அரசியல் களமும் எதிர்வுகூறல்களும்!!



ஆர்.சனத்-
'பதவி துறப்பு' - பிரதமர் மஹிந்த தொடர்ந்தும் அடம்பிடிப்பு!
'ஆட்சி கவிழ்ப்பு' - சஜித் நேரில் களமிறங்கி இரு முனை தாக்குதல் தொடுப்பு
பரபரப்புக்கு மத்தியில் கூடுகிறது பாராளுமன்றம்
சுயாதீன அணிகள் திடீர் 'பல்டி' - நிபந்தனையும் விதிப்பு
நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்க வாசு முடிவு

னாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அரசுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்விரு பிரேரணைகளும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் நேற்று (03) கையளிக்கப்பட்டன.
இதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேரில் களமிறங்கியிருந்தார். அவர் தலைமையிலான குழுவில் எதிரணி பிரதம கொறடா லக்‌ஷ்மன் கிரியல்ல, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர்களான கயந்த கருணாதிலக்க, எரான் விக்கிரமரத்ன, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.
நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை வெகு விரைவில் விவாதத்துக்கு உட்படுத்துமாறு சபாநாயகரிடம், எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
ஜனாதிபதி மற்றும் அவர் தலைமையிலான அரசுமீது நம்பிக்கையில்லை என்பதால் அனைத்து எம்.பிக்களும் பிரேரணைகளுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும், இதற்கு தேவையான அழுத்தங்களை மக்கள் பிரயோகிக்க வேண்டும் எனவும் சஜித் அழைப்பு விடுத்தார்.
அதேவேளை, நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி, இன்றைய தினமே, இவற்றை சபாநாயகர் விவாதத்துக்கு எடுக்கலாம் என எதிரணி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரத்தில் சபாநாயகர் பக்கச்சார்பாக செயற்பட்டால் அவருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் என சஜித் அணி எம்.பிக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குற்றப் பிரேரணை மூலமே ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ய முடியும், அப்படியானால் எதற்கு நம்பிக்கையில்லாப் பிரேரணை என்ற வினாவுக்கு, “ ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு பொறுப்புக்கூற வேண்டும், அதன் அடிப்படையிலேயே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டது.” என பதிலளித்தார்.
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேறினால் பிரதமர் மஹிந்த வீடு செல்ல நேரிடும். எனினும், ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேறினால் ஜனாதிபதியின் பதவிக்கு எவ்வித அச்சுறுத்தலும் வராது. ஆனால் நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை இழந்தவராக அவர் கருதப்படுவார். இது ஜனாதிபதிக்கு உளவியல் ரீதியில் தொடுக்கப்பட்ட தாக்குதலாகவும் பார்க்கப்படுகின்றது.
நாடாளுமன்றம் கூடுகிறது
நாடாளுமன்றம் இன்று (04) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. அதற்கு முன்னர் விசேட கட்சி தலைவர்கள் கூட்டமும் நடைபெறவுள்ளது .
இதன்போது இவ்வாரத்துக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள், நம்பிக்கையில்லாப் பிரேரணை உட்பட மேலும் சில விடயங்கள் குறித்து ஆராயப்படும். அவற்றை எப்போது விவாதத்துக்கு உட்படுத்துவது என்பது சம்பந்தமாகவும் கருத்துகள் முன்வைக்கப்படும்.
பிரதி சபாநாயகரின் இராஜினாமாகக் கடிதத்தை ஏற்றுவிட்டதாக ஜனாதிபதி, நாடாளுமன்றத்துக்கு இன்னும் தெரியப்படுத்தப்படாததால், அதற்கான தேர்வு, இன்று நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இது சம்பந்தமாக ஏதேனும் முடிவு எடுக்கப்படலாம்.
இதற்கிடையில் விசேட அறிவிப்பொன்றை விடுத்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று பதவி விலகுவார் என நேற்று தகவல் வெளியாகிருந்தாலும், பதவி விலகபோவதில்லை என்ற அறிவிப்பை பிரதமர் விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் அறிவிப்பொன்றை விடுத்தாலும், அது பதவி விலகலுக்கான அறிவிப்பாக இருக்காது என்பதே பிரதமரின் கருத்தாக உள்ளது.
ஜனாதிபதி கோரினால் மாத்திரமே தான் பதவி விலகுவார் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். இதனால் பிரதமர் பதவி குறித்த இழுபறி நிலை நீடிக்கின்றது.
இடைக்கால அரசு - சஜித் அணி மறுப்பு! 11 கட்சிகள் நிபந்தனை
ஐக்கிய மக்கள் சக்தியினருக்கும், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகளின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முற்பகல், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் இல்லத்தில் நடைபெற்றது.
தேசிய இணக்கப்பாட்டு அரசை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இச்சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, ராஜித சேனாரத்ன, ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன, கயந்த கருணாதிலக்க ஆகியோரும் -
சுயாதீன அணிகளின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபாலடி சில்வா, விமல் வீரவன்ச, உதய கம்மமன்பில, தயாசிறி ஜயசேகர, டிரான் அலஸ், நிமல் லான்சா ஆகியோர் பங்கேற்றனர்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை, பிரதி சபாநாயகர் தேர்வு உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக அலசி ஆராயப்பட்டுள்ளன.
ஜனாதிபதி பதவியில் கோட்டாபய ராஜபக்ச நீடிக்கும்வரை, இடைக்கால அரசில் இணைவது ஏற்புடைய விடயமல்ல என ஐக்கிய மக்கள் சக்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேசிய இணக்கப்பாட்டு அரசுக்கு எந்த அடிப்படையில் ஆதரவு வழங்கலாம் என்பது குறித்து கட்சி மட்டத்தில் கலந்துரையாடி முடிவு அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திப்பு மீண்டும் இடம்பெறவுள்ளது.
எனினும், தேசிய இணக்கப்பாட்டுக்கு ஐக்கிய மக்கள் சக்தி இணங்கினால் மட்டுமே, நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு என்ற நிபந்தனை சுயாதீன அணிகளின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமது கட்சி ஆதரிக்காது என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசு தேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்கும் நடைமுறைகள் எவை?
1. அரசாங்கம், பிரதமர், அமைச்சரவை போன்றன நாடாளுமன்றத்துக்கு பொறுப்புக்கூறவேண்டும். அந்தவகையில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கான காரணங்களை உள்ளடக்கிய பிரேரணை எம்.பிக்களின் கையொப்பத்துடன் சபாநாயகரிடம் கையளிக்கப்படும்.
அரசுக்கு எதிராக முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 'கட்டாயம் இத்தனை எம்.பிக்கள் கையொப்பம்' இட்டாக வேண்டும் என்ற எண்ணிக்கை வரையறை இல்லை.
2. இவ்வாறு கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை சட்டவலுவானதா என்பது தொடர்பில் சபாநாயகரால், நாடாளுமன்ற செயலாளரிடம் விளக்கம் கோரப்படும்.
3. மேற்படி பிரேரணையானது சட்டவலுவுடையது, நாடாளுமன்ற நிலையியற்கட்டளைக்கு உட்பட்டதென நாடாளுமன்ற செயலாளர் உறுதிப்படுத்திய பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இடம்பெறும்.
4. குறித்த யோசனை நாடாளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் உள்ளடக்கப்படும்.
5. நாடாளுமன்ற ஒழுங்கு புத்தகம் அச்சிடப்படும் எம்.பிக்களுக்கு பகிரப்படும்.
6. அதன் பின்னர் 5 வேலை நாட்களுக்கு பிறகு விவாதம் நடத்தலாம். எனினும், விவாதம் நடத்துவதற்கான திகதியை சபாநாயகர் தலைமையிலான நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவே தீர்மானிக்க வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் இக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
முக்கியத்துவம்மிக்க விவகாரமாக கருதி அண்மித்த காலப்பகுதியை விவாதத்துக்குரிய நாளாக ஒதுக்குவது சம்பிரதாயம். ஆனால் ஆளுந்தரப்புக்கு தேவை ஏற்படும் பட்சத்தில் இழுத்தடிப்புகளையும் செய்யலாம்.
7. விவாதத்துக்கான நாள் நிர்ணயிக்கப்பட்ட பின்னர் நாடாளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்கப்படும். குறித்தொகுக்கப்பட்ட நாளில் விவாதம் நடத்தப்படும். இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
8. வாக்கெடுப்பில் கலந்துகொண்டும் உறுப்பினர்களில் பெரும்பான்மையே வெற்றியை நிர்ணயிக்கும். நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றியளித்தால் அடுத்தக்கட்ட நகர்வுகள் ஜனாதிபதி ஊடாக மேற்கொள்ளப்படும்.
நம்பிக்கையில்லாப் பிரேணைமீதான விவாதத்துக்கு முன்னர், அரசு பதவி விலகினால் நம்பிக்கையில்லாப் பிரேரணை வலுவிழந்துவிடும். ஜனாதிபதி நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்தினால், மீண்டும் முன்வைக்க வேண்டிவரும்.
இலங்கை நாடாளுமன்றத்தில் முதலாவதாக டட்லி சேனாநாயக்க தலைமையிலான அரசுக்கு எதிராகவே நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டது. அதன் பின்னர் இற்றைவரை சுமார் 23 வரையான பிரேரணைகள் அரசுகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டன. இவற்றில் 2018 இல் முன்வைக்கப்பட்ட பிரேரணை மட்டுமே வெற்றிபெற்றது. ( 52 நாட்கள் அரசியல் சூழ்ச்சியின்போது)
அதுவும் ஒழுங்கு பத்திரம் உட்பட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை நிறுத்தவிட்டுதான், பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அவ்வாறு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஜனாதிபதி நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :