இவ்வாறு காரைதீவில் நடைபெற்ற முதலாவது சத்சங்கத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ராமகிருஷ்ண மிஷனின் இலங்கைக்கான தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தாஜி தெரிவித்தார்.
ராமகிருஷ்ண மிஷனின் ஏற்பாட்டில் காரைதீவு ஸ்ரீ சாரதா சிறுமியர் இல்லத்தில் முதல்தடவையாக சத்சங்கம் சனிக்கிழமையன்று(28) மாலை நடாத்தப்பட்டது.
இந் நிகழ்வுக்கு, கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜி மகராஜ் , மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் உதவிப் பொது மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜீ மகராஜ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
முதலில் சுவாமிகளால் பஜனை மற்றும் சொற்பொழிவுகளுடன் சத்சங்கம் நடாத்தப்பட்டது.
அங்கு இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் உதவி மேலாளர் சுவாமி நீலமாதவானந்தா மஹராஜ் பஜனை பாடி சிறப்புரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து இலங்கைக்கான இ.கி.மிசன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தாஜி உரையாற்றுகையில்.
இன்று இருக்கின்ற சூழலில் நாங்கள் மனதை ஒருமுகப்படுத்த வேண்டுமாக இருந்தால் சத்சங்கத்தில் ஈடுபடவேண்டும்.
சத்சங்கம் என்பது நல்லோர் சேர்க்கை என்பதாகும். இதைவிட பல ஆழமான கருத்துக்கள் இருக்கின்றன.
இல்லறத்தில் இருப்பவன் முடிந்தளவு சத்சங்கத்தில் ஈடுபட வேண்டும். ஏனென்றால் சம்சார வாழ்க்கையில் பல கவலைகள் தொந்தரவுகள் இடையூறுகள் கடவுளை வழிபடுவதற்கு நேரம் இல்லாமல் இருக்கும். அதற்காக சும்மா கடவுளை வழிபடாமல் இருக்ககூடாது .பின்னர் வருந்த வேண்டிவரும்.
சத்சங்கம் என்பது நல்லவர்களுடன் தொடர்பு நல்ல நிகழ்வுகளுடன் நல்ல எண்ணங்களை வளர்ப்போம் என்றெல்லாம் பொருள்படும் .
மனதுக்கு ஒரு பயிற்சி வழங்க வேண்டும். ஐம்புலன்களையும் பின்னால் நின்று இயங்குவது மனம். இந்த மனம் ஒருமைப்பட வேண்டுமானால் ஜம்புலன்களுக்கு பல பயிற்சிகளை வழங்க வேண்டும் .
அதில் ஒன்று "லிகித ஜபம் "என்று சொல்லப்படுகிறது. இறைவனின் நாமத்தை எழுதி படித்தல். எழுதுகின்ற பொழுது ஐந்து புலன்களின் மூன்று குணங்கள் ஒற்றுமை படுகின்றது. எனவே இந்த மனத்தை ஒருமுகப்படுத்த வேண்டுமாக இருந்தால் இந்த சத்சங்கத்தில் ஈடுபடவேண்டும்.
பகவான் ராமகிருஷ்ணர் கூறுகின்றார் "யாத்திரையை போய் வந்தால் அது பற்றிய விடயங்களை ஏனையவர்களுடன் கூற வேண்டும் .மீட்க வேண்டும்.மாடு அசை போடுவது போல அங்கு இடம்பெற்ற நிகழ்வுகளை இங்கு கூற வேண்டும்."
ஒரு சத்சங்கத்தில் ஈடுபடுபவர்கள் இங்கு இடம்பெறும் பல அரிய கருத்துக்களை மற்றும் விடயங்களை ஏனையோருக்கும் சொல்ல வேண்டும்.
நாங்கள் திருப்பதி அல்லது கதிர்காமம் சென்று வந்தால் உறவினர்களுக்கு அயலவர்களுக்கு பிரசாதம் வழங்குவது போன்று அங்கு இடம்பெற்ற விடயங்களையும் கூறவேண்டும் .
வாரம் ஒரு முறையாவது சத்சங்கம் செய்தால் நல்லது.
இன்று மனதை குழப்பம் அடையச் செய்ய பல உபகரணங்கள் வர்த்தக உலகில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
அதற்கு நாங்கள் பலியாக கூடாது .நல்ல எண்ணங்களை விதைத்தால் எமதுது வாழ்க்கை சிறப்பாக அமையும் .
ஆன்மீகத்தை அத்திபாரமாக கொண்டு கட்டி எழுப்பபட்டதே ராமகிருஷ்ண மிஷன். ஆனால் வேறு நோக்கத்திலே ஆரம்பிக்கின்ற கம்பெனிகள் போன்று அல்லாமல், ஆன்மீக அத்திவாரத்தில் மிஷனை ஆரம்பித்த காரணத்தினால் நூற்றி இருபத்தி ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக பயணித்து வருகின்றது.
சுவாமி விவேகானந்தரால் 1897 மே மாதம் முதலாம் திகதி இந்த மிஷன் ஆரம்பிக்கப்பட்டது. உலகளாவிய ரீதியிலே பல சேவைகளை வழங்கிவருகிறது.
அறவழியில் நின்று பொருள் ஈட்டினால் சந்தோஷம் நிலைக்கும். நாங்கள் தர்ம வழி நின்று வாழ முயற்சிக்க வேண்டும். அறம் என்றால் தர்மம். தர்மத்தினை கடைபிடித்தால் அது எங்களை காப்பாற்றும். தர்மம் தலைகாக்கும் என்று சொல்வார்கள். எனவே தர்மத்தின் பால்நின்று நாங்கள் வாழ்வாங்கு வாழ சத்சங்கங்கள் உதவுகின்றன .
இதனை இங்கு மாத்திரமல்ல வாரம்தோறும் வீடுகளிலும் நீங்கள் நிறைய கடைப்பிடிக்கலாம். இந்து சமயத்தின் பால் நின்று ஆன்மீக வழி முறையில் எமது வாழ்க்கையை மாற்றிக் கொண்டால் உண்மையில் நமது வாழ்வு சிறக்கும்.
திருக்குறளில் அறம் பொருள் இன்பம் வீடு என்று சொல்லப்பட்டாலும் அறம் பொருள் இன்பத்தை பற்றி தான் அழகாகச் சொல்கிறார் திருவள்ளுவர் .இது மூன்றையும் ஒழுங்காக பின்பற்றினால் வீடுபேறு இலகுவாகக் கிடைக்கும் .இதை விட்டு பிழையான வழியில்பொருள் ஈட்டினால் இன்பம் கிடைக்காது . நிலைக்காது.
எனவே அறத்தின் வழி நின்று பொருளீட்ட வேண்டும் என்று சொல்லப்படுகின்றது. இதனையே மகாபாரதம் ராமாயணம் போன்ற இதிகாச புராணங்கள் அழகாக சொல்லுகின்றன. எனவே அற வழியில் நின்று தர்மம் செய்து வாழ முயற்சிக்க வேண்டும் ஓம் சாந்தி சாந்தி. என்றார்.
நன்றி உரையை இ.கி.மிஷன் அபிமானி சிவானந்தா மாணவன் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா நிகழ்த்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை இ.கி.மிஷன் பழைய மாணவன் கு.ஜெயராஜீ மேற்கொண்டார்.
நிந்தவூர் சிவமுத்துமாரியம்மன் அறநெறி மாணவர்கள் மற்றும் இ.கி.மிஷன் அபிமானிகள் பலரும் கலந்து கொண்டனர்.
வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு
0 comments :
Post a Comment