கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்
வைத்திய கலாநிதி இரா. முரளீஸ்வரனின் “ஒரு மருத்துவரின் மருத்துவமனை நாள்கள்” கவிதை நூல் வெளியீடு சனிக்கிழமை அன்று (30) மட்டக்களப்பு பிள்ளையாரடி தமிழ்ச்சங்க கலையரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு தமிழ்ச்சங்க தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு முன்னிலை அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத்தலைவர் பேராசிரியர் செ. யோகராசா கலந்து சிறப்பித்தார்.
முதன்மை அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன், கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் வைத்திய கலாநிதி.வே.விவேகானந்தராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
முன்னதாக பவளவிழாக் கண்ட நூலாசிரியரின் தாயாகிய திருமதி பாலநாகம்மா இராசரெத்தினம் அவர்களது 75வது பிறந்த தினத்தை தமிழ் சங்கத்தினர் மேடையில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
நூலாசிரியர் அறிமுக உரையை தேசபந்து மு.செல்வராசா நிகழ்த்த நூல் வெளியீட்டு உரையை தேசமான்ய விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா நிகழ்த்தினார்.
நயவுரையை அருட்தந்தை அ.அ.நவரெத்தினம் நிகழ்த்த வாழ்த்துரைகளை டொக்டர்களான புஷ்பலதா லோகநாதன் பா.யூடி ரமேஷ் ஜெயகுமார் ஆகியோர் நிகழ்த்தினார்கள்.
மேலும் இந்நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி.க.கலாரஞ்சனி, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.குண.சுகுணன் ஆகியோர் கலந்துகொண்டனர். மற்றும் இந்நூலின் முதல்பிரதியினை மட்டக்களப்பு தமிழ்ச்சங்க பொருளாளர் தேசபந்து மு.செல்வராசா பெற்றுக்கொண்டார்.
கதிரவன் த.இன்பராசாவின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் உள்நாட்டு இறைவரித்திணைக்கள சிரேஸ்ட ஆணையாளர் சட்டத்தரணி மு. கணேசராசாவினால் வரவேற்புரையும், கலைக்கோகிலம் நாட்டியப்பள்ளியினால் வரவேற்பு நடனமும் இடம்பெற்றது.
உரைகளை தொடர்ந்து ஏற்புரையை நூலாசிரியர் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் முரளீஸ்வரன் நிகழ்த்த நன்றி உரையை துணை செயலாளர் திருமதி பிரியா கருணாகரன் நிகழ்த்தினார்.
நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நூல் இலவசமாக வழங்கப்பட்டது.
அழைப்பிதழில் " வாழ்த்துக்கள் மட்டுமே அன்பளிப்பாக ஏற்றுக் கொள்ளப்படும்" என்று குறிப்பிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
வைத்தியகலாநிதி இரா. முரளீஸ்வரன் ஒரு சிறந்த மருத்துவ நிருவாகி மட்டுமல்லாமல் ஓர் உன்னத இலக்கியப்படைப்பாளியுமாவார். 1976ல் யாழ்ப்பாணம் நெல்லியடியில் பிறந்து 1985ம் ஆண்டுகளின் பின்னர் மட்டக்களப்பில் வாழ்ந்துவரும் இவர் தனது கல்வியை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியிலும், மருத்துவ பட்டப்படிப்பை யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும் மருத்துவ நிர்வாக முதுமானியை கொழும்பு பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மருத்துவராக 2005ம் ஆண்டிலிருந்து கடமையை தொடங்கி 2013ம் ஆண்டு கல்முனை ஆதாரவைத்தியசாலை வைத்திய அத்தியட்சகராகி தற்போதுவரை அங்கு தொடர்ந்து பணிபுரிகின்றார். மருத்துவ அனுபவங்களும் கவிதை அனுபவமும் இணைந்த மருத்துவமனை நாள்களைப்பற்றிய கவிதைகள் சேர்ந்த கவிதைத் தொகுப்பாக இந்நூல் வெளியிடப்பட்டது.
0 comments :
Post a Comment