சாய்ந்தமருதில் வீசும் துர்வாடைக்கு விலங்கறுமனைதான் காரணம் என்று நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க பின்நிற்க மாட்டேன்;-மேயர் றகீப் உறுதி



அஸ்லம் எஸ்.மௌலானா-
சாய்ந்தமருது பிரதேசத்தில் சகிக்க முடியாதளவு வீசும் துர்வாடையானது விலங்கறுமனையில் இருந்து வெளிவருவதற்கான காரணிகள் தென்படவில்லை என களப்பரிசோதனை மேற்கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். எவ்வாறாயினும் இத்துர்வாடைக்கு அந்த விலங்கறுமனைதான் காரணம் என்று நிரூபிக்கப்பட்டால், அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஒருபோதும் பின்நிற்க மாட்டேன் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டதாவது;

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக இரவு வேளைகளில் மிக மோசமான துர்வாடை வீசி வருவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைத் தொடர்ந்து, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் நானும் சந்தித்து இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடி, இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்திருந்தோம். இதன்போது முதலில் துர்நாற்றம் எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டு, தனக்கு அறியத்தருமாறும் அதன் பிரகாரம் உரிய நடவடிக்கைகளை தாம் முன்னெடுப்பதாகவும் அவரிடம் வலியுறுத்தியிருந்தேன்.

இந்நிலையில், எமது மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சாய்ந்தமருது பொலிவேரியன் வீட்டுத்திட்டத்திற்கப்பால் அமைந்துள்ள விலங்கறுமனையை பகல் வேலைகளிலும் இரவு வேளைகளிலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் திடீர் விஜயம் மேற்கொண்டு, பரிசோதனைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது குறித்த துர்வாடை வீசுவதற்கான வாய்ப்புகள், காரணங்கள் எவையும் விலங்கறுமனையிலோ அதன் சுற்றுச் சூழலிலோ கண்டறியப்படவில்லை என்பதாக குறித்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவ்வாறாயின் இத்துர்நாற்றம் எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின்போது கல்முனையை நோக்கி செல்லும் வண்ட் வீதி என்றழைக்கப்படுகின்ற குளக்கரை பாதையோரமாக நீர்நிலைகளில் மாட்டுக்கழிவுகளும் கோழிக்கழிவுகளும் இதர கழிவுகளும் மூடை மூடையாக போடப்பட்டிருப்பது அவதானிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை மற்றும் கிரீன் பீல்ட் வீட்டுத்திட்டம் என்பவற்றை அண்மித்துள்ள வண்ட் வீதியின் ஒரு பகுதியிலுள்ள நீர்நிலையினுள் நூற்றுக்கணக்கான மூடைகளில் ஆடு, மாடு மற்றும் கோழிக்கழிவுகள் காணப்பட்டிருந்தன. இரவு நேரங்களில் எழுகின்ற துர்வாடைக்கு இவைதான் காரணமாக இருக்கலாம் என்று சுகாதாரத்துறையினரால் ஊகிக்கப்படுகிறது.

இதையடுத்து, மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் பிரிவினரால் கனரக வாகனங்களின் உதவியுடன் முடியுமானளவு கழிவுகள் மீட்கப்பட்டு, அகற்றப்பட்டுள்ளன. இங்கு இன்னும் ஆழமான பகுதியில் இவ்வாறான கழிவுகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இவற்றையும் ஏனைய குளக்கரை பகுதிகளிலும் இவ்வாறான கழிவுகள் இருக்குமாயின் அவற்றையும் அகற்றுவதற்கு மாநகர சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

விடயம் இவ்வாறிருக்க சிலர் முகநூல்களில் இத்துர்வாடையானது மேற்படி விலங்கறுமனையில் இருந்துதான் வெளிப்படுகிறது எனவும் இதனை மாநகர சபை கண்டுகொள்ளவில்லை எனவும் மாநகர முதல்வராகிய நான் விலங்கறுமனை உரிமையாளரிடம் இலஞ்சம் பெற்றுக்கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாக இருப்பதாகவும் அபாண்டங்களை சுமத்தியுள்ளனர்.

இத்துர்வாடை விலங்கறுமனையில் இருந்து வெளிவரவில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் களப்பரிசோதனை செய்து, உறுதிப்படுத்தியிருக்கின்றபோது காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் என் மீது வேண்டுமென்றே சேறு பூசுவதற்காக வதந்திகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றனர். சரி- நாற்றம் இங்கிருந்துதான் வருகிறதோ இல்லையோ- இவர்கள் கூறுவது போன்று விலங்கறுமனையை பூட்டி விடுவது பெரிய காரியமல்ல. ஆனால் மாட்டிறைச்சியை எமது மக்கள் நுகர முடியாத துர்ப்பாக்கியம் ஏற்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு- முடக்கம் காரணமாக சந்தைகளையும் மாட்டிறைச்சிக் கடைகளையும் திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டபோது எமது மக்கள் மாட்டிறைச்சிக்காக அங்கலாய்த்ததை மறந்து விட முடியாது. அதனால் மாட்டிறைச்சியை நடமாடும் விற்பனை மூலம் கிடைக்கச் செய்வதற்கு எமது மாநகர சபையினால் விசேட ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்ததை நினைவூட்ட விரும்புகின்றேன்.

தற்போதும் ஏதாவது காரணத்தின் நிமித்தம் ஒரு நாளாவது மாடறுக்கப்படா விட்டால், அதுவும் வெள்ளிக்கிழமை என்றிருந்தால் நாம் எவ்வளவு பாடுபடுகின்றோம். மாடறுப்பதை தடை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முற்பட்டால் நாம் எப்படியெல்லாம் கொதிக்கிறோம். ஆனால் நமது பகுதியிலுள்ள விலங்கறுமனையொன்றின் தேவையை உணராமல், யதார்த்தங்களை எல்லாம் புறந்தள்ளி விட்டு, அதனைப் பூட்டி விட வேண்டும் எனவும் இல்லையேல் மேயருக்கு வருமானம் கிடைக்கிறது என்றும் சிலர் இலாபகமாக சொல்லி விடுகிறார்கள்.

சாய்ந்தமருது கடற்கரைப் பிரதேசத்தில் ஏற்கனவே அமையப்பெற்றிருந்த விலங்கறுமனை குடியிருப்புப்பகுதியை அண்மித்திருந்தமையினால், பொது மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியம் காரணமாகவே அது அங்கிருந்து அகற்றப்பட்டது. பின்னர் விலங்கறுமனையொன்றின் அவசியம் கருதி ஊரில் இருந்து வெகு தொலைவில் கரைவாகு வயல் பகுதியொன்றில் அதனை அமைப்பதற்கு கல்முனை மாநகர சபையினால் 2009/2010 காலப்பகுதியில் தனியார் நிறுவனமொன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அது சுமார் 13 வருடங்களாக அவ்விடத்தில் இயங்கி வருகிறது. ஆனால் அண்மைக்காலமாக மக்களை விசனப்படுத்துமளவுக்கு சாய்ந்தமருது பிரதேசமெங்கும் வீசி வருகின்ற பெரும் துர்நாற்றம் முன்னொருபோதும் ஏற்பட்டதாக அறியக்கிடைக்கவில்லை.

எனவே, துர்நாற்றம் எங்கிருந்து வருகிறது என்பதை சரியாக கண்டறிய வேண்டும். சுகாதாரத்துறையினர் கூறுவது போன்று, கரைவாகு ஆற்றங்கரை நீர்நிலைகளில் கொட்டப்பட்டிருக்கின்ற ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட விலங்குக் கழிவுகள்தான் அதற்குக் காரணமாக இருக்குமாயின், சாய்ந்தமருது தொடக்கம் கல்முனை வரை நீண்டு செல்லும் நீர் நிலைப்பகுதிகளை முழுமையாக சுத்தம் செய்து, அக்கழிவுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கபட வேண்டும். இது பெரும் செலவுடன் கூடிய பாரிய வேலைத்திட்டமாக இருக்கும்.

இல்லை, குறித்த விலங்கறுமனையில் இருந்துதான் அந்த நாற்றம் வருகிறது என்று நிரூபிக்கப்பட்டால், அந்த விலங்கறுமனை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு நான் தயாராகவே இருக்கிறேன். அங்கு கடந்த காலங்களில் சில சந்தர்ப்பங்களில் அவதானிக்கப்பட்ட சுத்தம், சுகாதாரத்திற்கு கேடான விடயங்கள் குறித்து அவ்வப்போது அதன் உரிமையாளரை அழைத்து, தேவையான அறிவுறுத்தல்களையும் பணிப்புரைகளையும் விடுத்து, சீர்செய்திருக்கிறோம். இந்த விடயத்திலும் மிகவும் இறுக்கமான நடவடிக்கைகளை எடுக்க தயாராகவே இருக்கிறேன். மேலும், பொது மக்கள் கோரிக்கை விடுத்தால் இதனைப் பூட்டி விடுவதற்கும் எம்மால் நடவடிக்கை எடுக்க முடியும்.

ஆகையினால், எதைச் செய்வதானாலும் பொது மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். குறித்த நீர்நிலைகளில் இவ்வாறான கழிவுகளைக் கொட்டுகின்ற ஈனப்பிறவிகள் கண்டறியப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும்- அவர்களை அடையாளப்படுத்துவதற்கு பொது மக்கள் முன்வர வேண்டும் என்று நாம் அடிக்கடி வலியுறுத்தி வருகிறோம். சில தினங்களுக்கு முன்னர் இக்கழிவுகள் அகற்றப்பட்ட நீர்நிலைப்பகுதியில் மீண்டும் கழிவுப்பொதிகள் போடப்பட்டிருக்கின்றன. அவ்வாறாயின் இதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

எமது மாநகர சபைக்குட்பட்ட ஒவ்வொரு ஊரிலும் வீதி வீதியாக வீடுகளிலும் பஸார்களிலும் சந்தைகளிலும் அரச, தனியார் நிறுவனங்களிலும் வைத்தியசாலைகளிலும் பாடசாலைகளிலும் அன்றாடம் திண்மக்கழிவகற்றல் சேவையை மேற்கொள்வதே பெரிய சவாலாக இருந்து வருகின்றது. ஆளணி மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட வளப்பற்றாக்குறைகளுக்கு மத்தியிலும் சேகரிக்கின்ற குப்பைகளை டம்மிங்க் செய்வதற்கான இடமொன்று இல்லாத நிலையிலும் பலத்த சவால்களுக்கு மத்தியிலேயே இச்சேவை முன்னெடுக்கப்படுகிறது.

தவிரவும், நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருட்களினதும் வாகன உதிரிப்பாகங்களினதும் விலை அதிகரிப்பு, தட்டுப்பாடு என்பன ஒருபுறம், மாநகர சபைக்கான வருமானம் வீழ்ச்சியடைந்து, நிதித்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை இன்னொரு புறம், இவற்றுக்கு மத்தியிலேயே திண்மக்கழிவகற்றல் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சட்டவிரோதமாக நீர்நிலைகளில் மூடை மூடையாக கொட்டப்படுகின்ற கழிவுகளை நாளாந்தம் அகற்றுவதென்பது சாத்தியமற்ற விடயம் என்பதை எல்லோரும் புறிந்து கொள்ள வேண்டும்.

ஆகையினால், துர்வாடைக்கான உண்மையான காரணிகளைக் கண்டறிந்து, நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒண்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும். அதேவேளை, விலங்கறுமனையை தொடர்ந்தும் கண்காணிப்பு செய்து, அங்கிருந்துதான் இந்த மோசமான துர்நாற்றம் எழுகிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும். அந்தளவுக்கு இல்லா விட்டாலும் அங்கு சுத்தம், சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கத்தக்க ஏதாவது குறைபாடுகள் தென்படுமாயினும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்விடயங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகளினால் முன்வைக்கப்படுகின்ற எவ்விதமான ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் முழுமையாக செயற்படுத்துவதற்கு மாநகர சபை முழுமையாக முன்னிற்கும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த விடயத்தில் அரசியல் காரணங்களுக்காக எம்மீது சேறு பூசுவதை விடுத்து, நேர்மையுடன் அறிவுபூர்வமாகவும் யதார்த்தபூர்வமாகவும் சிந்தித்து செயற்படுவதற்கு முன்வருமாறு அன்பாய் அழைக்கின்றேன்.

மேலும், சாய்ந்தமருது தொடக்கம் கல்முனை வரையான குளக்கரை வீதியின் இரு மருங்கிலுமுள்ள நீர் நிலைகளில் விலங்குக்கழிவுகள் கொட்டப்படுவதை உடனடியாக- முற்றாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இது விடயத்தில் பொது மக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததாக இருக்கிறது. இங்கு விலங்குக் கழிவுகளை கண்மூடித்தனமாக கொட்டுகின்ற நபர்கள் பற்றிய தகவல்களை பொலிஸாருக்கோ மாநகர சபைக்கோ வழங்க பொது மக்கள் முன்வர வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகின்றோம். கிடைக்கப்பெறுகின்ற தகவல்களைக் கொண்டே உரிய நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறானோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலே எதிர்காலங்களில் நீர்நிலைகளிலும் பொது இடங்களிலும் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க முடியும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :