ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் '21' அமைச்சரவையில் இன்று முன்வைப்பு
பஸிலின் இறுதிக்கட்ட முயற்சியும் பிசுபிசுப்பு
'21' குறித்து ரணிலுக்கு கரு வழங்கிய ஆலோசனை
தமிழ் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடு நாளை
நீதி அமைச்சர் சபையில் விசேட உரை
அரசியலமைப்பிற்கான 21ஆவது திருத்தச்சட்டமூலம், அமைச்சரவையில் இன்று (06) முன்வைக்கப்படவுள்ளது. இந்த தகவலை நீதி அமைச்சர் விஜயதாச உறுதிப்படுத்தினார்.
உத்தேச 21ஆவது திருத்தச்சட்டமூலத்தை, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, இரு வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்திருந்தார்.
குறித்த சட்டமூலத்தை கட்சி தலைவர்களுக்கு பகிர்ந்தளித்து, கட்சிகளின் கோரிக்கைகள் மற்றும் யோசனைகளை உள்வாங்கி, இறுதிப்படுத்தப்பட்ட சட்டமூலத்தை ஜுன் 06 ஆம் திகதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில் 21 சம்பந்தமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமயில், இரு தடவைகள் சர்வக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. ஆளுங்கட்சி எம்.பிக்களுடன் ஜனாதிபதியும் பேச்சு நடத்தியிருந்தார். சிவில் அமைப்புகள் மற்றும் வெளிநாட்டு தூதவர்களுடன் நீதி அமைச்சர் சந்திப்புகளை நடத்தியிருந்தார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே - திருத்தங்களை உள்வாங்கி, இறுதிப்படுத்தப்பட்ட 21 ஆவது திருத்தச்சட்டமூலம், ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இரட்டை குடியுரிமை உடையவர்கள், நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு தடை விதிக்கும் யோசனை மாற்றியமைக்கப்படமாட்டாதென தெரியவருகின்றது.
ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அமைச்சு பதவியை மட்டும் வகிப்பதற்கு கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்டதால், அந்த இணக்கப்பாடும் '21' இல் உள்ளடக்கப்படும்.
ஜனாதிபதிக்கு தனது இஷ்டப்படி பிரதமரை, பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அனுமதியுடனேயே பிரதமரை ஜனாதிபதி பதவி நீக்கலாம் என்ற ஏற்பாடு உள்வாங்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாகவும் இன்று இறுதி முடிவு எடுக்கப்படும்.
அமைச்சரவை ஒப்புதலின் பின்னர் ,21 வர்த்தமானியில் வெளியிடப்படும். அதன்பின்னர் நாடாளுமன்றம் ஊடாக அதனை சட்டமாக்கும் பணி இடம்பெறும்.
நாடாளுமன்றம் நாளை கூடவுள்ளது. இதன்போது 21 குறித்து நீதி அமைச்சர் விசேட உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
21 தொடர்பில் வடக்கு, கிழக்கை மையமாக கொண்டியங்கும் தமிழ்த் தேசியக் கட்சிகள் இன்று முக்கிய சந்திப்புகளை நடத்தி, அது சம்பந்தமாக முடிவெடுக்கவுள்ளன. நாளை அக்கட்சிகளின் நிலைப்பாடு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், '21' ஆவது திருத்தச்சட்டமூலம் வர்த்தமானியில் வெளியான பின்னர், நிலைப்பாட்டை அறிவிக்கும் திட்டமும் உள்ளது.
அதேவேளை, 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் பிரதமருக்கும், முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது 19 ஆவது திருத்தச்சட்டத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் 21 அமைய வேண்டும் எனவும், நாடாளுமன்ற முறைமை பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் கருஜயசூரிய குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற குழுக்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் எனவும் அவர் யோசனை முன்வைத்துள்ளார்.
இதற்கிடையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச, பிரதமரை நேற்று சந்தித்து, 21 சம்பந்தமாக கலந்துரையாடியுள்ளார். இறுதி நேரத்தில் பஸில் தரப்பால் சில யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றை உள்வாங்குவதற்கு பிரதமர் தரப்பு இணங்கவில்லை. 'இரட்டை குடியுரிமை உடையவர்களுக்கு தடை' என்ற யோசனையில் மாற்றமில்லை என எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment