தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்களை கூறப்போனால் கவலையாக உள்ளது. அவர்கள் மக்களை பற்றி கடந்த காலங்களில் சிந்திக்கவில்லை .மக்கள் எழுச்சி போராட்டத்தை பற்றி சிந்தியுங்கள். ஆட்சியாளர்களின் டீல்களை பற்றி சிந்திக்க வேண்டாம்.இவ்வாறான டீல்களை பேசுவதை உடனடியாக கூட்டமைப்பினர் நிறுத்த வேண்டும்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தான் இவ்வாறான டீல்களை செய்தவர் என்பது எமக்கு தெரியும் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் உள்ள அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைமைக் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை(1) சர்வதேச தொழிலாளர் தினம் மற்றும் சமகால அரசியல் நிலைமை தொடர்பில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது
தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்களை கூறப்போனால் கவலையாக உள்ளது.ஏனெனில் கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளை பார்க்கின்ற போது எமக்கு மன வேதனையாக உள்ளது.மக்களை பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பானது கடந்த காலங்களில் சிந்திக்கவில்லை.இது சகலருக்கும் தெரிந்த விடயமாகும்.ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடானது உலக நாடுகளில் உள்ள இராஜதந்திர மட்டத்தில் மிகுந்த மதிப்பு உள்ளதுடன் பல்வேறு பேச்சுவார்த்தையிலும் பங்கெடுத்துள்ளது தான்.அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.இன்று கூட தமிழ் நாட்டு முதலமைச்சரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தற்போதைய நாட்டின் நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு இலங்கையில் உள்ளவர்களுக்காக உதவிகளை கேட்டுள்ளார்கள்.
இவ்வாறான செயற்பாட்டினை கூட்டமைப்பினர் முன்னெடுக்கின்றார்கள் தான் .ஆனால் இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் நாங்கள் கேட்டுக்கொள்வதானது மக்கள் எழுச்சி போராட்டத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்.நீங்கள் மக்களை பற்றி சிந்தியுங்கள்.மக்கள் எழுச்சி போராட்டத்தை பற்றி சிந்தியுங்கள்.ஆட்சியாளர்களை பற்றி சிந்திக்க வேண்டாம்.ஆட்சியாளர்களின் டீல்களை பற்றி சிந்திக்க வேண்டாம்.இவ்வாறான டீல்களை பேசுவதை உடனடியாக கூட்டமைப்பினர் நிறுத்த வேண்டும்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தான் இவ்வாறான டீல்களை செய்தவர் என்பது எமக்கு தெரியும்.
ஆனால் இவ்விடத்தில் டீல் செய்தவரின் பெயரை கூறமுடியாது கவலையடைகின்றோம்.எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை முறையாக மக்களின் பிரச்சினைக்கு தற்போது செவிசாய்க்க வேண்டும்.தற்போது மக்கள் எழுச்சி போராட்டமானது நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.வட கிழக்கு மக்கள் மாத்திரமின்றி இவ்வாறான போராட்டத்தில் நாடு பூராகவும் தொழிலாளர்கள் இணைந்து போராடுகின்றார்கள்.இவ்வாறான போராட்டங்களுக்கு கூட்டமைப்பினர் செவி சாய்க்காது விட்டால் எதிர்காலத்தில் மக்கள் உங்களையும் தூக்கி எறிவார்கள் என்பதே எமது நிலைப்பாடாகும் என கூறினார்.
இச்செய்தியாளர் சந்திப்பில் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க வட மாகாண இணைத்தலைவர் ஆறுமுகம் புண்ணியமூர்த்தி ,அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க ஆலோசகர் எம்.ஹூசைன் முபாறக், உட்பட அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment