“யாதும் ஊரே; யாவரும் கேளீர்” என்ற பூங்குன்றனார் கூற்றை மெய்ப்பித்துள்ளீர்கள்..!



<இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மனோ கணேசன் நன்றி தெரிவித்து உரை>
பொருளாதார நெருக்கடி எங்களுக்கு புதிதல்ல. வடகிழக்கில் யுத்தம் காரணமாகவும், மலைநாட்டு தோட்டங்களில் யுத்தமில்லாமலும் பல்லாண்டுகளாக இந்த “உணவில்லை, மருந்தில்லை” என்ற பொருளாதார நெருக்கடி விடயங்கள் நிலவின. ஆகவே அவை எமக்கு புதிதல்ல. ஆனால், இந்நாட்டின் ஒட்டு மொத்த மக்களுக்கு இன்றைய நெருக்கடி புதிது. ஆகவேதான் நாடு முழுக்க போராட்டங்கள் நிகழ்கின்றன.

இந்த பின்னணியில், தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இலங்கையருக்கும் உதவ தீர்மானித்து, அதற்காக இந்திய ஒன்றிய அரசின் அனுமதியையும், இலங்கை அரசின் ஒப்புதலையும் பெற்றதன் மூலம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, எங்கள் தமிழறிஞர் கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே; யாவரும் கேளீர்” என்ற கூற்றுக்கு மெய்யான சமகால அர்த்தத்ததை வெளிப்படுத்தி உள்ளீர்கள் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை விளித்து இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், இலங்கை தலைநகர கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
தமுகூ தலைவர் மனோ கணேசன் பா.உ. தனது உரையில் மேலும் கூறியுள்ளதாவது,
இலங்கை ஒருபோதும் இல்லாத விதத்தில் நெருக்கடியை சந்தித்த இவ்வேளையில், இதற்கு எவர் பொறுப்பு கூற வேண்டும் என இச்சபையில் சண்டை இடும் இவ்வேளையில், இருண்ட குகைக்குள் ஒரு ஒளிக்கீற்றாக நிகழ்ந்த ஒரு நிகழ்வை இந்த மாமன்றத்தின் கவனத்துக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், தலைநகர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறைகளில் கொண்டு வர விரும்புகிறேன்.

இந்தியாவின் தமிழ் மாநில தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழக முதல்வர் கெளரவ மு.க. ஸ்டாலின், கண்ணீரால் சூழ்ந்துள்ள இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்காகவும் நிவாரண உதவிகளாக அரிசி, பால்மா, மருந்து ஆகியவற்றை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். அதற்கான ஒன்றைய அரசின் அனுமதியையும், இலங்கை அரசின் ஒப்புதலையும் அவர் பெற்றுள்ளார்.
ஆரம்பத்தில் இலங்கையில் வாழும் தொப்புள் கொடி உறவுகளான தமிழருக்கு மாத்திரம் உதவ போகின்றோம் என முதல்வர் கூறிய போது, இலங்கை வாழ் தமிழக வம்சாவளி மலையக தமிழர் சார்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவராக நானும், வடகிழக்கில் வாழும் இலங்கை வம்சாவளி ஈழத்தமிழர் சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக நண்பர் சுமந்திரனும், ஒரு செய்தியை நேரடியாகவும், ஊடகங்கள் மூலமாகவும் முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பினோம்.
“முதல்வர் அவர்களே, இலங்கையில் இன்று நாம் அனைவரும் நெருக்கடியில் இருக்கின்றோம். நாம் அனைவரும் போராடுகிறோம். சிங்களவர், தமிழர், முஸ்லிம், பெளத்தர், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவர் என்ற பேதங்களை மறக்க ஆரம்பித்துள்ளோம். ஆகவே உங்கள் உதவிகள் எமது நாட்டின் அனைவருக்குமாக அனுப்பி வையுங்கள்” என கோரினோம்.

முதல்வர் இதை சடுதியாக புரிந்துக்கொண்டு, மனதை உருக்கும் விதத்தில் சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தினார். ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் உதவிடுவதாக கூறினார். அது தம் கடமை என்றார். இலங்கை நாட்டையோ, இலங்கை மக்களையோ, பிற நாட்டவராக பார்க்க தோன்றவில்லை என்றார். எங்கள் கண்கள் கலங்க அவரது உரையை நாம் செவி மடுத்தோம்.

இலங்கை மக்களின் பசியை போக்கும் அதேவேளை, பால்குடி பாலகர்களின் அழுகையை போக்கும் அதேவேளை, நோய் நொடிகளை போக்கும் அதேவேளை, தமிழ், சிங்கள மக்களுக்கும், தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையில் வரலாற்றுரீதியாக நிலவிய சந்தேகங்கள், அச்சங்கள், ஆகியவற்றையும் போக்கும் பாதையில் இது முதலடியாக அமைந்துள்ளது.

தெற்கிலும், வட-கிழக்கிலும் வாழும் தமிழ் மக்களின் எதிர்காலம், சிங்கள மக்களுடனும், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுடனும் பின்னி பிணைந்துள்ளது. இதுதான் இலங்கை இனப்பிரச்சினையின் அடிப்படை. இதை இன்று தமிழக முதல்வர் புரிந்துக்கொண்டுள்ளார் என நம்புகிறேன். தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறோம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :