சாய்ந்தமருது பிரதேசத்தின் ஒரு பகுதியில் கடந்த சில வாரங்கள் முதல் பிந்திய மாலை பொழுதுகளில் பலத்த இனந்தெரியாத துர்நாற்ற வாசமென்று வெளிவந்து கொண்டிருப்பதனால் மக்கள் உச்சகட்ட அசௌகரியங்களை அனுபவித்து வருகின்றனர். இதனடிப்படையில் சுகாதார துறையினருக்கும், சாய்ந்தமருது பொலிஸாருக்கும் கிடைத்த மக்களின் முறைப்பாட்டையடுத்து பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஸத் காரியப்பரின் களவிஜயத்தின் மூலம் கல்முனையை நோக்கி செல்லும் வண்ட் வீதியில் நேற்றிரவு மேற்கொண்ட பரிசோதனையில் விலங்கு கழிவுகள், கோழி கழிவுகள் உட்பட பல்வேறு திண்மக்கழிவுகள் இடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்ததுடன் குறித்த தூர்நாற்றம் தொடர்பில் பிரதேசவாசிகளுடன் உரையாடிய கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஸத் காரியப்பர் அடைக்கப்பட்டுள்ள நீர்நிலையில் நான்கு மாடுகள் இறந்துள்ளதாக பிரதேச வாசிகள் மூலமாக அறிந்து கொண்டதாகவும், இந்த விடயங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்த தானும் கல்முனை மாநகர சுகாதார பிரிவும் எப்போதும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில் இன்று காலை சந்தேகித்த குறித்த இடங்களில் கல்முனை மாநகர சபை கனரக வாகனங்களின் உதவியுடன் கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஸத் காரியப்பர் தலைமையிலான சுகாதர குழுவினர் துப்பரவு பணியில் ஈடுபட்டனர். இதன்போது ஆயிரக்கணக்கான உரப்பைகளில் போதியிடப்பட்ட மாடு, ஆடு, கோழிகளின் உடற்பாகங்கள் அழுகிய நிலையில் அப்பிரதேசத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன்போது தீயிடப்பட்ட மாட்டின் உடல் பாகங்கள் மற்றும் அழுகிய நிலையில் பல விலங்குகளின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஸத் காரியப்பர், சட்டவிரோத மாடறுப்பு மற்றும் முறைகேடான கழிவகற்றலின் மூலமே இந்த பிரச்சினை விஸ்பரூபம் எடுத்துள்ளது. மனிதாபிமானமற்ற முறையில் எவ்வித இறையச்சமுமில்லாது செயற்பட்டவர்களின் செயலே இது. இவர்களை கண்டறிந்து சட்டநடவடிக்கை எடுக்க தான் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், நீர் ஓடமுடியாதளவில் குறித்த நீரோடையில் சல்பீனியாக்கள் அடைத்துக்கிடக்கிறது. அதன் அடிப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான விலங்கு பாகங்கள் அடங்கிய கழிவுகள் தேங்கி உள்ளது. பகல்வேளைகளில் சல்பீனியாக்கள் ஒளித்தொகுப்பை செய்து காபனீரொட்சைட்டை உள்ளீர்த்து ஓட்சிசனை வெளியிடுகிறது. இரவில் சல்பீனியாக்கள் சுவாசிப்பதன் மூலம் ஓட்சிசனை உள்ளீர்த்து காபனீரொட்சைட்டை வெளியேற்றுகிறது. இதனால் பகலில் ஓட்சிசன் செறிவு கூடுதலாகவும், இரவில் குறைவாகவும் இருப்பதனால் ANEROVIC பக்றியாக்கள் சிறப்பாக தொழிற்பாடுகிறது. இந்த தொழிற்பாட்டின் முலமே இரவில் துர்நாற்றம் வீசுவதாக எண்ணுகிறேன். இரவு நேரத்தில் அழுகிய நிலையில் உள்ள விலங்கு கழிவுகளுடன் ANEROVIC பக்றியாக்கள் தொழிற்படுவதனால் ஏற்படும் அழுகிய முட்டை வாசத்தை கொண்ட ஹைட்ரஜன் சல்பைட் வாயு வெளியாகிறது. இந்த வாயுவானது வெப்பநிலை மாற்றம் காரணமாக இரவில் தரையிலிருந்து கடலை நோக்கி காற்றும் வீசும்போது ஊருக்குள் நாற்றம் வீசுவதாக தான் ஊகிப்பதாக தெரிவித்தார்.
இப்பிரச்சினைக்கு தீர்வை காணும் நோக்கில் நீர்ப்பாசன திணைக்களம், பொலிஸார், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை போன்ற நிறுவனங்களுடன் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
இந்த களப்பணியில் கல்முனை மாநகர சுகாதாரப்பிரிவின் தவிசாளரும், மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி ரோஷன் அக்தர், மாநகர சுகாதாரப்பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி யூ.எல்.எம். இசாக், சுகாதார மேற்பார்வையாளர் அத்ஹம் , சுகாதார ஊழியர்கள், வாகன சாரதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment