பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பினால் தரம் 6ல் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட நிந்தவூர் அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலயத்தில் வழங்கி வைக்கப்பட்டது. பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் ஐ எம் நிஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் பிரதிப் பணிப்பாளர் யூ எல் யாக்கூப் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார பிரச்சினைக்கு மத்தியில் பெஸ்ட் ஒப் யங் அமைப்பானது தேவையுடைய மாணவர்களுக்கு வலிந்து உதவுகின்றமையானது இக் காலகட்டத்தில் மிகப் பெறுமதி வாய்ந்த தாகும் என இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் பிரதிப் பணிப்பாளர் மூத்த ஊடகவியலாளர் யூ எல் யாக்கூப் இந்நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்தார்
தொடர்ந்தும் இங்கு உரையாற்றிய அவர், தமிழ் முஸ்லிம் உறவு மிகவும் வலுவான பிரதேசம் நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசம் ஆகும். அவ்வாறு காரைதீவு இன ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இந்த இன உறவு எதிர்காலத்தில் வலுப்பெற வேண்டும்.பெற்றோர்களின் முக்கிய பங்கு பிள்ளைகளுக்கு சமூக ரீதியான கல்வியை மட்டுமன்றி சமய ரீதியான கல்வியையும் பெற்றுக் கொடுப்பதே ஆகும். பிள்ளைகள் தங்களை சமூக ரீதியாக வலுப்படுத்திக் கொள்வதற்கு பயனளிக்கக்கூடிய கல்வியைத் தேடிப் பெற்றுக் கொள்வது அவசியமாகும்.
இன்று உலகம் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டில் உள்ள நோயாளிக்கு தொழில்நுட்பத்தின் மூலம் சிகிச்சை வழங்கும் அளவுக்கு நவீனத்துவம் வளர்ச்சி அடைந்துள்ளது. பிள்ளைகளுக்கு பெற்றோரும், பெற்றோர்களுக்கு பெற்றெடுத்த பிள்ளைகளும் கேட்கின்ற பிரார்த்தனைகள் மிகவும் வலிமையானதாகும். முழு நாடும் இன்று பொருளாதார பிரச்சினைக்குள் சிக்குண்டு உள்ளது. இந்த பொருளாதார பிரச்சினை வசதியுள்ளவர்கள் வசதியற்றவர்கள் என்று பாராமல் அனைவருக்கும் பொதுவானதாகவே உள்ளது. எமது நாட்டுக்கு அடுத்து வரும் காலம் மிகவும் இக்கட்டானது. வறிய மக்களிடத்தில் மட்டுமன்றி செல்வந்தர்கள் இடத்திலும் கஷ்டமான காலம் ஆகலாம். பணமிருந்தும் பொருட்களை பெற முடியாத நிலைமை ஏற்படலாம். இந்த பொருளாதார நெருக்கடி நிலைமை நீங்கி நாடு பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்று சுபீட்சம் அடைய அனைவரும் பிரார்த்திப்போம் என்றார்.
இந்த நிகழ்வில் பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் செயலாளர் ஏ புஹாது, அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலய அதிபர் ரீ நடேசலிங்கம், அட்டப்பள்ளம் சிங்கார மாரியம்மன் ஆலய தர்மகர்த்தா ரீ கோபாலன் உட்பட பெற்றார் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதன் போது இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் பிரதிப் பணிப்பாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் நாடறிந்த எழுத்தாளர் யூ எல் யாக்கூப் இன் ஊடகசேவையை பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment