நாட்டில் ஏற்படடுள்ள பொருளாதார நெருக்கடியினைக் கருத்திற்கொண்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவில் ”நமக்காக நாம்” எனும் தொனிப்பொருளில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருவதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களிலுள்ள வளங்களை ஆய்வு செய்து தேவையற்ற இடங்களிலிருந்து தேவையான இடங்களுக்கு வளங்களை பகிர்ந்தளித்து சுகாதார சேவையினை வழங்கி வருகின்றோம்.
குறிப்பாக “Resource Mapping” எனும் விசேட வேலைத்திட்டமொன்றினை முன்னெடுத்து எமது பிராந்தியத்திற்குட்பட்ட வைத்தியசாலைகள், சுகாதார நிறுவனங்களிலுள்ள அறிவு வளம், மனித வளம், வாகானங்கள், மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட சகல வளங்களையும் ஒருங்கினைத்து, தேவையான இடங்களுக்கு வளங்களை பகிர்ந்தளித்து வருகின்றோம். குறித்த திட்டத்தின் ஊடாக பல மில்லியன் ரூபா நிதி சேமிக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் வைத்தியசாலைகளில் பயன்படுத்த முடியாத நிலையில் ஒதுக்கப்பட்டு, தேங்கிக் காணப்படுகின்ற கட்டில்கள் மற்றும் தளபாடங்கள், மருத்துவ உபகரணங்களை திருத்தி அவற்றை மீளப்பயன்படுத்தி வருகின்றோம். அதற்காக மத்திய வேலைத்தளம் ஒன்றினையும் நிறுவியுள்ளோம். இதனால் நாம் மேலதிக செலவுகளை குறைத்துள்ளோம்.
கிழக்கு மாகாண ஆயுள்வேத திணக்களத்துக்குத் தேவையான மருந்துகள் மற்றும் மூலப்பொருட்களை வெளிநாடுகளில் இருந்தே கொள்வனவு செய்கின்றோம். இதற்காக அதிகமான நிதியினை அரசாங்கம் செலவு செய்கின்றது. ஆனால் பலதரப்பட்ட மூலிகைககள் எமது நாட்டில் உள்ளதுடன் மேலும் தேவையான மூலிகைகளை உற்பத்தி செய்வதற்குப் போதுமான வளங்களும் எம்மிடமுள்ளது. அவற்றை எமது பிராந்தியத்தில் உற்பத்தி செய்வதற்குரிய திட்ட அறிக்கையினையும் தயாரித்து கிழக்கு மாகாண ஆளுநரிடம் கையளித்துள்ளோம்.
அரச செலவுகளை குறைத்து எமது பணிமனையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மேற்குறித்த வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். எமது செயற்பாடுகளை பாராட்டிய ஆளுநர், அவற்றை பார்வையிடுவதற்காக விரைவில் கல்முனைக்கு விஜயம் செய்வதாகவும், குறித்த திட்டங்களை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் குறிப்பிட்டார்.
அரச செலவுகளை குறைத்து நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிப்புச் செய்யும் வகையில் மேலும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் பணிப்பாளர் றிபாஸ் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment