உலகில் ஆளும் அரசாங்கத்திற்கெதிராக நிறைய போராட்டங்கள் நடைபெற்று ஆட்சிமாற்றங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலனவை அரசியல் போராட்டங்கள். ஒன்றில் ஆட்சியாளர்கள் கொடூங்கோலானவர்களாக இருப்பார்கள் அல்லது மக்களின் ஆதரவு இல்லாமல் குறுக்கு வழியில் அதிகாரத்திற்கு வந்தவர்களாக இருப்பார்கள்; சிலவேளை ஜனநாயக விழுமியங்களைப் பின்பற்றாதவர்களாக இருப்பார்கள். இவற்றிற்கெல்லாம் மாறுபட்டதுதான் இன்று இலங்கையில் நடைபெறும் போராட்டங்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஸ்தாபக செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை எல் எஸ் ஹமீட் தெரிவித்துள்ளார்.
வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், இலங்கை தற்போதைய ஆட்சியாளர்கள் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்கவில்லை. மக்களின் அபரிமித ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தவர்கள். பெரும்பான்மை சமூகத்தவர்களைப் பொறுத்தவரை கொடுங்கோலர்களுமல்ல. இங்கைப் போராட்டமென்பது முழுக்க, முழுக்க வயிற்றுப் பசியை அடிப்படையாக கொண்ட போராட்டம். பெற்றோல் இல்லை; டீசல் இல்லை; லாம்பெண்ணை இல்லை; சமைக்க காஸ் இல்லை; விவசாயிக்கு உரமில்லை. இல்லை, இல்லை. நாட்டில் இருப்பதெல்லாம் “இல்லை” மாத்திரமே; என்கின்ற நிலை. இந்நிலையில்தான் தாம் ஆசையோடு கொண்டுவந்த அரசாங்கத்தையே மக்கள் வெறுக்கிறார்கள். மாறாக, இது ஒரு அரசியல் போராட்டமல்ல. இப்போராட்டத்திற்கு சஜித்மீதுள்ள விருப்பமோ, ரணில்மீதுள்ள விருப்பமோ அல்லது அநுரமீதுள்ள விருப்பமோ காரணமல்ல.
வயிற்றுப்பசி நீங்கவேண்டும். “இல்லை” எனும் நிலை இல்லாமலாக வேண்டும். எனவே, இந்தப் பின்னணியில் தான் ரணிலின் நியமனம் பார்க்கப்பட வேண்டும். இன்று ராஜபாக்சாளின் பிரதான அரசியல் எதிரி சஜித். சஜித்தைப் பிரதமராக்குவதில் துளியளவும் அவர்களுக்கு விருப்பம் இருக்கமுடியாது. ஆனாலும் மக்களின் கோபத்தைத் தணிக்க, மக்களின் கணிசமான ஆதரவைப்பெற்ற பிரதான எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் உள்ளூர விருப்பமில்லாதபோதும் சஜித் அழைக்கப்பட்டார். ஆனால் சஜித்தின் பிரதான நிபந்தனையான ஜனாதிபதிப் பதவியையே பலி கொடுக்கும் நிலையை நிச்சயம் அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது; என்பது எதிர்பார்க்கக்கூடியதே!
மறுபுறம் இன்று மக்களின் முழுமையான எதிர்ப்பைச் சந்தித்துள்ள, பதிவியில் இருந்து வெளியேறியே ஆகவேண்டும்; என மக்கள் எதிர்பார்க்கின்றவர் ஜனாதிபதியா இருக்க, நிபந்தனையின்றி அவரின்கீழ் பிரதமர் பதவியை சஜித் ஏற்றுக்கொள்வதை மக்களும் பெரும்பாலாக விரும்பமாட்டார்கள். அது சஜித்திற்கு அரசியல் தற்கொலையாக முடிவதோடு ராஜபக்சாக்களை மீண்டும் பலப்படுத்தவே உதவும். அதையும்தாண்டி, அவர் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டாலும் 20 இனால் மேலும் அதிகரிக்கப்பட்ட அதிகாரத்தைக்கொண்ட ஜனாதிபதி அவரை சுதந்திரமாக இயங்கவிடுவாரா? என்ற கேள்வி இருக்கின்றது. அதேநேரம், சஜித் ரணிலைப்போன்று பொருளாதாரத்துறையில் விற்பன்னம் நிறைந்தவரா? சர்வதேசத் தொடர்புகள் உள்ளவரா? என்ற கேள்விகள் உள்ள நிலையில் பாராளுமன்றத்தில் தன்னிடம் சொந்தப் பெரும்பான்மையில்லாமல் ஒன்றில் அந்தப் பதினொரு கட்சிகளின் தயவில் அல்லது பொதுஜன பெரமுனவில் தயவில் அல்லது இரு தரப்பினதும் தயவில் ஆட்சி செய்யவேண்டிய நிலையில் சுதந்திரமாக இயங்கமுடியுமா? என்ற கேள்வியும் இருக்கின்றது.
இந்நிலையில், இன்று நாட்டுப் பொருளாதாரம் இருக்கின்ற அதல பாதாளநிலையில் இருந்து அவரால் மீட்சியைக்கொண்டுவரமுடியுமா? அவ்வாறு முடியாமல்போனால் அது சஜித்தையும் அவரது கட்சியையும் பாரதூரமாக பாதிப்பது மட்டுமல்ல, நாட்டிற்கு பலமான மாற்று அணி இல்லாத இக்கட்டான நிலை தோன்றும். இவ்வாறான சூழ்நிலையில் புதிய அணியொன்று அல்லது பல புதிய அணிகள் கிழம்பி வரலாம். அவை வெற்றிபெறுமா? அவை எவ்வளவு தூரம் நாட்டை முன்னோக்கிக் கொண்டசெல்லும்? என்ற கேள்விகளும் எழுப்பப்படாமல் இருக்க முடியாது.
இந்நாட்டிற்கு ஜே வி பி ஒரு மாற்றுத் தீர்வாக இருக்கமுடியாது; என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். அது தொடர்பாக தேவையானால் இன்னுமொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்க்கலாம். மறுபுறம், இந்த சவால்கள் அனைத்தையும் தாண்டி, பிரதமர் பதவியை சஜித் பாரமெடுத்து நாட்டை ஒரளவு முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்கிறார்; எனத் தெரிந்தால் பொருத்தமான இடத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை உருவாக்கி சஜித்தின் பதவிக்கு ஜனாதிபதி ஆப்பு வைக்கலாம். பெரும்பான்மை இல்லாத சஜித்திற்கு ஆப்பு வைக்க, அவருக்கு ஆதரவளிக்கும் பெரமுனவோ அல்லது 11 கட்சியினரோ துணைபோகத் தயங்க மாட்டார்கள். அவர்கள் எல்லோரினதும் முகாம் ஒன்றுதான். எனவே, இன்றைய நிலையில் சஜித் நிபந்தனைகள் எதுவுமின்றி பிரதமர் பதவியைப் பாரமெடுப்பது நாட்டிற்கு முன்னேற்றத்தைத் இன்றைய பிரச்சினைகளைத் தீர்க்குமா? என்பது சந்தேகமானதே. இந்நிலையில் சஜித்தின் பிரதமர் பதவி தொடர்பான தீர்மானம் மிகச்சரியானதே என்று தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment