகரின் இராஜினாமாக் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்ற தகவலை மே 04 ஆம் திகதியே ஜனாதிபதி, சபாநாயகருக்கு தெரியப்படுத்தினார்.
இதன்பிரகாரம் மே 05 ஆம் திகதி புதிய பிரதி சபாநாயகரை தெரிவுசெய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்டது.
இரகசிய வாக்கெடுப்பில் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவுக்கு 148 வாக்குகளும், இம்தியாஸ் பாக்கீர் மாக்காருக்கு 65 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. 3 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. 8 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்ல.
ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவுக்கு ஆதரவு வழங்கவே பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் முடிவெடுத்திருந்தது. அவரின் பெயரை நிமல் சிறிபாலடி சில்வா முன்மொழிவதற்கும், அதனை ராஜித சேனாரத்ன வழிமொழிவதற்கும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும், ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது ஆதரவை ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவுக்கு வழங்கியதால், ஐக்கிய மக்கள் சக்தி இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை களமிறக்கியது.
ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவுக்கு சஜித் அணி ஆதரவு வழங்கியிருந்தால், அவருக்கு எதிராக சித்தார்த்தனை களமிறக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டிருந்தது. இம்தியாஸ் களமிறக்கப்பட்டதால் அவரை ஆதரிக்க முடிவெடுக்கப்பட்டது.
பிரதி சபாநாயகருக்கு, ஆளுங்கட்சி ஆதரவு வழங்கியமை பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது எதிரணியினரும் கடும் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பதவி துறக்கும் முடிவை ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய எடுத்துள்ளார். அதற்கான காரணங்களை பட்டியலிட்டு ஜனாதிபதிக்கு கடிதமும் அனுப்பியுள்ளார்.

மஹிந்த ராஜினாமா?
அதேவேளை, இலங்கை அரசியலில் அடுத்த 24 மணிநேரத்துக்குள் முக்கிய சில மாற்றங்கள் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், போராட்டங்களும் உக்கிரமடைந்தது. நாடாளுமன்றம்கூட சுற்றிவளைக்கப்பட்டது. இந்நிலையில் ஜனாதிபதியால் இன்று மாலை அவசரமாக அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டது.
 
இதன்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை சமாளிப்பது குறித்து ஆராயப்பட்டது. அந்தவகையில் பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதற்கு மஹிந்த ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதியும் கோரிக்கை விடுத்ததாக தெரியவருகின்றது. இடைக்கால அரசு சம்பந்தமாகவும் அமைச்சரவைக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எதிரணிகளின் பங்களிப்பு இல்லாமல், புதிய பிரதமரின்கீழ், இடைக்கால அரசு அமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, மக்களின் தன்னெழுச்சி போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆராயப்பட்டுவருவதாக தகவல்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :