முஸ்லிம் தலைமைகளின் தீர்மானங்கள் சுயாதீனமாக அமைய வேண்டும்; கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி வேண்டுகோள்



அஸ்லம் எஸ்.மௌலானா-
தேசிய அரசியல் விவகாரங்களில் எவரது அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், நாட்டினதும் சமூகத்தினதும் நலன் கருதி, சுயாதீனமாக சிந்தித்து தீர்மானங்களை மேற்கொள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகள் முன்வர வேண்டும் என கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் முன்னணியின் செயலாளர் செயிட் ஆஷிப் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

நாடு எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியானது அரசியல் நெருக்கடியாக மாறியுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மிகவும் நிதானமாகவும் பொறுப்புணர்வுடன் நேர்மையாக சிந்தித்து முடிவுகளை எடுக்க வேண்டும் என முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கின்றது. இருந்தபோதிலும் நடப்புகளை பார்க்கின்றபோது அவ்வாறான நிலைமை காணப்படவில்லை.

குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்ற பின்னர் அவருக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்கிற விடயத்தில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற 03 முஸ்லிம் கட்சிகளும் தமது கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடுகளையே தமது தீர்மானங்களாக அறிவித்திருக்கின்றன.

சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, பிரதமர் ரணிலை ஆதரிப்பதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்திருந்தது. அதனை அடியொற்றியதாகவே ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பனவும் ரணிலை ஆதரிப்பதில்லை என்ற தீர்மானங்களை மேற்கொண்டுள்ளன.

இத்தீர்மானத்தைக் கூட இவ்விரு கட்சிகளினதும் தலைமைகள், தமது கட்சிகளின் உயர் பீடத்தை கூட்டி ஆராயாமல், தன்னிச்சையாகவே அறிவித்துள்ளன. ஆனால் அதற்கான நியாயங்கள் எதையும் சமூகம் ஏற்றுக்கொள்ளும் வகையில் வெளியிடவில்லை. மு.கா. தலைமை, ரணிலை தாறுமாறாக விமர்சித்துள்ளது. இதனை மு.கா. ஆதரவாளர்கள் கூட ஏற்கும் நிலையில் இல்லை.

அவ்வாறே இதுவரை காலமும் ரணிலை கடுமையாக விமர்சித்து வந்த தேசிய காங்கிரஸ் தலைமை, தனது கட்சி அங்கம் வகிக்கின்ற 10 கட்சிகளின் சார்பில் மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சியும் உதய கம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோரை தலைமைதத்துவமாக கொண்ட சுயாதீன அணியும் ரணிலை ஆதரிப்பதாக தீர்மானங்களை அறிவித்த பின்னர் தாமும் ரணிலை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் இம்முடிவை தேசிய காங்கிரஸ் உயர் பீடம் கூடித் தீர்மானித்ததாக அக்கட்சியின் தலைமை ஊடகங்களுக்கு செய்தி வெளியிட்டுள்ளமை ஒரு கேலிக்கூத்தான விடயமாகும்.

இம்மூன்று முஸ்லிம் கட்சிகளினதும் செயற்பாடுகளை நோக்குகின்றபோது தமது எஜமானர்களை திருப்திப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். தீர்மானங்கள் எதுவாக இருந்த போதிலும் அது எவரது அழுத்தங்களுக்கும் உட்படாமல் நாட்டினதும் சமூகத்தினதும் நலன் கருதி சுயாதீனமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே எமது பணிவான வேண்டுதலாகும்- என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :