40 வருடங்கள் பழமையான சாய்ந்தமருது பிளையிங் கோர்ஸ் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்த கிழக்கு மாகாண 32 முன்னணி கழகங்கள் பங்குபற்றும் "பௌசி கிண்ண" 20 க்கு 20 கடினபந்து கிரிக்கட் சுற்றுத்தொடரின் காலிறுதியாட்டத்திற்கு சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டுக்கழகம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது பொதுவிளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற காலிறுதிக்கான தகுதிக்கான போட்டியில் சம்மாந்துறை ஈஸ்டர்ன் றோயல் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து விளையாடிய சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டுக்கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயித்த 20 ஓவர்களில் 202 ஓட்டங்களை 06 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து பெற்றுக்கொண்டது. அதிரடியாக துடுப்பெடுத்தாடிய விளாஸ்டர் விளையாட்டுக்கழக அணித்தலைவர் ஆபாக் 42 பந்துகளை எதிர்கொண்டு 73 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார். மேலும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அணியின் உபதலைவர் றிழ்வான் 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
அதனடிப்படையில் 203 எனும் வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சம்மாந்துறை ஈஸ்டர்ன் றோயல் விளையாட்டுக்கழகம் 19 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 124 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டனர். சம்மாந்துறை ஈஸ்டர்ன் றோயல் விளையாட்டுக்கழகம் சார்பில் சிறப்பாக விளையாடிய சாஜித் 42 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டுக்கழகம் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சஹீல் மற்றும் ஜலூத் ஆகியோர் நான்கு பந்துவீச்சு ஓவர்களை வீசி தலா மூன்று விக்கட்டுக்களை வீழ்த்தினர். இப்போட்டியின் ஆட்டநாயகனாக விளாஸ்டர் விளையாட்டுக்கழக அணித்தலைவர் ஆபாக் தெரிவு செய்யப்பட்டார்.
0 comments :
Post a Comment