கல்முனை பிராந்தியத்திலுள்ள அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் நோயாளிகளுடன் தங்கியுள்ளவர்களுக்கும் மற்றும் தூர பிரதேசங்களிலிருந்தும் கல்முனைக்கு பல்வேறு தேவைகளுக்காக வருகை தந்தவர்களுக்குமான இலவச ஸஹர் உணவு விநியோகிக்கும் செயற்றிட்டத்தினை இவ்வருடமும் கல்முனையன்ஸ் போரம் மிக வெற்றிகரமாக நடாத்தி முடித்துள்ளது.
தூர இடங்களிலிருந்து கல்முனை பிராந்தியத்திற்கு பல்வேறுபட்ட தேவைகளுக்காக வருகை தருபவர்கள் புனித நோன்பினை நோற்பதற்கான ஸஹர் உணவை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவது கல்முனையன்ஸ் போரத்தின் கவனத்திற்கு எட்டப்பட்டதினால் இச்செயற்றிட்டம் கடந்த நான்கு வருடங்களாக தொடர்ந்து தங்குதடையின்றி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் இவ்ரமழான் முழுவதும் மொத்தமாக 2540 ஸஹர் உணவு ஏற்பாடுகளை எவ்வித தடைகளுமின்றி உரிய ஸஹர் நேரத்திற்கு நோன்பாளிகளின் காலடிக்கே சென்று கல்முனையன்ஸ் போரத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
இவ்விநியோகமானது கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு 684 ஸஹர் உணவுப்பொதிகளும், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு 165 ஸஹர் உணவுப் பொதிகளும், சாய்ந்தமருது வைத்தியசாலைக்கு 161 ஸஹர் உணவுப்பொதிகளும், மெடிலேண்ட் தனியார் வைத்தியசாலைக்கு 199 ஸஹர் உணவுப்பொதிகளும், டாக்டர் ஜமீல் ஞாபகார்த்த தனியார் வைத்தியசாலைக்கு 257 ஸஹர் உணவுப் பொதிகளும், அஹமட் அலி தனியார் வைத்தியசாலைக்கு 263 ஸஹர் உணவுப் பொதிகளும்,கல்முனை ஆயுர்வேத வைத்தியசாலைக்கு 18 உணவுப்பொதிகளும், கல்முனை பொலிஸ் நிலையம் மற்றும் பாதுகாப்பு படையினரின் முகாமுக்கு 296 உணவுப்பொதிகளும், பள்ளிவாசல் முஅத்தின்மார்களுக்கு 152 ஸஹர் உணவுப் பொதிகளும், வெளியூர்களிலிருந்து இங்கு தங்கி கல்விகற்கிற மாணவர்களுக்கு 85 ஸஹர் உணவுப் பொதிகளும், இதர நிறுவனங்களில் பணிபுரிகிற ஊழியர்களுக்கு 260 உணவுப் பொதிகளும் என மொத்தமாக 2540 ஸஹர் உணவு பொதிகள் இவ் ரமழானில் நோன்பாளிகள் நோன்பு நோற்பதற்காக விநியோகிக்கப்பட்டிருக்கிறது.
மேற்படி ஸஹர் உணவானது ரமழான் காலத்தில் மாலை 5:00 மணியிலிருந்து இரவு 8:00 வரைக்கும் தொலைபேசியூடாக கிடைக்கப்பெறும் முன்பதிவுகள் அடிப்படையில் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment