பிரதி சபாநாயகர் தேர்வு!



ஆர்.சனத்-
பிரதி சபாநாயகர் தேர்வு நாடாளுமன்றில் எவ்வாறு நடைபெறும்?
மூவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டால் தேர்வு எப்படி இடம்பெறும்?
54 வருடங்களாக பிரதி சபாநாயகர் பதவிக்கு தமிழர் ஒருவர் தெரிவுசெய்யப்படவில்லை
1968 இல் பிரதி சபாநாயகர் பதவியை வகித்த தமிழ் எம்.பி யார்?


லங்கை அரசியலில் பிரதி சபாநாயகர் பதவி குறித்து தற்போது அதிகம் பேசப்படுகின்றது. அப்பதவியை வகித்த ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய பிரதி சபாநாயகராக யார் தெரிவுசெய்யப்படுவார், இதற்கான தேர்வு நாடாளுமன்றத்தில் எவ்வாறு இடம்பெறும் என்பது குறித்து பலரும் கவனம் செலுத்தியுள்ளனர்.
எனவே, பிரதி சபாநாயகர் தெரிவு எவ்வாறு இடம்பெறும், அதற்கான நடைமுறைகள் எவை என்பன குறித்து இப்பதிவில் விரிவாக ஆராய்வோம்.
பிரதி சபாநாயகர் பதவிக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயர் மாத்திரம் முன்மொழியப்படுமானால், வாக்கெடுப்பின்றியே அவர் அப்பதவிக்கு தெரிவுசெய்யப்படுவார்.
2020 ஆகஸ்ட் 05 இல் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பின்னர் 2020 ஆகஸ்ட் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முதலாவது கூட்டத்தொடர் இடம்பெற்றது.
 
பிரதி சபாநாயகர் பதவிக்கான நியமனத்தின்போது , ஆளுங்கட்சி எம்.பியான ரஞ்சித்சியம்பலாப்பிட்டியவின் பெயர், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீரவால் முன்மொழியப்பட்டது. இதனை நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா வழிமொழிந்தார். எதிரணி சார்பில் எவரின் பெயரும் முன்மொழியப்படவில்லை. இதனால் பிரதி சபாநாயகர் பதவிக்கு ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டார்.
பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழியப்படுமானால், வாக்கெடுப்பு மூலமே தேர்வு இடம்பெறும். பெயர்கூவி வாக்கெடுப்பை நடத்துவதா அல்லது இரகசிய வாக்கெடுப்பா என்பதை சபை தீர்மானிக்கும்.
8 ஆவது நாடாளுமன்றத்தில் நல்லாட்சியின்போது பிரதி சபாநாயகர் ஒருவரை இரகசிய வாக்கெடுப்புமூலம் தெரிவுசெய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. பிரதி சபாநாயகராக செயற்பட்ட திலங்க சுமதிபால, ஐக்கிய தேசியக்கட்சியுடன் ஏற்பட்ட அரசியல் முரண்பாடு காரணமாக, 2018 மே 25 ஆம் திகதி , பதவியை இராஜினாமா செய்தார்.
2018 ஜுன் 06 ஆம் திகதி சபைகூடியபோது, பிரதி சபாநாயகருக்கான தேர்வு இடம்பெற்றது.
இதன்போது ஆளுங்கட்சியின் சார்பில் மொனறாகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், ஆனந்த குமாரசிறியின் பெயர் முன்மொழியப்பட்டது. மஹிந்த ராஜபக்ச தலைமையில் செயற்பட்ட கூட்டு எதிரணியின் சார்பில் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளேயின் பெயர் பிரேரிக்கப்பட்டது.
எதிர்க்கட்சியின் கோரிக்கையின் பிரகாரம் பிரதி சபாநாயகரை தெரிவுசெய்வதற்கு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் ஆளுங்கட்சி வேட்பாளர் ஆனந்த குமாரசிறி 97 வாக்குகளையும், எதிரணி வேட்பாளர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே 53 வாக்குகளையும் பெற்றனர். அதிக வாக்குகளைப்பெற்ற ஆனந்தகுமாரசிறி பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்படார் என சபாநாயகரால் அறிவிக்கப்பட்டது.
பிரதி சபாநாயகர் பதவிக்கு போட்டியிடும் இருவரும், சம எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றால் என்ன நடக்கும் என்ற வினா எழலாம் அவ்வாறானதொரு சூழ்நிலை ஏற்பட்டால் மீண்டுமொருமுறை வாக்கெடுப்பு நடத்தப்படும். அதன்போதும் சம அளவு வாக்குகளெனில், திருவுளச் சீட்டிழுப்பின்மூலம் தெரிவு இடம்பெறும்.
சிலவேளை பிரதி சபாநாயகர் பதவிக்கு மூவர் போட்டியிட்டால், தேர்வு எவ்வாறு இடம்பெறும் என்ற வினாவும் உங்களுக்கு எழக்கூடும்.
ஏனைய இருவரும் பெற்ற மொத்த வாக்குகளைவிடவும், மற்றையவர் கூடுதல் வாக்குகளைப் பெற்றிருந்தால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும். அவ்வாறு இல்லாவிட்டால் மூவரில் குறைந்தளவான வாக்குகளைப் பெற்றவர், போட்டியில் இருந்து நீக்கப்பட்டு, இருவருக்கிடையில் போட்டி இடம்பெற்று, அதில் இருந்து பிரதி சபாநாயகர் தெரிவுசெய்யப்படுவார்.
இரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டியேற்படின் சபாபீடத்தில் தற்காலிக - சிறு வாக்குச்சாவடியொன்று நிறுவப்படும். (படத்தில் உள்ளது) ஒவ்வொரு உறுப்பினரும், தாம் யாருக்கு ஆதரவு என்பதை, அவரின் பெயரை எழுதி வாக்கு பெட்டிக்குள் இடப்பட வேண்டும். வாக்கெடுப்பு முடிந்ததும், சபாபீடத்தில் வைத்து, சபாநாயகர் முன்னிலையில், நாடாளுமன்ற செயலாளரின் பங்களிப்புடன் எண்ணப்பட்டு, பெறுபேறு அறிவிக்கப்படும்.
9 ஆவது நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தனது இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதிக்கும், சபாநாயகருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
 
இக்கடிதத்தை தான் ஏற்றுவிட்டதாக ஜனாதிபதி, சபாநாயகருக்கு தெரியப்படுத்தியிருக்கும் பட்சத்தில், நாளை (04) நாடாளுமன்றம் கூடும்போது, முதல் பணியாக பிரதி சபாநாயகருக்கான தேர்வு இடம்பெறும்.
 
தமிழ் பிரதி சபாநாயகர்!
இலங்கை நாடாளுமன்றத்தில் 1968 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழ் எம்.பியொருவர் இதுவரை பிரதி சபாநாயகர் பதவியை வகிக்கவில்லை.
1965 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழ் காங்கிரஸ் சார்பாக யாழ். உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட சிவசிதம்பரம், 12,009 வாக்குகளைப் பெற்று சபைக்கு தெரிவானார்.
1968 மார்ச் 08 ஆம் திகதி பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட அவர், 1970 இல் நாடாளுமன்றம் கலைக்கப்படும்வரை அப்பதவியில் நீடித்தார். பிரதி சபாநாயகர் பதவியை வகித்த முதல் தமிழ் எம்.பி. இவராவார்.
அதன்பின்னர் இற்றைவரை தமிழ் எம்.பி. எவரும் இப்பதவியை வகிக்கவில்லை. 2015 இல் அங்கஜன் ராமநாதனை பிரதி சபாநாயகராக்குவதற்கு மைத்திரிபால சிறிசேன முயற்சித்தாலும், அம்முயற்சி கைகூடவில்லை. நாடாளுமன்றத்தில் பிரதி தவிசாளர் பதவியை தமிழர்கள் வகித்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :