நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி, ஜனாதிபதிக்கு அதிருப்தி தெரிவிக்கும் பிரேரணையை விவாதத்துக்கு எடுப்பதற்காக சபையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு - ஆதரவாகவே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வாக்களித்தது.
இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகிய இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஆளுந்தரப்புக்கு எதிராகவே தமது வாக்குகளைப் பயன்படுத்தினர்.
நாடாளுமன்றம் இன்று (17) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
பிரதி சபாநாயகருக்கான தேர்வு முடிவடைந்த பின்னர், ஜனாதிபதிமீது அதிருப்தி தெரிவிக்கும் பிரேரணைமீது விவாதம் நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி, ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையை விவாதத்துக்கு எடுக்கும் யோசனையை அவர் முன்வைத்தார். இதனை எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல வழிமொழிந்தார்.
இதற்கு சபை முதல்வர் தினேஷ் குணவர்தன கடும் எதிர்ப்பை வெளியிட்டார். பிரிதொரு நாளில் இதனை விவாதத்துக்கு எடுக்கலாம், நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி, விவாதத்துக்கு எடுப்பதை அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்தார்.
நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தும் யோசனைமீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதன்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இலத்திரனியல் முறையிலேயே வாக்களிப்பு இடம்பெற்றது. இதன்போது சுமந்திரனின் யோசனைக்கு ஆதரவாகவே இ.தொ.கா. எம்.பிக்கள் இருவரும் வாக்களித்தனர்.
எனினும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மருதபாண்டி ராமேஸ்வரனின் பெயருக்கு முன்னால் 'நோ' அடையாளம் காண்பிக்கப்பட்டது. பின்னர், சபாநாயகர், ரமேஷிடம் வினவினார். அவர் யோசனைக்கு ஆதரவு என குறிப்பிட்டார். ஆதரவாகவே அவரின் வாக்கு பதிவானது.
நாடாளுமன்றத்தில் இலத்திரனியல் வாக்கெடுப்பின்போது, அவ்வாறான வழு இடம்பெறுவது வழமை. அதனை சபாபீடம் அவ்வேளையில் சரிசெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இலத்திரனியல் வாக்கெடுப்பு முடிவில் ரமேஷின் பெயருக்கு முன்னால் 'நோ' என்ற சொற்பதம் இருந்ததால், அவர் அரசுக்கு ஆதரவு, ஜீவன் எதிர்ப்பு என்ற தொனியில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. இருவரும் ஒரே நிலைப்பாட்டில்தான் வாக்களித்தோம் என்பதை ஜீவனும் தமதுரையில் உறுதிப்படுத்தினார்.
0 comments :
Post a Comment