" இன்னும் மீசைக்கூட முளைக்கவில்லை, அதற்குள் அரசியலா.......?"
இவ்வாறு எள்ளி நகையாடி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வேட்பு மனு குழுவால், திருப்பியனுப்பட்ட மஹிந்த ராஜபக்சதான், பிற்காலத்தில் அரசியலில் கோலோச்சி, அதிஉயர் பதவிகளை வகித்தார்.
இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை இரண்டு தடவைகள் வகித்த அவர் தற்போது பிரதம அமைச்சராக செயற்பட்டுவருகின்றார்.
அரசியல் களத்தில் சுழிவு, நெளிவு, வளைவு, ஏற்றம், தாழ்வு என அத்தனை அம்சங்களையும் கற்றரிந்து வைத்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நாளை (09) பதவி துறக்கின்றார்.
மஹிந்த ராஜபக்சவை கடவுளாகவும், மன்னராகவும் கருதியவர்கள்கூட அவருக்கு எதிராக இன்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். விகாரைகளுக்குகூட சுதந்திரமாக செல்ல முடியாத நிலை. புனித பூமியிலும் போராட்டம் வெடிக்கின்றது.
வெக்கப்பட்டு வேதனைப்பட்டு, துக்கப்பட்டு, துயரப்பட்டு மஹிந்த பதவி விலகிச் செல்வது, அவரின் விசுவாசிகளுக்கு விழி நீரைபெருக்கெடுக்க வைத்துள்ளது. அவர் அலரி மாளிகையில் வெளியேறபோகும் காட்சியும் நிச்சயம் அவர்களின் கண்களை, கண்ணீர் குளமாக்கும்.
தனது ஐந்து தசாப்தகால அரசியல் பயணம் தொடர்பில் 2020 ஜுன் 08 ஆம் திகதி சுயாதீன தொலைக்காட்சிக்கு நேர்காணலொன்றை மஹிந்த வழங்கியிருந்தார்.
( இது தொடர்பில் 2020 இல் எனது முகநூலில் நான் பதிவொன்றை பதிவிட்டிருந்தேன். அப்பதிவு சிறு திருத்தங்களுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது.)
குறித்த நேர்காணலில் மஹிந்த ராஜபக்ச தனது ஆரம்ப கால அரசியல் பயம் குறித்து கூறியதாவது,
" 1967 இல் எனது தந்தை (டி.ஏ. ராஜபக்ச) உயிரிழக்கும்போது ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் ரஷ்யாவில் இருந்தார். இதனால் பிரிதொரு நாளிலேயே அவர் எங்கள் வீட்டுக்கு வந்தார்.
பெலியத்த தொகுதியில் களமிறங்குவதற்கு மகன் ஒருவரை அனுப்புமாறு அம்மாவிடம், அவர் கேட்டார். இதன்படி அண்ணன் சமல் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர் முடியாது எனக் கூறிவிட்டு, எனது பெயரை பரிந்தரைந்தார்.
இதனையடுத்து நான் வேட்புமனு குழுவுக்கு நேர்முகத்தேர்வுக்காக சென்றிருந்தேன். பண்டாரநாயக்க அம்மையார், மைத்திரிபால சேனாநாயக்க உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள் அக்குழுவில் இருந்தனர்.
" இன்னும் மீசைக்கூட முளைக்கவில்லை. எப்படி தேர்தலை எதிர்கொள்வீர்கள், வாய்ப்பை சமலுக்கு வழங்குமாறு" அவர்கள் எனக்கு அறிவுரை கூறினர். அவ்வாறு கூறியவர்களிடம் எனது தரப்பு நியாயத்தை முன்வைத்தேன்.
ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் சிரித்தார். எனது அம்மாவுடன் கலந்துரையாடி முடிவொன்றை எடுப்பதாகக்கூறி என்னை அனுப்பிவைத்தனர். இறுதியில் வாய்ப்பு கிடைத்தது. தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றேன்."என்று குறிப்பிட்டிருந்தார்.
1970 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பெலிஅத்த தொகுதியில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ச 23,103 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். அத்தேர்தலில் வெற்றிபெற்று இளம் உறுப்பினராக சபைக்கு தெரிவானார்.
1977 இல் நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும் அதன்பின்னர் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் அவர் தோல்வி கண்டதில்லை.
2005 , 2010 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் வெற்றிபெற்றிருந்தார். 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்டார். இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர் என்ற சாதனையும் மஹிந்த வசமே உள்ளது.
சுயாதீன தொலைக்காட்சியின் இடம்பெற்ற மஹிந்தவின் நேர்காணல்
https://www.youtube.com/watch?v=Su_uddc3MXk
0 comments :
Post a Comment