முஸ்லிம் திருமண சட்டம் என்பது இந்த நாட்டு முஸ்லிம்கள் பிரித்தானியர் ஆட்சிக்காலம் முதல் அனுபவிக்கும் தனியார் சட்டமாகும். இச்சட்டத்தை நீக்க வேண்டும் அல்லது திருத்த வேண்டுமென்ற கோரிக்கை இனவாதிகளாலும் ஐரோப்பாவுக்கு அடிமைப்பட்ட சில பெண்களாலும் முன்னெடுக்கப்பட்டு வந்தது என ஐக்கிய காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தலைவர் கலாபூஷணம் மௌலவி முபாரக் அப்துல் மஜீத், நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த கடிதத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது, எம்மை பொறுத்தவரை தற்போதுள்ள முஸ்லிம் திருமண சட்டத்தில் எத்தகைய திருத்தத்துக்கும் கை வைக்க வேண்டாம் என்றும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா மற்றும் உலமா கட்சியின் அனுமதியுடன் சில சரத்துகள் புதிதாக சேர்க்கப்பட வேண்டும் என்பதை ரவூப் ஹக்கீம் நீதி அமைச்சராக இருந்த காலம் முதல் வலியுறுத்தி வருகிறோம். இது விடயம் ஓர் இனவாத பிரச்சாரமாகவே முஸ்லிம் சமூகம் பார்ப்பதால் இது விடயத்தை அப்படியே இருப்பது போல் விட்டு விடும்படி நாம் கேட்டுக்கொள்கிறோம். இனவாத பிரச்சாரமே முஸ்லிம் திருமண சட்டம் பற்றிய கோஷங்களாகும். இக்கோஷத்தால் நாட்டுக்கு நலவு நடக்கவில்லை. கெடுதியும் இனங்களுக்கிடையில் மனக்கசப்புமே ஏற்பட்டுள்ளது.
அண்மையில் தாங்கள் பேசும் போது முஸ்லிம் திருமண சட்ட திருத்தம் சம்பந்தமாக முன் வைக்கப்பட்ட அறிக்கையில் நல்ல விடயங்களை சேர்ப்பதாக கூறியிருந்தீர்கள். ஒரு விடயம் நல்லதா கெட்டதா என்பது அவரவரின் சூழலை வைத்தே தீர்மானிக்கப்படும். உங்களுக்கு நல்லதாக தெரிவது எமக்கு கெட்டதாக தெரியும். ஆகவே எந்த திருத்தத்துக்கும் இடமளிக்க வேண்டாம் என கூறிவைக்க விரும்புகின்றோம். அதே போல் நாட்டில் 65 காதி நீதிமன்றங்கள் உள்ளன . 65 காதி நீதிபதிகளில் 20 பேர் பதவி இராஜினாமா , அல்லது பதவியிலிருந்து நீக்கப்பட்டமை அல்லது பதவி காலாவதியாகி விட்டமை காரணமாக வெற்றிடம் நிலவுகின்றன . தற்போது நீண்ட காலமாக இந்த காதி நீதிமன்ற பிரிவுகளின் செயற்பாடுகள் அருகிலிருக்கும் காதி நீதிமன்றங்களால் முன்னெடுக்கப்படுகின்றன . இதனால் காதி நீதிபதியொருவர் இரண்டு அல்லது மூன்று நீதிப் பிரிவுகளில் கடமை செய்ய வேண்டியுள்ளது . இது வேலைப் பளுமிக்கதாகும் .
இந்த 20 வெற்றிடங்களுக்கு நிரந்தரமாக காதி நீதிபதிகளை நியமிக்கும் நடவடிக்கை நீதிச் சேவை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படவில்லை . மேலும் 45 காதி நீதிபதிகளின் பதவிக் காலம் எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதியுடன் காலாவதியாகிறது. இவற்றில் 25 காதி நீதிப் பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் ஏற்கனவே கோரப்பட்டிருந்தாலும் நேர்முகப் பரீட்சை நடத்தப்படவில்லை. இதனால் பொதுமக்கள் நீதியைப் பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது . தாமதங்களுக்கு காதி நீதிபதிகளே காரணம் என பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர் . காதி நீதிபதிகளுக்கு நீதிச் சேவை ஆணைக்குழுவினால் எந்தப் பயிற்சியும் வழங்கப்படுவதில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்டுகிறோம் .
பல நீதிப் பிரிவுகளில் காதி நீதிபதி வெற்றிடம் நிலவுவதால் பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்கு ஏனைய பகுதியிலுள்ள காதிநீதி மன்றங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது . அவர்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது . இதுவெல்லாம் மஹிந்த ஆட்சியின் தவறுகளாகும். ஆகவே அதே தவறை இந்த அரசும் செய்யாது உடனடியாக புதிய காதிகளை நியமிக்க பொது நிருவாக அமைச்சும் நீதி அமைச்சும் நடவடிக்கை எடுக்கவேண்டும். கடந்த மஹிந்த ஆட்சியில் அமைச்சரவையில் இருந்து கொண்டு முஸ்லிம் திருமண சட்டத்தை ஒழிக்க வேண்டும், காதி நீதிமன்றத்தை கலைக்க வேண்டும் என பேசிய முன்னாள் அமைச்சர்களான விமல் வீரசிங்க, உதய கம்மன்பில போன்றோரால்தான் மஹிந்த அரசுக்கும் கெட்ட பெயர் வந்தது என்பதை அறிவீர்கள். இதையெல்லாம் இறைவனின் தண்டனையாகவே நாம் பார்க்கிறோம்.
ஆகவே முஸ்லிம் திருமண சட்டத்திருத்தம் பற்றி தாங்கள் பேசுவதை விடுத்து நாட்டில் உள்ள காதிமன்றங்களை பலப்படுத்தி அதில் புதிய காதிகளை நியமிக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தங்களையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களையும் எமது கட்சி கேட்டுக்கொள்கிறது என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment