மக்கள் சக்தி' முன் மண்டியிட்டார் மஹிந்த! நாடே கொந்தளித்த பின் பதவி துறப்பு!



ஆர்.சனத்-
'மக்கள் சக்தி' முன் மண்டியிட்டார் மஹிந்த! நாடே கொந்தளித்த பின் பதவி துறப்பு!!
52 வருடகால அரசியலில் 'அசிங்கப்பட்டு' வெளியேறிய பேரவலம்
பட்டாசு, கொளுத்தி பாற்சோறு சமைத்து மக்கள் கொண்டாட்டம்
மஹிந்தவின் நாடாளுமன்ற அரசியல் பயணம் (1970-2022)

ஹிந்த ராஜபக்ச, தான் வகித்த பிரதமர் பதவியை இன்று (09) இராஜினாமா செய்தார். இது தொடர்பான 'பதவி துறப்பு' கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் ஊடகப் பிரிவும் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடல் வளாகத்திலும், அலரிமாளிகைக்கு முன்பாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது, ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் இன்று தாக்குதல் நடத்தினர்.
போராட்டக்களங்களில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை அடித்து நொறுக்கி, தீயிட்டுக் கொளுத்தினர். இதனால் போராட்டக்களம் கலவர பூமியாக மாறியது.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து அலரிமாளிகை முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற ஆளுங்கட்சி ஆதரவாளர்களே தாக்குதலை நடத்தினர் என போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
அறவழி போராட்டக்காரர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்து, நாட்டில் பல பகுதிகளிலும் மக்கள் வீதிக்கு இறங்கியதால், உடன் அமுலுக்கு வரும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்குக்கு மத்தியில் போராட்டங்களும் தொடர்கின்றன. சில பகுதிகளில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள்மீது தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. துப்பாக்கிச்சூட்டு சம்பவமும் பதிவாகியுள்ளது.
இவ்வாறு முழு நாடும் கொந்தளித்திருக்கும் நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகியுள்ளார். இன்று இடம்பெற்ற மோதல் சம்பவமானது, அவரின் அரசியல் வாழ்வில் மற்றுமொரு கறும்புள்ளியாக அமைந்துவிட்டது என அவருக்கு நெருக்கமானவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மஹிந்த ராஜபக்சவின் நாடாளுமன்ற அரசியல் பயணம்
1970 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பெலியத்த தொகுதியில் போட்டியிட்ட அவர், 23 ஆயிரத்து 103 வாக்குகளைப்பெற்று நாடாளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். நாடாளுமன்றத்துக்கு இளம் வயதில் (25) தெரிவான உறுப்பினர் என்ற பெருமையையும் பெற்றார்.
1977 - பொதுத்தேர்தலில் தோல்வியடைந்தார்.
1989 - அம்பாந்தோட்டை மாவட்டத்தில் களமிறங்கி, 13 ஆயிரத்து 73 வாக்குகளைப்பெற்று மீண்டும் நாடாளுமன்றம் தெரிவானார்.
1994 - இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்ட அவர், 78 ஆயிரத்து 77 வாக்குகளுடன் சபைக்கு தெரிவானார். இத்தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றிநடை போட்டது.
1994 சந்திரிக்கா தலைமையிலான அமைச்சரவையில் தொழில் அமைச்சு பதவி வழங்கப்பட்டது. 1997 வரை அப்பதவியில் நீடித்தார்.
1997 - மீன்பிடித்துறை அமைச்சு பதவி ஒப்படைக்கப்பட்டது. 2001 வரை அப்பதவியை முன்னெடுத்தார்.
2001 - பொதுத்தேர்தலில் 109 ஆசனங்களை வென்று ஐ.தே.க. ஆட்சி அமைத்தது. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றம் தெரிவானார்.
2004 - பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி. சபைக்கு தெரிவான மஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டது.
2005 - இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச களமிறங்கினார். 48 லட்சத்து 87 ஆயிரத்து 152 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.
2010 - ஜனாதிபதித் தேர்தலில் 2ஆவது முறையும் போட்டியிட்டார். 60 லட்சத்து 15 ஆயிரத்து 934 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.
1978 அரசமைப்பின் பிரகாரம் நபரொருவர் இரு தடவைகள் மட்டுமே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 18 ஆவது திருத்தச்சட்டம்மூலம் இந்த ஏற்பாட்டை மஹிந்த - கடும் எதிர்பபுக்கு மத்தியில் மாற்றினார்.
2015 - மூன்றாவது முறையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார். எனினும், அவரால் வெற்றிபெறமுடியவில்லை.
2015 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் களமிறங்கிய மஹிந்த ராஜபக்ச 4 லட்சத்து 23 ஆயிரத்து 529 வாக்குகளைப் பெற்றார்.
2018 ஒக்டோபர் 26 ஆம் திகதி பிரதமராக பதவியேற்றார். (ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சி)
2018 டிசம்பர் 15 ஆம் திகதி பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ச இராஜினாமா செய்தார்.
2018 டிசம்பர் 18 இல் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
2019 நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்றதையடுத்து, நவம்பர் 21 ஆம் திகதி பிரதமராக பதவியேற்றார் மஹிந்த.
2020 பொதுத்தேர்தலில் குருணாகலையில் போட்டியிட்டு 527,364 வாக்குகளைப் பெற்றார். இலங்கை அரசியல் வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகளாகும். மீண்டும் பிரதமராக பதவியேற்பு.
2022 மே 09 ஆம் திகதி, பிரதமர் பதவியில் இருந்து விலகும் அறிவிப்பு விடுப்பு.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச, தனது 52 வருடகால அரசியல் பயணத்தில் நான்கு தடவைகள் பிரதம அமைச்சராக பதவியேற்றிருந்தாலும், குறுகிய காலப்பகுதிக்கு மட்டுமே அவரால் அப்பதவியில் நீடிக்ககூடியதாக இருந்தது.
இலங்கையில் பிரதமர் அமைச்சு பதவியை வகித்தவர்கள், இவ்வாறானதொரு நெருக்கடி நிலைமையை எதிர்கொண்டு பதவி விலகவில்லை என சுட்டிக்காட்டப்படுகின்றது. பல இடங்களில் மக்கள் பட்டாசு கொளுத்தி , பாச்சோறு சமைத்து மஹிந்தவின் பதவி விலகியதை கொண்டாடியுள்ளனர்.
.................
இன்றைய சம்பவம் தொடர்பான சில செய்திகள்
போராட்டக்காரர்கள்மீதான இன்றைய சம்பவத்தில் இதுவரை 109 பேர்வரை காயம் அடைந்துள்ளனர்.
அரசியல்வாதிகள் படையெடுப்பு!
போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும், தொழிற்சங்கத் தலைவர்களும், சிவில் செயற்பாட்டாளர்களும் காலி முகத்திடல் போராட்டக்களம் விரைவந்தனர். நிலைமையை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டிருந்தது.
காலிமுகத்திடல் வந்த எதிர்க்கட்சித் தலைவர்மீது தாக்குதல் மேற்கொள்வதற்கு குழுவொன்று முயற்சித்தது. எனினும், அவரின் மெய் பாதுகாவலர்கள் உடனடியாக பாதுகாத்து, வாகனத்தில் ஏற்றினர். அதன் பின்னர் வாகனம்மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
தொழிற்சங்கத் தலைவர்கள், சட்டத்தரணிகள் என பலர் விரைந்து, போராட்டக்காரர்கள் பாதுகாக்கும் விதத்தில் செயற்பட்டனர்.
ஊரடங்கு அமுல்
இச்சம்பவத்தையடுத்து கொழும்பில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பலர் காலிமுகத்திடல் நோக்கி வர ஆரம்பித்தனர். இதனால் கொழும்பில் மூன்று பகுதிகளுக்கு முதற்கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் மேல்மாகாணம் முழுவதும் ஊரடங்கு அமுல் என அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், ஆளுங்கட்சியினர் அராஜகத்துக்கு எதிராக நாட்டின் ஏனைய பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்தால், உடன் அமுலுக்கு வரும்வகையில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை அமுலில் இருக்கும் என பொலிஸ் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியானது.
தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்தும், அரசு உடன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் தொடர் தொழிற்சங்க போராட்டம் இடம்பெறும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
குவியும் கண்டனங்கள்
அமைதி வழியில் போராடியவர்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைச்சம்பவத்தை அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள், சர்வதேச அமைப்புகள் மற்றும் இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதகரங்கள் என்பன கண்டித்துள்ளன.
'எந்தவொரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது." என ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் டுவிட்டர் பதிவுகளை இட்டுள்ளனர். " உங்கள் கூட்டத்துக்கு வந்தவர்கள்தானே தாக்கினர், பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் குறுகிய அரசியல் வேண்டாம்." - என அவர்களின் பதிவுகளுக்கு சமூகவலைத்தளங்களில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
மஹிந்த வேண்டும் கூட்டத்தில் பங்கேற்ற ஆதரவாளர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர்களின் சொத்துகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. நிட்டம்புவ பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமும் பதிவாகியுள்ளது.
நாடு முழுவதும் தற்போது பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றது. போராட்டங்களும் இடம்பெறுகின்றன. சில தரப்பினர் முறையற்ற விதத்திலும் செயற்பட்டுவருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :