1964 ஒக்டோபர் 30 ஆம் திகதி சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்திய வம்சாவளி மக்களின், குடியுரிமைப் பிரச்சினைக்கு ஓர் தீர்வாக இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்படுகின்றது என அதிகார வர்க்கத்தால் நியாயம் கற்பிக்கப்பட்டிருந்தாலும், - மலையக மக்கள் திட்டமிட்ட அடிப்படையில் நாடு கடத்தப்பட்டனர் என்பதே கசப்பான உண்மையாகும்.
64 காலப்பகுதியில் இலங்கையில் வாழ்ந்த சுமார் 9 லட்சத்து 75 ஆயிரம் இந்திய வம்சாவளி மக்களுள், 5 லட்சத்து 25 ஆயிரம் பேரை இந்தியாவுக்கு அனுப்புவதற்கும், 3 லட்சம் பேருக்கு இலங்கையில் குடியுரிமை வழங்குவதற்கும், மீதமுள்ள ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேரை, 50 இற்கு 50 என்ற அடிப்படையில் கையாளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ்வொப்பந்தம் அமுலுக்கு வந்த பின்னர், உறவுகள் பிரிக்கப்பட்டு, 'மனித ஏற்றுமதி' நடக்கும் பேரவலம் உருவானது. மலையக பகுதியிலிருந்து தலைமன்னார் பகுதிக்கு புகையிரதத்தில் பயணித்தனர். அந்த காலகட்டத்தில் புகையிரத நிலையங்கள் கண்ணீர் குளமாகவே காட்சியளிக்கும். உறவுகள் அழுதபடி ரயிலில் பயணித்தனர். இதனால்தான் 'ஒப்பாரி கோக்கி' என அது அழைக்கப்பட்டது.
சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் தன்னிச்சையான முறையில் கைச்சாத்திடப்பட்டதால், சுதந்திரக்கட்சி அரசை அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் கடுமையாக எதிர்த்தார்.
சிறிமாவோ பண்டாரநாயக்கவால், சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு, நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டிருந்தாலும், அரசின் இருப்புக்கு ஆபத்து ஏற்பட்டவேளை, அரசுக்கு சார்பாக வாக்களிக்க அவர் மறுத்தார்.
1964 டிசம்பர் 03 ஆம் திகதி நாடாளுமன்றத்தில், நன்றியுரையின்போது ஶ்ரீமா அரசு தோற்கடிக்கப்பட்டது. குறித்த பிரேரணைமீதான வாக்கெடுப்பின்போது தொண்டமான் நடுநிலை வகித்தார். அவரின் ஒரு வாக்கே தீர்மானிக்கும் சக்தியாக அமைந்திருந்தது.
இதனால் சௌமியமூர்த்தி தொண்டமான்மீது சிறிமாவோ அம்மையார் கடுப்பில் இருந்தார். 70 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சுதந்திரக்கட்சி வரலாற்று வெற்றியை பதிவு செய்திருந்த நிலையில், செளமியமூர்த்தி தொண்டமானுக்கு, பதிலாக அசீஸை நியமன எம்.பியாக்கினார்.
1981 இல் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் அமீர்தலிங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்தபோதுகூட, ஜே.ஆரின் அமைச்சரவையில் இருந்துகொண்டே அதனை கடுமையாக எதிர்த்தார்.
அமரர் சௌமியமூர்த்தி அரசியல் பயணத்தில், 'சமூகத்துக்கான அரசியல் பயணம்' என்ற விடயத்தில் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், அரசுக்குள் இருந்துகொண்டே, அரசை எதிர்க்கும் பக்குவம் அவருக்கு அன்றிருந்தது.
1999 இல் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் உயிரிழந்த பிறகு, காங்கிரஸின் தலைமைப்பொறுப்பு, ஆறுமுகன் தொண்டமான் வசமானது.
இதனால் இ.தொ.காவிலிருந்து இராஜரட்னம் ( கண்டி மாவட்டத்திலிருந்து விகிதாசார தேர்தல் முறையில் தெரிவான முதல் தமிழ் எம்.பி.) சென்னன், யோகராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வெளியேறினர். இதனால் கடும் சவாலுக்கு மத்தியிலேயே கட்சி - தொழிற்சங்கத்தை பலப்படுத்த வேண்டிய நிலை அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு ஏற்பட்டது. அந்த முயற்சியில் அவர் வெற்றிகண்டார்.
ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து தேர்தல்களில் போட்டியிட்டிருந்தாலும் 2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் ராஜபக்சக்களுடன்தான் ஆறுமுகனின் நல்லுறவு நீடித்தது. நாடாளுமன்ற நடவடிக்கைமூலம் அரசின் செயற்பாடுகளை அவர் எதிர்த்தது குறைவு. எனினும், மலையக சமூகத்துக்கு ஒர் 'உளவியல்' பலமாக விளங்கினார்.
88 காலப்பகுதியில் இந்திய வம்சாவளி மக்களுக்கு பல தரப்புகளின் முயற்சியால் குடியுரிமை
கிடைக்கப்பெற்றிருந்தாலும், இந்திய கடவுச்சீட்டை பெற்றிருந்த ஒரு தரப்புக்கு வழங்கப்படவில்லை. அந்த பிரச்சினைக்கு 2003 இல் ஆறுமுகன் தொண்டமான் தீர்வை பெற்றுக்கொடுத்திருந்தார்.
அமரர் ஆறுமுகன் தொண்டமானை, மூன்று தடவைகள் தொழில்சார் நடவடிக்கைக்காக நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளேன்.
அவ்வேளைகளில், வடக்கு, கிழக்கு அரசியலுடன் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு தொடர்பு இருந்தது, வடக்கு கட்சிகளுடன் கூட்டணிகூட அமைத்திருந்தார். தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்துள்ளார், அரசுகளை எதிர்த்துள்ளார், அந்த அணுகுமுறை ஏன் உங்களிடம் இல்லை என கேட்டிருந்தேன்.
" நான் 13 ஆவது திருத்தச்சட்டத்தை எதிர்க்கின்றேனா, பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு ஆதரவாக பேசியுள்ளேனா, வடக்கு, கிழக்கு தமிழ்க்கட்சிகள் முன்வைக்கும் ஏதேனும் திட்டத்தை எதிர்த்துள்ளேனா..." என என்னிடம் வினவினார்.
எனக்கு தெரிந்தமட்டில் 'இல்லை' என பதிலளித்தேன். அப்படியானால் எனது வினாக்களில் விடையும் உள்ளது என குறிப்பிட்டார்.
அமரர் ஆறுமுகன் தொண்டமான், உயிரிழந்து இன்றுடன் ஈராண்டுகள் ஆகின்றன.
காங்கிரஸின் தலைமைப்பொறுப்பு தற்போது செந்தில் தொண்டமான் வசம் உள்ளது. ஆறுமுகன் தொண்டமானின் மகனான ஜீவன் தொண்டமான் பொதுச்செயலாளராக செயற்படுகின்றார்.
நாடாளுமன்ற நடவடிக்கை ஊடாக 'அதிகார வர்க்கத்தை' எதிர்க்கும், அந்த துணிவு மீண்டும் வந்துள்ளது. ஜனாதிபதிக்கு அதிருப்தி தெரிவிக்கும் பிரேரணையை விவாதத்துக்கு எடுக்க வேண்டும் என்பதற்கு இ.தொ.கா. எம்.பிக்கள் இருவரும் ஆதரவாக வாக்களித்தனர். ஆளுந்தரப்பு முன்னிறுத்திய பிரதி சபாநாயகர் வேட்பாளரை ஆதரிக்காமல், எதிரணிக்கு நேசக்கரம் நீட்டினர். சலுகை என்பதற்கு அப்பால் உரிமை என்பதில் உறுதியாக நிற்கும் முடிவை காங்கிரஸ் எடுத்துள்ளது.
விமர்சனங்கள் உள்ளன, கொள்கை முரண்பாடுகளும் இருக்கின்றன. எனினும், நெருக்கடியான சந்தர்ப்பங்களில் மக்கள் பக்கம் இன்று காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது. இதனால் இழந்த பலத்தை மீண்டும் பெற்றுவருகின்றது. எனவே, தமிழகத்தால் வழங்கப்பட்டுள்ள நிவாரண விடயத்தில் கட்சி அரசியல் நடத்தியும், தொடர் அறிக்கை அரசியலாலும் மீண்டும் பின்நோக்கிய நிலைக்கு காங்கிரஸ் சென்றுவிடக்கூடாது.
0 comments :
Post a Comment