தமிழ்மக்களுக்கு செய்த அட்டூழியமே ராஜபக்சாக்களின் அழிவுக்கு காரணம்!



மக்களின் சாத்வீக போராட்டங்கள் சக்திமிக்கவை:அடக்கினால் வெடிக்கும்!
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்
காரைதீவு சகா-

ந்த நாட்டின் பூர்வீக குடிகளாகிய தமிழ்மக்களுக்கு செய்த துரோகமும் அட்டூழியமுமே ராஜபக்சாக்களின் அழிவுக்கு காரணம்.இன்று நாடு சின்னாபின்னமாகியமைக்கும் காரணம் அதுவே. இனி வருபவர்கள் யாராக இருந்தாலும் இதை மறந்து செயற்படாதிருக்க வேண்டுகிறோம்.

இவ்வாறு சமகால நாட்டுநிலைவரம் தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினரும் சமுக செயற்பாட்டாளருமான சந்திரசேகரம் ராஜன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:
'அரசியல்பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்' என தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகாரம் 2000ஆண்டுகளுக்கு முன்னே கூறிநிற்கிறது.புராண இதிகாசங்கள் காப்பியங்கள் இலக்கியங்கள் பொய்யைக்கூறவில்லை.படிப்பது தேவாரம் இடிப்பது சிவன்கோயிலாக இருக்கக்கூடாது. செய்கின்ற பாவச்செயல்களை அட்டூழியங்களை எல்லாம் செய்துவிட்டு ஆலயதரிசனம் செய்து என்ன பயன்? செய்த பாவங்களை அறுக்கவேண்டாமா? 'நன்றும் தீதும் பிறர் தர வாரா' என கனியன்பூங்குன்றனார் அன்றே சொன்னார். நாம் செய்ததை நாமே அறுக்கவேண்டும். இது அரசனுக்கும் ஆண்டிக்கும் பொதுவானதே.அதுதான் இன்று நடக்கிறது.

ஜனாதிபதியை பதவி விலகக் கோரியும் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் 30நாட்காளக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற பொது மக்கள் மீது ராஜபக்ச அரசாங்கம் தமது அடியாட்களை ஏவிவிட்டு தாக்குதல் மேற்கொண்டனர். இவ் சம்பவமானது மிகவும் காட்டுமிராண்டித்தனமான ஈனச்செயலாகும் அதன் விளைவு நாடெங்கிலும் அவர் சார்ந்த அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாகின.மேலும் போராட்டம் முன்னரைவிட மேலும் உக்கிரமடைந்துவருகின்றது.
மக்கள் சக்தி அபரிமிதமானது. அதற்கு முன் எந்த சக்தியாலும் தாக்குபிடிக்கமுடியாது.

அரசாங்கத்தின் தவறான தீர்மானங்கள் ஊழல் மோசடிகள் காரணமாக தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பாரிய பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். வாழ்க்கைச் சுமையை தாங்கிக் கொள்ள முடியாமல் திண்டாடும் மக்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி சாத்வீகப் போராட்டங்கள் நடத்துவது அறவழிப்பாற்பட்டது.

இந்த அரசாங்கம் ஜனநாயகம் மனித உரிமைகள் மத சுதந்திரம் தமிழரின் சமய கலாசார உரிமைகள் போன்றவற்றை அடக்குமுறைகளை கையாண்டதன் விளைவாகவே சர்வதேசம் இலங்கைக்கு உதவ முன்வராமல் கைவிரித்திருந்தது.
பௌத்த இஸ்லாம் மத அறநெறிப்பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவுகளை வழங்குகிறது. ஆனால் இந்து அறநெறிப்பாசாலைக்கு அது மறுக்கப்பட்டது. அதுபோல மதவழிபாடு நோன்புக்கு லீவு விடுமுறை வழங்கப்படுகிறது.ஆனால் இந்துசமய விரதம் பாதயாத்திரைக்கு ஒருநாள் லீவு கூட வழங்கப்படுவதில்லை. இப்படிப்பல பாரபட்சங்கள்.

மக்களின் அவலக்குரல்களுக்கு செவிசாய்த்து பொருளாதார பிரச்சினைகளுக்கு அவசரமாக தீர்வினைத் தேட வேண்டியதே அரசின் மீதுள்ள கடமையாகும்.

ஆனால் அதனை புறந்தள்ளி விட்டு அதற்குப் பதிலாக வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இவ்வாறு அரச அராஜகத்தை கட்டவிழ்த்து விடுவதற்காகத்தான் ஜனாதிபதி அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தியிருக்கிறாரா?
மக்களின் நியாயமான போராட்டங்களை அடக்கியொடுக்க முற்படுவதானது நிலைமையை இன்னும் மோசமடையச் செய்து பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.

மக்கள் சக்திக்கு முன்னால் அரச அராஜகம் நீண்ட நாட்களுக்கு தாக்குபிடிக்காது என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். அதன் முதற்படியே மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்திருக்கிறார். எனினும் அவர் கௌரவமாக பதவி விலகியிருக்க வேண்டும். ஆனால் அந்த சந்தர்ப்பத்தை தவற விட்டு கூலிப் படையை ஏவி கலவரங்களை ஏற்படுத்தி விட்டு இரத்தக்கறை படிந்த கரங்களுடன் அவமானப்பட்டு- அவப்பெயருடன் விடை பெற்றிருக்கிறார்.அதுவும் தேசியத்தலைவர் முன்மொழிந்த ஈழத்தின் தலைநகரான திருமலை நகரமே அவருக்கு இறுதியாக கைகொடுத்தது என்பதை அவர் மறந்துவிடக்கூடாது.

இந்நிலையில் ஸ்திரமானதும் சர்வேதேசம் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான ஆட்சியொன்று அமைவதன் ஊடாகவே பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியும் .இனியும் தாமதியாமல் ஜனாதிபதி அதற்கு வழி விட வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் மக்கள் சார்பில் வலியுறுத்துகின்றோம்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :