அவளுக்காக....



Fauzuna Binth Izzadeen-
பிரசவ அறையில் ஆடை விலக்கும் போது அங்கிருக்கும் யாரும் அதை பார்த்து ரசிப்பதில்லை.
அதை படம் பிடித்து வைத்து அவ்வப்போது இன்புறும் வக்கிரபுத்தியும் அங்கிருக்கும் எந்த ஆணிடமும் இருப்பதில்லை.
ஏனென்றால் அது தாய்மைக்கான போராட்டம். தன் கணவனின் ஆண்மையை நிரூபிக்கும் பெண்ணின் அசாத்திய திறன்.
தாயானவள் குழந்தை அழும் நொடியில் துகில் விலக்கும் காட்சியில் என்ன இருக்கிறது பார்த்து ரசிக்கவும், ரசித்ததை வர்ணித்து இன்புறவும்...?
அது புதிய உயிரின் நிலைத்தலுக்கான ஆரம்பம். உயிரொன்றின் பசி போக்கும் தாராளத்தன்மை.
அதற்கெல்லாம் காமக் கண்ணாடி அணிந்து பார்ப்பவர்கள் எத்தகைய மனநிலையுடையவர்??
பெண்ணின் தேகம் தெரியும் போதெல்லாம் காமம் மட்டுமா தெரிய வேண்டும்?
பாரில் வந்தவர் யாவரும் தாய்மடியில் எந்த திரை விலக தவமிருந்தோமோ, உயிர் நிறைவதற்காக அழுது தீர்த்தோமோ ,
அதே திரை இன்னுமொரு பெண்ணில் விலகும் போது அசிங்கமான எண்ணம் ஏன் வருகிறது?
வியாதியோ , விபத்தோ உங்கள் தாயும்,மனைவியும் திரை விலக்க நேர்ந்தால் மற்றவன் இப்படித்தான் ரசித்தாக வேண்டுமென விரும்புகிறீர்கள் போலும்.
இன்று ஹிருனிக்காவின் ஆடை விலகியதே, எதற்காக.?
கவர்ச்சிப் பொருள் என்று காட்சிப்படுத்தவா?...
இல்லை தானே.
இந்த தேசத்தில் உயிர் வாழ்தல் சவாலான போதில் அதற்காக போராடத் துணிந்த அசாத்திய துணிச்சலிற்கு பெயர் பிரசவமில்லையா?
அதில் தாய்மையின் வீராவேசம் தெரியவில்லையா?
சொந்த மண்ணில் அபலையாய், அகதிகளாய் ஆக்கப்பட்ட மக்களின் உயிர் நிலைத்தல் பசி தீர்க்க வந்த கருணை தெரியவில்லையா?
புரட்சி செய்யப் புறப்படும் ஆண்களின் ஆண்மைக்கான சவாலை கேள்விக்குறியாக்கினாளே, அது திரைவிலகிய பாகத்தில் தெரிந்திருக்க வேண்டும்..
பெண் என்பதாலேயே பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான ஒரு பெண்ணுக்கு ஆதரவாகவல்லவா குரல்கள் எழும்பியிருக்க வேண்டும்...?
நாம் தவறிழைக்கிறோம்.
அவளுக்கென்று ஒரு குடும்பமிருக்கிறது. குழந்தைகள் இருக்கின்றன.எமக்காக வீதியில் இறங்கியவளுக்கு பக்க பலமாக இருந்தோமா...? அவள் தனிப்பட்ட வாழ்வைத் தான் மதித்தோமா?
அரசியல் யாப்பின் சந்து பொந்துகளில் நுழைந்து தன் தந்தையை கொன்றவனுக்கு கிடைத்த மன்னிப்பை பெண்ணாக அவள் கேள்விக்குறியாக்கி வெற்றி பெறும் போது,
அவளின் ஆடைக்குள் நுழைந்து அங்கங்களில் எதையோ தேடிக் கொண்டிருக்கிறார்கள் ஆண்கள்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :