தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றிய பட்டதாரி பயிலுனர்கள் அப்பாடசாலைகளிலேயே மீளவும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டிருப்பதை இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் வரவேற்றுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
அண்மையில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளில் பட்டதாரி பயிலுனர்களாக கடமையாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சிலர், நிரந்தர நியமனத்தின்போது அப்பாடசாலைகளுக்கு நியமனம் செய்யப்படாமல் கிழக்கு மாகாண சபைக்குட்பட்ட காரியாலயங்களில் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நடைமுறை தவறானது எனத் தெரிவித்து, கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் போன்றோருக்கு எமது சங்கத்தினால் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகள், மூன்று வருடங்களுக்கு பின்னரே தேசிய பாடசாலை கட்டமைப்புக்குள் உள்வாங்கப்படும் எனவும் அதுவரை அவை மாகாண சபைகளாலேயே நிருவகிக்கப்படும் எனவும் இந்த நடைமுறையை கருத்தில் கொள்ளாமல் அப்பாடசாலைகளில் கடமையாற்றியோர் வேறு காரியாலயங்களுக்கு இணைப்பு செய்யப்பட்டிருக்கின்றனர் எனவும் அக்கடிதங்களில் சுட்டிக்காட்டியிருந்தோம்.
இதைத்தொடர்ந்து, தற்போது இவ்விடயம் கவனத்தில் கொள்ளப்பட்டு, கிழக்கு மாகாண சபையின் கீழுள்ள
காரியாலயங்களுக்கு நியமனம் செய்யப்பட்டிருந்த அனைவரும் அவரவர் கடமையாற்றிய பாடசாலைகளுக்கே மீளவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனை நாம் வரவேற்கின்றோம்- என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment