சஜித்தின் ‘எதிர்க்கட்சித் தலைவர் பதவி’க்கு ஆபத்தா?



ஆர்.சனத்-
இடைக்கால அரசில் பதவிகளை ஏற்காதிருக்க மொட்டு கட்சி முடிவு!
மஹிந்த பதவி விலகினால்,புதியவரை பெயரிடவும் மறுப்பு
மஹிந்தவின் இறுதி முடிவு 04 ஆம் திகதி
சஜித்தின் ‘எதிர்க்கட்சித் தலைவர் பதவி’க்கு ஆபத்தா?
அரசியல்வாதிகளுக்கு மல்வத்துபீடம் தடை விதிப்பு
ஹரின் குறித்து சஜித்திடம் பொன்சேகா முறைப்பாடு

லங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால் பொருளாதார நெருக்கடியும் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து, இக்கட்டான திசையை நோக்கி நாடு பயணித்துக்கொண்டிருக்கின்றது. இந்நெருக்கடி நிலைமையிலிருந்து மீள்வதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதன் ஓர் அங்கமாக இடைக்கால அரசமைக்கும் திட்டத்துக்கு ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கொள்கை அளவில் இணக்கம் வெளியிட்டுள்ளது. இது சம்பந்தமாக இறுதி முடிவு எட்டப்படவில்லை. மொட்டு கட்சியின் உறுதியான நிலைப்பாடும் தெரிவிக்கப்படவில்லை.
ஆளுங்கூட்டணியின் தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (02) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் அதன் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச, பிரதான செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், ஊடக செயலாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன, அமைச்சர் ரமேஷ் பத்திர ஆகியோரும் -
சுயாதீன அணிகளின் சார்பில் சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா, அநுரபிரியதர்சன யாப்பா, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில மற்றும் டிரான் அலஸ் ஆகியோரும் பங்கேற்றனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகளின் உறுப்பினர்களுக்கும் இடையில் ஏப்ரல் 29 ஆம் திகதி நடைபெற்ற சந்திப்பின்போது, சர்வக்கட்சி இடைக்கால அரசமைப்பதற்கு இணக்கம் எட்டப்பட்டது.
இது சம்பந்தமாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டதுடன், அதற்காக ஐவரடங்கிய பேச்சு குழுவொன்று அமைக்கப்பட்டது.
இதன்பிரகாரமே ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன், உத்தேச சர்வக்கட்சி இடைக்கால அரசு சம்பந்தமாக இன்று பேச்சு நடத்தப்பட்டது.
“ தேசிய இணக்கப்பாட்டு அரசியல் தொடர்பில் மகாநாயக்க தேரர்களும், சகோதர அரசியல் கட்சிகளும் யோசனைகளை முன்வைத்திருந்தன. இதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம் தெரிவித்தது. “ - என மேற்படி சந்திப்பின் பின்னர் மொட்டு கட்சி எம்.பியான சஞ்ஜீவ எதிரிமான்ன தகவல் வெளியிட்டார்.
ஜனாதிபதி பதவியில் கோட்டாபய ராஜபக்ச நீடிக்கும் நிலையில், புதிய பிரதமரின்கீழ் இடைக்கால அரசு அமைக்கும் திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி போன்ற பிரதான எதிர்க்கட்சிகள் நிராகரித்துவிட்டன. ஜனாதிபதியும் பதவி விலகியே ஆக வேண்டும் என்பதில் அக்கட்சிகள் விடாப்பிடியாக நிற்கின்றன. தன்னெழுச்சி போராட்டத்தில் பங்கேற்றுள்ள மக்களின் ஒருமித்த நிலைப்பாடும் இதுவாகவே உள்ளது.
எனவே, இந்த தேசிய இணக்கப்பாட்டு அரசுக்கு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பை பெறுவதில் உள்ள நெருக்கடி நிலை குறித்தும் சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது.
“நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கவே உத்தேசிக்கப்பட்டது. அமைச்சரவையில் அங்கம் வகித்து செயற்பட விருப்பம் இல்லாதவர்கள், தேசிய சபை ஊடாக, நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்கலாம்.” - என யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
“இதற்காக அனைத்து கட்சிகளையும் இணங்க வைக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கும் உள்ளது. அதற்கான அழுத்தத்தை அவர்கள் பிரயோகிக்க வேண்டும்.” - என சுயாதீன அணிகளின் சார்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது
உத்தேச திட்டம் பற்றியே இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது. பிரதமர் பதவி பற்றியோ அல்லது ஏனைய விடயங்கள் குறித்தோ இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
இவ்வாறு தேசிய இணக்கப்பாட்டு அரசுக்கு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்தது எனக் கூறப்பட்டாலும், அவ்வாறானதொரு அரசில் மொட்டு கட்சி இணையாது என உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“ மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை ஏற்று பிரதமர் பதவி விலகினால், அப்பதவிக்கு மொட்டு கட்சி உறுப்பினர் எவரும் பிரேரிக்கப்படமாட்டார்கள். அதற்கு மக்கள் ஆணையில்லை.” என சந்திப்பின்போது பஸில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். இடைக்கால அரசில் மொட்டு கட்சி உறுப்பினர்கள் அமைச்சு பதவிகள் எதையும் ஏற்கமாட்டார்கள் எனவும் தெரியவருகின்றது.
எதிர்வரும் 04 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார். அந்த அறிவிப்பு பதவி துறப்பு அறிவிப்பாகவே இருக்கக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஆபத்தா?
இதற்கிடையில் இடைக்கால அரசியல் இணையுமாறு தனக்கு 24 மணிநேரமும் அழைப்பு வருவதாகவும், இணங்காவிட்டால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிக்கப்படும் என சிலர் மிரட்டல்களைக்கூட விடுப்பதாகவும் பரபரப்பானதொரு தகவலை எதிரக்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.
தனது தலையே போனாலும் பரவாயில்லை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கீழான இடைக்கால அரசுக்கு ஒருபோதும் தயாரில்லை என மக்கள் முன் சத்தியம், செய்து, இடைக்கால அரசு யோசனைய நிராகரித்துவிட்டார் சஜித். கொள்கை அரசியலுக்காக எதிர்க்கட்சித் தலைவர் பதவி மட்டுமல்ல, எந்தவொரு பதவியையும் இழக்க தான் தயார் எனவும் அவர் அறிவித்துவிட்டார்.
எந்த தரப்பை இலக்கு வைத்து சஜித் இவ்வாறு சொற்கணைகளை ஏவினார் என தெளிவாக தெரியவில்லை, சிலவேளை சஜித்துக்குள் கட்சிக்குள்ளும் அழுத்தம் இருக்கலாம் என்பது மட்டும் புரிகின்றது. ‘தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளுங்கள்’ என்ற வசனத்தையும் சஜித் தற்போது அடிக்கடி உச்சரிக்கின்றார்.
‘எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிக்கப்படும் - பறிபோகலாம்’ என சஜித்துக்கு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அச்சுறுத்தல் தொடர்பில் பலகோணங்களில் தற்போது கருத்தாடல் உருவாகியுள்ளது.
ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலக வேண்டும் என நாட்டு மக்கள் ஓரணியில் திரண்டு கோரிவரும் நிலையில், சஜித் எப்படி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழப்பார், அதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளனவா என பலரும் வினாக்களை தொடுக்கின்றனர்.
இலங்கை அரசியல் கட்டமைப்பில் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆகியோருக்கு அடுத்தப்படியாக அதிக அதிகாரம் - சிறப்புரிமைகள் - சலுகைகள் உள்ள பதவியாக எதிர்க்கட்சித் தலைவர் பதவி விளங்குகிறது. அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சரைவிடவும் ஒருபடி மேல் எனலாம். எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிப்பவரே நிழல் பிரதமராகவும் கருதப்படுபார். வெளிநாட்டு இராஜதந்திரிகள்வந்தால்கூட எதிர்க்கட்சித் தலைவர்களுடன் அதிகாரப்பூர்வ சந்திப்பை நடந்துவது வழமை.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, அதிகூடிய ஆசனங்களை வெல்லும் கட்சி ஆளுங்கட்சியாக பரிணமிக்கும். அதற்கு அடுத்தப்படியாக ஆசனங்களைப்பெற்ற கட்சி பிரதான எதிர்க்கட்சிக்குரிய அந்தஸ்த்தை பெறும். இவ்விரு கட்சிகளும் இணைத்து கூட்டு அல்லது தேசிய அரசமைத்தால் - இவற்றுக்கு அடுத்தபடியாக ஆசனங்களை பெற்ற கட்சிக்கு அப்பதவி சென்றடையும்.
2015 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 106 ஆசனங்களை பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியும், அதற்கு அடுத்தப்படியாக 95 ஆசனங்களை பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் தேசிய அரசமைத்தன. இதனால் 16 ஆசனங்களை பெற்றிருந்த இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு பிரதான எதிர்க்கட்சி பதிவி கிட்டியது. கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவரானார். 2015 செப்டம்பர் 03 ஆம் திகதி முதல் 2018 டிசம்பர் 17வரை அப்பதவியில் நீடித்தார்.
தேசிய அரசுக்கு, ஐக்கிய மக்கள் சுதந்தி கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ச தரப்பு கடும் எதிர்ப்பை வெளியிட்டது. மஹிந்த தலைமையில் சுமார் 54 பேர் எதிரணியில் இருந்து செயற்பட முடிவெடுத்தனர். ‘கூட்டு எதிரணி’ என பெயர் சூடியும் கொண்டனர். தமது பக்கம் 54 பேர் இருப்பதால், எதிர்க்கட்சித் தலைவர் பதவி வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கையும் முன்வைத்தனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவராக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பொதுச்செயலாளராக மஹிந்த அமரவீரவும் செயற்பட்டனர். இவர்கள் தேசிய அரசில் இடம்பெற்றிருந்தனர்.
“ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசிலிருந்து விலகவில்லை. இது உங்களின் உட்கட்சி விவகாரம், முதலில் அதனை தீர்த்துக்கொள்ளுங்கள். கட்சி பிரச்சினையை சபாபீடத்தில் முன்வைப்பது உகந்தது அல்ல.” - என அப்போதைய சபாநாயகர் கருஜயசூரிய திட்டவட்டமாக அறிவித்தார்.
பின்னர் 2018 ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சியின்போதே அரசிலிருந்து வெளியேறும் அறிவிப்பை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு விடுத்தது. அதன்பின்னர் 2018 டிசம்பர் 18 ஆம் திகதியே எதிர்க்கட்சித் தலைவர் பதவி மஹிந்தவுக்கு கிட்டியது.
அந்தவகையில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களை வைத்து ஜனாதிபதி இடைக்கால அரசு அமைத்தால் அதில் மொட்டு கட்சி உறுப்பினர்கள் 13 பேர்வரை அதற்கு ஆதரவு தெரிவிக்கக்கூடும். எனவே, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைகோரும் தார்மீது உரிமை மொட்டு கட்சிக்கு இருக்காது என்றே சுட்டிக்காட்டப்படுகின்றது. எனினும், எதிர்க்கட்சிக்கான உரிமையை மொட்டு கட்சி கோரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சபாநாயகரும் ராஜபக்ச முகாமை சார்ந்தவர்.
இடைக்கால அரசு அமையும் பட்சத்தில் மொட்டு கட்சி வெளியில் இருந்து ஆதரவை வழங்கலாம்.
அதேவேளை, அரசியல் நெருக்கடி தீரும்வரை எந்தவொரு அரசியல்வாதியையும் சந்திப்பதற்கு அனுமதி வழங்குவதில்லை என மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் தீர்மானித்துள்ளார். மகாநாயக்க தேரர்களால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் நிறைவேற்றப்படாததாலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஹரின் குறித்து முறைப்பாடு
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் சரத் பொன்சேகாவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவுக்கும் இடையில் நேற்று முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் சுதந்திர சதுக்க வளாகத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே இருவரும் பொதுவெளியில் முரண்பட்டுக்கொண்டனர்.
மே தினத்துக்கான ஏற்பாடுகளை ஹரின் பெர்ணான்டோவே மேற்கொண்டிருந்தார்.
பேச்சாளர்களுக்கான பெயர் பட்டியலில் பொன்சேகாவின் பெயர் இருக்கவில்லை. இது தொடர்பில் ஹரினை அழைத்து, பொன்சேகா வினவியபோது இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது சிறு மோதலாக மாறியது.
ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர் மனுச நாணயக்கார ஆகியோர் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்தினர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது. மேற்படி சம்பவம் குறித்து இதன்போது பேசப்பட்டது. பல உறுப்பினர்கள் பொன்சேகாவின் செயலைக் கண்டித்துள்ளனர். இந்நிலையில் ஹரினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி, கட்சித் தலைவரிடம் முறையிடப்படும் என பொன்சேகா இன்று குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :