கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் அவர்கள், குவைத் தூதுவர் ஹலாஃப் பு தாய்ர் அவர்களை இன்று (08) கொழும்பிலுள்ள தூதரகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது கல்முனைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறும் தூதுவருக்கு அழைப்பு விடுத்தார்.
நாட்டில் நிலவும் சமகாலப் பிரச்சினைகள், கல்முனைப் பிரதேசத்திலுள்ள தேவைப்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்த பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், தனது பிராந்தியத்துக்கு உதவிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். தன்னால் இயலுமான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக தூதுவர் இதன்போது உறுதியளித்தார்.
அத்துடன், குடுவில் குடியேற்றத் திட்டத்தில் 40 வீடுகளை அமைப்பதற்கு உதவி கோரப்பட்டபோது, குவைத் அரசாங்கத்தின் நிதியுதவியில் அதனை நிர்மாணித்து தருவதாக இதன்போது உறுதியளிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சரும் குவைத், பஹ்ரைன் நாடுகளின் முன்னாள் தூதுவருமான தனது தந்தை ஏ.ஆர். மன்சூர் பெயரில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 900 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஞாபகார்த்த மண்டபம், கல்முனை முஹையத்தீன் ஜும்ஆ பள்ளிவாசல் உள்ளிட்ட பல அபிவிருத்திப் பணிகளுக்கு குவைத் அரசாங்கம் நிதியுதவி வழங்கியதை நினைவுகூர்ந்து, பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் இதன்போது நன்றி பாராட்டினார்.
இதன்போது, தனது நினைவுப் பேழையில் வைத்திருந்த ஏ.ஆர். மன்சூர் அவர்களுடனான புகைப்படத்தை காண்பித்து இருவருக்குமிடையிலான தொடர்புகளை சிலாகித்துப் பேசிய தூதுவர், அப்போதைய நெகிழ்ச்சியான தருணங்களையும் இதன்போது பகிர்ந்து கொண்டார்.
அத்துடன் காலஞ்சென்ற முன்னாள் தூதுவரான அப்துல்லாஹ் நஸீர் (2002-2005) ஞாபகார்த்தமாக நினைவேட்டில் ரஹ்மத் மன்சூர் தனது குறிப்புகளை பதிவுசெய்தார். இச்சந்திப்பில் குவைத் தூதரகத்தின் சமூக, நலன்புரி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் முஹம்மட் பிர்தெளஸும் கலந்து கொண்டார்.
0 comments :
Post a Comment