பிரதமர் பதவியை ஏற்க தயார் - சம்பிக்க அறிவிப்பு



ஆர்.சனத்-
பிரதமர் பதவியை ஏற்க தயார் - சம்பிக்க அறிவிப்பு
கடாபியின் வழியில் மஹிந்த - நந்திக்கடலாக மாறிய பேரவாவி

" பிரதமர் மஹிந்த ராஜபக்ச அமைதியான முறையில், கௌரவமாக பதவி விலகி இருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. தவறான வழியை தேர்ந்தெடுத்துவிட்டார். அதன் விளைவாகவே பேரவாவி, நந்திக்கடலாக மாறியது.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், 43 ஆம் படையணியின் ஸ்தாபகத் தலைவருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
தெரண தொலைக்காட்சியில் நேற்றிரவு ஒளிபரப்பான ‘360’ எனும் அரசியல் நிகழ்வில் பங்கேற்றிருந்த சம்பிக்க ரணவக்க, நாட்டில் நேற்று ஏற்பட்ட சம்பவத்துக்கு மஹிந்த ராஜபக்சவே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
“ அமைதிவழியில் தீர்த்துக்கொள்ளக்கூடியதாக இருந்த பிரச்சினையை, தனது திமிர்தனத்தால் வன்முறைமூலம் தீர்க்க மஹிந்த ராஜபக்ச முற்பட்டதாலேயே, நாட்டில் இன்று சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.” எனவும் சம்பிக்க குறிப்பிட்டார்.
“ மஹிந்த ராஜபக்சவுக்கு அரசியல் அனுபவம் இருப்பதால், பேர்டினண்ட் மார்கோஸ்போல அமைதியாக வெளியேறுமாறு நான் கோரியிருந்தேன்.அவ்வாறு இல்லாமால் கடாபிபோல் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டால், இறுதியில் அந்த வன்முறைப்பொறிக்குள்ளேயே சிக்க நேரிடும் எனவும் சுட்டிக்காட்டிருந்தேன்.
இவ்விவகாரத்தில் மஹிந்த ராஜபக்ச மதிநுட்பத்துடன் செயற்படவில்லை. தவறான வழியையே தேர்வு செய்திருந்தார். அதன் விளைவாகவே பேரவாவி, நந்திக்கடலாக மாறியது. “ எனவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை , பிரதமர் பதவியை ஏற்பதற்கு தான் தயாரென அறிவித்த சம்பிக்க ரணவக்க, அதற்காக ஒரிரு நிபந்தனைகளையும் முன்வைத்தார்.
நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிகள் ஒன்றிணைந்து, பொதுவானதொரு வேலைத்திட்டத்துக்கு வந்தால் -
வீடு, வாகனம், கொடுப்பனவு என எவ்வித வரப்பிரதாசங்களையும் அனுபவிக்காமல், நாட்டுக்கு சேவையாற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வந்தால் -
இலங்கை மத்திய வங்கி, மின்சார சபை உள்ளிட்ட துறைகள் தொழில்சார் நிபுணர்களின் பயங்களிபுடன் இயங்கினால் -
அதேபோல ஆன்மீகத் தலைவர்கள், சட்டத்தரணிகள் சங்க பிரதிநிதிகள், போராட்டக்காரர்கள் எமது நடவடிக்கையை கண்காணிக்க முன்வந்தால் - எந்தவொரு சவாலையும் ஏற்க தயார் என்றார் சம்பிக்க ரணவக்க.
ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டியலில் நாடாளுமன்றம் தெரிவாகியிருந்தாலும், அக்கட்சியுடன் சம்பிக்க ரணவக்கவுக்கு தற்போது முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது. சஜித் அணியால் ஏற்பாடு செய்யப்பட்ட மேதினக்கூட்டத்தில்கூட சம்பிக்க ரணவக்க பங்கேற்கவில்லை. 43 ஆம் படையணியை மையப்படுத்தியதாகவே அவரின் அரசியல் பயணம் தற்போது அமைந்துள்ளது.
( அறவழி போராட்டக்காரர்கள்மீது நேற்று தாக்குதல் நடத்திய ஆளுங்கட்சி ஆதரவாளர்களில் சிலர், மக்களிடம் சிக்கினர். அவ்வாறு சிக்கியவர்களை மக்கள் பேரவாவியில் தள்ளிவிட்டனர். அந்த சம்பவத்தைதான், நந்திக்கடலுடன் ஒப்பிட்டு அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.)


'360' முழுமையான நிகழ்ச்சியை காண....
https://www.youtube.com/watch?v=gyH8gnELbfw&t=767s
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :