ஒவ்வொரு குடும்பத்திலுமுள்ள எவருடையதாவது இழப்பு மிகவும் கவலையானது மட்டுமன்றி அவர்களுக்கு பாதிப்பானதும் கூட. இறப்பு இறைவனின் நாட்டமென வெறுமனே விட்டுவிட முடியாது. எமது சேவையானது மக்களின் உயிரை காப்பாற்ற உயர்ந்த பங்களிப்பை செய்யவேண்டியதாக அமைந்துள்ளது. பொதுமக்கள் ஒன்றிணைந்து செயற்பட்டு தமது சுற்றுசூழலை பாதுகாப்பதில் மிக அசட்டையாக இருந்து வருகிறார்கள். நாம் செய்யும் சுகாதார நடவடிக்கைகள் நமது அதிகார எல்லைக்குள் செய்வதுடன் எமது வழிகாட்டல்களையும், அறிவுறுத்தல்களையும் செவிமடுக்காதவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கைகளை எடுப்பதில் தயங்க வேண்டாம் என சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொதுசுகாதார பரிசோதகர்களுக்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் அறிவுறுத்தியுள்ளார்.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.எம். நியாஸ் தலைமையில் இடம்பெற்ற டெங்கு கட்டுப்பாடு தொடர்பிலான கூட்டத்தில் கலந்துகொண்டு சிரேஷ்ட பொதுசுகாதார பரிசோதகர்கள், பொதுசுகாதார பரிசோதகர்கள், டெங்கு கட்டுப்பாட்டு கள உதவியாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
உங்களினால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்கள் மற்றும் எச்சரிக்கைகளை நடைமுறைப்படுத்தாதவர்களை எவ்வித தராதரமும் பாராமல் சட்டநடவடிக்கை எடுங்கள். யாராக இருந்தாலும் எவ்வித மன்னிப்பும் இல்லாது அதற்கான பூரண ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கிறேன். வீடுகள், அலுவலகங்கள் மட்டுமின்றி கைவிடப்பட்டுள்ள காணிகள், பூட்டப்பட்டுள்ள வீடுகள், அரச நிறுவனங்களுக்கு சொந்தமான காணிகள், பொது நிறுவனங்களுக்கு சொந்தமான காணிகள், மத நிறுவனங்கள் என எல்லா இடங்களிலும் பரிசோதனை செய்து அறிவுறுத்தல்களை வழங்குங்கள்.
பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி மாணவர்களை பொதுவிடயங்களில் ஈடுபட ஊக்கமளித்தல், சிரமதானங்களை செய்ய பழகுவதை உறுதிப்படுத்த வேண்டும். இப்போதுள்ள சந்ததிகள் பொதுவிடயங்களை பற்றிய எவ்வித தெளிவுமில்லாது பட்டம் முடித்தவர்களாக இருக்கிறார்கள். மாணவர்கள் மத்தியில் போட்டிப்பரீட்சை, புள்ளிகள் பெறுவது பற்றிய சிந்தனையே மேலோங்கி இருக்கிறது. முறையான சமூக கடமைகள் தொடர்பில் அறியாத சமூகமாக வாழும் எமது இளம் சந்ததியினர் சமூக பிரச்சினையை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி அதற்கு பின்னூட்டம் அடிப்பதுடன் கடமை முடிந்து விட்டதாக எண்ணுகிறார்கள். இவர்களுக்கு சரியான முறையில் சமூக கடமைகள் பற்றிய அறிவை வழங்க வேண்டும்.
நாட்டிலுள்ள பொருளாதார பிரச்சினையினால் எமக்கு கிடைக்கும் மருந்துகளின் அளவில் பாரிய பிரச்சினை இருக்கிறது. எமக்கு கிடைக்கவேண்டிய மருந்துகள் தொடர்பில் பல கேள்விக்குறிகள் இருக்கிறது. வருமுன் காப்போம் எனும் நிலையிலையே நாம் இருக்கிறோம். நாட்டின் பொருளாதார நிலைகள் தொடர்பில் அரச உயரதிகாரிகளின் அறிவிப்புக்களை கேட்கும் போது பயமாக இருக்கிறது. எம்முன்னால் உள்ள சவால்களை வாய்ப்பாக பயன்படுத்தி நாட்டை மீட்டெடுக்கும் பொறுப்பு எம் அனைவர் மீதும் இருக்கிறது. சுகாதார சேவைகள் தொடர்பில் பொதுசுகாதார பரிசோதகர்களுக்கு பாரிய பணி சுமத்தப்பட்டுள்ளதை நன்றாக அறிவேன். பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் உங்களின் பணியில் நான் திருப்தி காண்கிறேன். இனி வரப்போகின்ற காலநிலையில் டெங்கை கட்டுப்படுத்தி எந்த உயிரும் பலியாகிவிடாமல் பாதுகாப்பது எமது இலக்காக கொள்வோம். இதனை இறைபணியாக எண்ணி முன்கொண்டு செல்லுங்கள் என்றார்.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம் பி ஏ வாஜித், கல்முனை பிராந்திய தொற்றாநோய் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ. சி. பஸால் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment