பஸிலுக்கு கதவை திறந்தது '20'! கழுத்தை பிடித்து வெளியேற்றுகிறது '21'!
1977 இல் மண்டியிட்டவர், 2010 இல் சாதனை வெற்றி
அலாவுதீனாக வந்தவர் 'கப்புடாவாக' பறக்கிறார்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் நிதி அமைச்சருமான பஸில் ராஜபக்ச, தனது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, நாளை (09) இராஜினாமா செய்கின்றார்.
இது தொடர்பில் விளக்கமளித்து, விசேட அறிவிப்பொன்றை விடுப்பதற்காக நாளை முற்பகல் 11 மணிக்கு, மொட்டு கட்சி தலைமையகத்தில் விசேட ஊடக சந்திப்பொன்றையும் ஏற்பாடு செய்துள்ளார்.
இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக தடை விதிக்கப்பட்டது.
இதனால் 2015 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பஸில் ராஜபக்ச போட்டியிடவில்லை. ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று, அமெரிக்கா பறந்தார்.
2019 ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்ற பின்னர், 2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் மொட்டு கட்சி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.
அதன்பின்னர் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் இயற்றப்பட்டது. இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்றம் வருவதற்கு தடை விதிக்கும் யோசனை '20' இலும் தொடர வேண்டும் என அழுத்தங்கள் வந்தாலும், பஸிலுக்காக அந்த ஏற்பாடு அதாவது அரசியலமைப்பை மாற்றப்பட்டது.
தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வந்த பஸில் ராஜபக்சவுக்கு, நிதி அமைச்சு பதவியும் வழங்கப்பட்டது.
இரட்டை குடியுரிமை உடையவர்கள், எம்.பி. பதவி வகிப்பதற்கு உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் தடை விதிக்கும் ஏற்பாடு உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், அச்சட்டம் நிறைவேறுவதற்கு முன்னரே, பஸில் ராஜபக்ச பதவி துறக்கின்றார்.
அதாவது '20' ஆல் வந்தவர், 21 ஆல் செல்கின்றார்.
பஸிலின் நாடாளுமன்ற அரசியல் பயணம்!
1970 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில், பெலியத்த தொகுதியில் களமிறங்கி வெற்றிபெற்றார் மஹிந்த ராஜபக்ச. அவரின் அரசியல் விவகார செயலாளராக, அரசியல் பயணத்தை பஸில் ராஜபக்ச ஆரம்பித்தார்.
1977 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள முல்கிரிகம தேர்தலில் பஸில் ராஜபக்ச போட்டியிட்டார். எனினும், வெற்றிபெறவில்லை.
சுதந்திரக்கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக, ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவு வழங்கினார். இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான ஜே.ஆர். ஜயவர்தனவுடன் இணைந்து செயற்பட்டார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கிய பிரமுகராக திகழ்ந்த காமினி திஸாநாயக்கவின் சகாவாகவும் செயற்பட்டார்.
1997 காலப்பகுதியில் இரட்டை குடியுரிமை பெற்று அமெரிக்கா புறப்பட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் இருந்தாலும், மஹிந்தவின் வெற்றிக்காக பஸில் பாடுபட்டார். 2005 ஜனாதிபதி தேர்தலின்போது மஹிந்தவுக்காக தீவிர பரப்புரைகளை முன்னெடுத்தார்.
2007 ஆம் ஆண்டு தேசியப் பட்டியல் ஊடாக முதன் முறையாக நாடாளுமன்றம் வந்தார்.
2010 பொதுத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் களமிறங்கினார். 4 லட்சத்துக்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெற்றார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பதவியையும் பெற்றார்.
2015 பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை கட்டியெழுப்பியதில் பஸில் முக்கிய புள்ளி. குறுகிய காலப்பகுதிக்குள் அக்கட்சி ஆட்சியையும் பிடித்தது. தேசியப்பட்டியல் ஊடாக பஸில் சபைக்கு வந்தார். 2021 ஜுலை 08 ஆம் திகதி நிதி அமைச்சராக பதவியேற்றார்.
கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்த நிலையிலேயே பஸில் ராஜபக்ச நிதி அமைச்சர் பதவியை ஏற்றார். நெருக்கடியை அவர் சமாளிப்பார், பொருளாதாரத்தை மீட்பார் என்றெல்லாம் மொட்டு கட்சி உறுப்பினர்கள் பிரமாண்ட அறிவிப்புகளை விடுத்தனர்.
அலாவுதீனின் அற்புத விளக்குபோல, த(ம)ந்திரத்தால் பொருளாதாரத்தில் புரட்சி செய்வார் என்றெல்லாம் அறிக்கைகள் வெளிவந்தன. கடைசியில் 'கப்புடா' என்ற நாமத்துடன், நாடாளுமன்ற அரசியலில் இருந்து அவர் விடைபெறுகின்றார்.
எனினும், முழு நேர கட்சி அரசியலில் ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment