பள்ளிவாசல் சூழலோடு பழகாத வாலிபர்கள், சிறுவர்கள் மற்றும் எவரும் சமூகத்தில் சிறந்த பிரஜையாக முடியாதென அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் தலைவரும், அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்களின் தலைவருமான எஸ்.எம் சபீஸ் தெரிவித்தார்.
பள்ளிவாசலில் இன்று (03) நோன்பு பெருநாள் சம்பிரதாய உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது; ரமழானில் நோன்பு நோற்று, நல்லமல்கள் புரிந்த ஜமாஅத்தினர் அனைவருக்கும் "ஈத்முபாரக்" வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். புனித ரமழானில் இந்தப்பள்ளிவாசல்களில் பணிபுரிந்த இறை சேவகர்களை "அழ்ழாஹ்" பொருந்திக்கொள்வானாக. சுமார் ஏழு வருடங்களின் பின்னர் நிம்மதியாக நமக்கு நோன்பு நோற்கவும், நல்லமல்கள் செய்யவும் வாய்ப்புக்கிடைத்தது.
கிறீஸ் மனிதனிலிருந்து ஆரம்பமான கெடுபிடிகள், பின்னர் ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொரோனா கொடூரங்கள் என நீடித்தன. இம்முறை எந்தக் கெடுதல்களுமின்றி நோன்பு நோற்றோம். உச்சக்கட்ட பொருளாதார நெருக்கடிக்குள்ளும் அழ்ழாஹ் நிம்மதியைத் தந்தான். சிறுவர்கள், வாலிபர்கள் இங்கு நடக்கும் பயான்களை காதுகொடுத்து கேட்கவில்லை என்றால், அவர்களது கண்கள் இங்கு வணக்கத்தில் ஈடுபடுபவர்களை பார்க்கவில்லை என்றால் அவர்களது நாவுகள் இங்கு நடக்கும் திக்ருகளை உச்சரிக்காமல் எவ்வாறு ஒரு நல்ல சமூகத்தை உருவாக்கிடமுடியும் ?
அதனால் எமது தாய்மார்களும் சகோதரிகளும் அவர்களது பிள்ளைகள் மற்றும் கணவன்மார்களை பள்ளிவாசல் சூழலோடு பழக்கி, நல்லமல்கள் செய்யத்தூண்டியிருந்தனர். இதனால் இந்த ரமழானில் எமது பள்ளிவாசல் சிறுவர்களினாலும் வாலிபர்களினாலும் இறைவிசுவாசிகளினாலும் நிரம்பியிருந்தது. அதற்காக அவர்களுக்கு இவ்விடத்தில் நாங்கள் நன்றி கூறுகின்றோம். பள்ளிவாசல் சூழலோடு நெருக்கமில்லாத எவரும் சமூகத்தில் நற்பிரஜைகளாக உருவாக்கிட முடியாது. இந்தப்பள்ளிவாசல் வெளிப்புற வேலைகள் ரமழானுக்காக நிறுத் தப்பட்டிருந்தன. இறை தியானத்திலுள்ளோரின் கவனங்கள், திசைதிரும்பக் கூடாது என்பதற்காகவே இவற்றை நிறுத்தினோம். இனிமேல் இந்தப்பணிகள் தொடருமென்றும் எஸ் எம் சபீஸ் தெரிவித்தார்
0 comments :
Post a Comment