சர்வக்கட்சி அரசுக்காக கட்சிகளை ஒன்றிணைக்கும் மகாசங்கத்தினரின் முயற்சி தோல்வி.
கூட்டத்தை புறக்கணித்தது மொட்டு கட்சி.
'கோட்டா கோ ஹோம்' என்பதில் சஜித், அநுர உறுதி.
ஜனாதிபதியுடன் பஸில் அவசர சந்திப்பு.
04 ஆம் திகதி பலப்பரீட்சை! பிரதி சபாநாயகராக அநுர யாப்பா?.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் நீடிக்கும்வரை, சர்வக்கட்சி இடைக்கால அரசில் இணையமுடியாது என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும், தேசிய மக்கள் சக்தியும் மகா சங்கத்தினரிடம் எடுத்துரைத்துள்ளன.
இதனால் சர்வக்கட்சி இடைக்கால அரசுக்காக, பிரதான எதிர்க்கட்சிகளை பொது நிலைப்பாட்டுக்கு கொண்டுவரும் ஆரம்பக்கட்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. எனினும், ஏதோவொரு அடிப்படையில் கட்சிகளை இணக்கப்பாட்டுக்கு கொண்டுவருவதற்காக, இரண்டாம் கட்ட சந்திப்பை நடத்துவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், மகா சங்கத்தினருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்றிரவு (30) இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. சர்வ மத தலைவர்களும், சிவில் செயற்பாட்டாளர்களும் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்திருந்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ரஞ்சித் மத்தும பண்டாரவும், தேசிய மக்களின் சார்பில் விஜித ஹெரத்தும், 43 ஆம் படையணியின் சார்பில் சம்பிக்க ரணவக்கவும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் மஹிந்த அமரவீரவும், 11 கட்சிகளின் பிரதிநிதிகளும் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் சிலரும் பங்கேற்றிருந்தனர்.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவில்லை என்ற போதிலும் அக்கட்சியின் பிரதிநிதியொருவர் வருகை தந்திருந்தார். ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் மேற்படி சந்திப்பில் எவரும் பங்கேற்கவில்லை. மொட்டு கட்சியின் தவிசாளர் பீரிசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
மூன்று பௌத்த பீடங்களையும் சேர்ந்த மகாசங்கத்தினரால் வெளியிடப்பட்ட பிரகடனம் சம்பந்தமாக, கட்சி பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. சர்வக்கட்சி இடைக்கால அரசமைக்க ஓரணியில் திரளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்பின்னர் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், தமது கட்சிகளின் நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தினர்.
ஜனாதிபதி பதவியில் கோட்டாபய ராஜபக்ச நீடிக்கும் நிலையில், புதிய பிரதமரின்கீழ் சர்வக்கட்சி இடைக்கால அரசமைக்க 11 கட்சிகளின் பிரதிநிதிகள் தமது ஆதரவை தெரிவித்தனர்.
ஜனாதிபதி பதவியில் கோட்டாபய ராஜபக்ச நீடிக்கும்வரை, சர்வக்கட்சி இடைக்கால அரசு பொறிமுறை குறித்து சாதகமான பதிலை வழங்கமுடியாது, எனினும், மகாசங்கத்தினரின் பிரகடனம் சம்பந்தமாக கட்சியில் மீண்டும் கலந்துரையாடப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ சர்வக்கட்சி இடைக்கால அரசு என்பதைவிடவும் தேர்தலொன்றுக்கு சென்று, புதிய ஆட்சியை ஏற்படுத்துவதே சிறந்தவழியென.” தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
“ சர்வக்கட்சி இடைக்கால அரசுக்கு, எதிரணிகள் உடன்படாவிட்டால், இணங்கும் தரப்புகளை இணைத்துக்கொண்டாவது பயணிக்க வேண்டும்.” என வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என பிரதான எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை, மகாநாயக்க தேரர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என மகா சங்கத்தினர் சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்டனர்.
கோட்டா - பஸில் சந்திப்பு
இதற்கிடையில் ஜனாதிபதிக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் (29) இரவு இடம்பெற்றுள்ளது. மொட்டு கட்சியின் சார்பில் பஸில் ராஜபக்ச, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், சாகர காரியவசம் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
மகாநாயக்க தேரர்களால் ஏப்ரல் 04 ஆம் திகதி வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் உள்ள விடயங்களை அமுல்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகி, இடைக்கால அரசுக்கு வழிவிட வேண்டும் என்பது கூட்டறிக்கையில் இடம்பெற்ற பிரதான விடயமென்பது குறிப்பிடத்தக்கது.
பிரதி சபாநாயகர் யார்?
அதேவேளை, " பிரதி சபாநாயகர் பதவிலிருந்து ஏப்ரல் 30 முதல் முழுமையாக விலகிவிட்டேன். இது தொடர்பில் ஜனாதிபதிக்கும், சபாநாயகருக்கும் உரிய வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. " - என்று பிரதி சபாநாயகர் பதவியை வகித்த ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
“ ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, அரசுக்கான ஆதரவை கடந்த 5 ஆம் திகதி விலக்கிக்கொண்டது. நானும் இராஜினாமா கடிதத்தைக் கையளித்தேன். ‘பிரதி சபாநாயகர்’ பதவியென்பது சுயாதீனம் என்பதால், இம்மாதம் 30 ஆம் திகதிவரை அப்பதவியில் இருந்து இருப்பதற்கு தீர்மானித்தேன். அந்தவகையில் இன்றுடன் (நேற்றுடன்) முழுமையாக பதவி விலகிவிட்டேன்.
எனவே, மே 04 ஆம் திகதி நாடாளுமன்றம்கூடும்போது, முதல் விடயமாக பிரதி சபாநாயகர் தேர்வு இடம்பெற வேண்டும்.” - என்றார்.
பிரதி சபாநாயகர் பதவிக்கு ஆளுந்தரப்பில் இருந்தும், எதிரணியில் இருந்தும் இருவர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தமக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கின்றதென கூறிவரும் அரசுக்கு, இத்தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் அது பெரும் பின்னடைவாக அமையும்.
அதேபோல எதிரணி இரட்டை நிலைப்பாட்டில் உள்ள உறுப்பினர்களை கண்டறிவதற்கான ஒரு கருவியாக பிரதி சபாநாயகர் தேர்வை, ஐக்கிய மக்கள் சக்தி பயன்படுத்தவுள்ளது.
சிலவேளை, பிரதி சபாநாயகர் பதவிக்கு தமது தரப்பில் வேட்பாளரை நியமிக்காமல் ஆளுங்கட்சி பின்வாங்கக்கூடும் எனவும், வாக்கெடுப்பின்றி பிரதி சபாநாயகராக சுயாதீன அணியைச் சேர்ந்த அநுர பிரியதர்சன யாப்பா தெரிவுசெய்யப்படக்கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
0 comments :
Post a Comment