தற்போது பாரிய பொருளாதார நெருக்கடி என்றாலும் கண்ணகை அம்பாளிக் திருக்குளிர்த்தி சடங்கு சிறப்பாக நடைபெற்றுவருகிறது. கிழக்கில் பெரும்பாலான தமிழ்க்கிராமங்கள் இச்சடங்கினால் களைகட்ட ஆரம்பித்துள்ளன.
கடந்த திங்கட்கிழமை இவ்வைகாசித்திருவிழாச்சடங்கு ஆரம்பமாகியது. வடக்கில் வற்றாப்பளை கண்ணகை அம்மனாலயத்திலும் இச்சடங்கு சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
பூம்புகாரைத் தலைநகராகக்கொண்டு சோழ நாட்டிலே பிறந்து பாண்டியநாட்டிலே அரசியல் புரட்சி செய்து சேரநாட்டிலே தெய்வமாகிய கண்ணகை அம்பாள் சிங்கள மக்கள் மத்தியில் பத்தினித்தெய்யோ என இன்றும் வழிபட்டு வருவதைக் காணலாம்.
கண்ணகி வணக்கம் இலங்கையின் இரண்டு இனத்தாரிடையே (தமிழர் சிங்களவர்)வளர்க்கப்பட்டு வந்தது. கண்ணகை அம்மன் என்றும் பத்தினி தெய்யோ என்றும் வழங்கப்பட்டுவந்தது.
கண்ணகி தமிழரிடையே ஒரு புதுத்தெய்வமாக உருப்பெற்ற கதையை சிலப்பதிகாரம் சுவைபடக்கூறுகிறது.
வானோர் வடிவில் வந்த கோவலனோடு தெய்வ விமானமேறி கண்ணகி வானகம் சென்ற காட்சியைக் கண்ட வேடுவர்கள் அவளைத் தெய்வமாகப் போற்றினார்கள்.
'சிறு குடியீரே சிறு குடியீரே ...'.என்ற சிலப்பதிகார குன்றக்குரவைப் பாடலைப் பாடி வேங்கை மரத்தின் கீழ் எடுத்த முதற் சடங்கு கண்ணகி சடங்காகும்.அதனையொட்டி கண்ணகி சடங்கு முறை வழக்கிற்குவந்தது.
சேரன்செங்கூட்டுவன் இமயத்திலிருந்து கல்லெடுத்துவந்து கங்கையில் நீராட்டி அக்கல்லிலிருந்து கண்ணகியின் சிலை வடித்து தனது தலைநகராம் வஞ்சிமாநகரில் அமைத்த ஆலயத்தில் பிரதிஸ்டை செய்தான்.அங்கு இந்திரவிழா எடுத்தான்.
இந்த விழாவிற்கு குடகக்கொங்கரும் மாளுவவேந்தனும் கடல்சூழிலங்கை கயவாகு வேந்தனும் வந்திருந்ததாக சிலப்பதிகாரம் கூறிநிற்கிறது.இச் சிலப்பதிகாரத்தையும் பழைய ஏடுகளையும் வைத்து கிழக்கில் பல காப்பியங்களும் நூல்களும் வெளிவந்தன
கண்டி அரசன் இரண்டாம் இராசசிங்கன் காலத்தில் (1629-1637) பாடப்பெற்ற தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஊர்சுற்றுக் காவியத்தில் மட்டக்களப்புப் பிராந்தியத்தில் 30 கண்ணகை அம்மன் ஆலயங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.அவற்றில் அங்கணாமைக்கடவை (வெளியிலிருந்தும்) முதலூராகக் குறிப்படப்பட்டுள்ளது.எனவே அதுவே முதல் ஆலயமாகக் கொள்ளலாம்.
'பட்டி நகர் தம்பிலுவில் வீரமுனை காரைநகர்
பவுசுபெறு கல்முனை கல்லாறெருவில் மகிளுர்
செட்டிபாளையம் புதுக்குடியிருப்பு
செல்வமுறு மகிழடித்தீவு முதலைக்குடா
அட்ட திக்கும் புகழும் வந்தாறுமூலை நகர்
மட்டவிழ் பூங்குழல் மண்முனைக் கண்ணகையை மனதில் நினைக்க வினை மாறி ஓடிடுமே.'
என ஊர்சுற்றுக்காவியம் கூறுகிறது.
இனி, கிழக்கிலங்கையில் பிரசித்திபெற்ற காரைதீவு கண்ணகை அம்மனின் வரலாறு சடங்கு பற்றிப் பார்ப்போம்.
காரைதீவில் கண்ணகை அம்மன் பிரசித்திபெற்ற காரைதீவு கண்ணகை அம்மனின் திருக்குளிர்த்தி சடங்கு கடந்த திங்களன்று(6) கடல்நீர் எடுத்துவச்து கல்யாணக்காலர் நடலுடன் ஆரம்பித்தது. இன்று 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை திருக்குளிர்த்தி பாடலுடன் நிறைவடையவிருக்கிறது.
'அணியாரங் கற்பிற் அருங்கலமே நல்ல வணிகர் குலத்துதித்த மாதே- பணிமணியின் சேர் சிலம்பணியும் செல்வியே காரைநகர் தாயே எமைக் காத்தருள் ' என்கிறது அம்மன் பாடல்..
சேரமன்னனின் அழைப்பின்பேரில் கடல்சூழ் இலங்கை மன்னன் கஜபாகு சென்றான் என்பது வரலாறு .முப்பெரும் விழாவிற்கு சென்ற கஜபாகு மன்னனின் அழைப்பின்பேரில் சேரன் செங்குட்டுவனின் வழிவந்த சேனாதிராசனின் விதவை மகளான தேவந்தி அம்மையார் தனது மகள் சின்ன நாச்சியாருடன் கதிர்காம யாத்திரை மேற்கொண்டு இலங்கை வந்து கண்டி மன்னரின் விருந்தினராக தங்கியிருந்த சில நாட்களின் பின்னர் யாத்திரையை மேற்கொண்டார்.
அம்மையார் தான் வரும்பொழுது தன்னுடன் பத்தினித் தெய்வத்தின் மூன்று சிலைகளை கொண்டு வந்ததாகவும் அவற்றில் இரு சிலைகள் அகோரவடிவுடையதாகவும் ஒன்று சாந்த சொரூபமான வடிவம் கொண்ட சிலையாகும் என்று கர்ணபரம்பரைக் கதைகள் கூறுகின்றன.
அம்மையாரின் யாத்திரை வழியில் ஏறாவூரில் அவர் அவருடைய சிலைகளில் ஒன்றினை ஸ்தாபித்து வழிபட்டார்
பின்னர் மீதி இது சிலைகளுடன் காரைதீவு எனும் சைவமும் தமிழும் போற்றப்பட்ட பழம்பெரும் பதியில் வந்து தங்கினார் .தேவந்தி அம்மையார் காரைதீவில் விருந்தோம்பலில் கவரப்பட்டு தங்கியிருந்த வேளையிலே அங்குள்ள வேம்பு மரத்தின் கீழ் தான் கொண்டுவந்த இரு விக்கிரகங்களையும் பிரதிஷ்டை செய்து பூசை வழிபாடு இயற்றினார் .
அந்த காலத்தில் கண்டி அரசனின் ராஜ பிரதிநிதியாகிய வன்னிமை அவரது மனைவி சகிதம் சிங்காரத் தோப்பில் இருந்து யானை மீதேறி நகர்வலம் வந்தார்..அவர் அம்மையாரின் பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டார். .அங்கு வன்னிமையின் மனைவியின் கண்ணொளி மங்க பெற்று அம்மையாரின் வேண்டிக்கொண்டதால் மீண்டும் கண்ணொளி பெற்றமை வரலாறு.
இதற்காக வன்னிமை அங்கு புனித ஆலயத்தை ஸ்தாபித்து அதனை நிர்வகிப்பதற்கு நூற்றி ஒரு ஏக்கர் நெல் காணிகளை நேர் கடனாக வழங்கினார்.இதனை 'கண்கண்வெளி' என அழைப்பர். .இன்றும் அது உள்ளது.
கிராமத்தில் தேவந்தி அம்மையாரும் அவரது மகளான சின்ன நாச்சியாரும் வாழ்ந்து வருகையில் அங்கு வாழ்ந்து கொண்டிருந்த குடிமக்களின் பிள்ளைப்பேறு குறைந்துகொண்டு செல்வதனால் இதற்கு காரணமாக அமைந்த அமைந்த பத்தினி தெய்வத்தின் அகோர வடிவத்தை மக்களின் கோரிக்கையின் படி ஜனசந்தடி அற்ற பட்டிமேடு என்னும் கிராமத்தில் தேவந்தி அம்மையார் பிரதிஷ்டை செய்தார் .
அழகு நிறைந்த சின்னநாச்சியார் மீது மையல் கொண்ட இளைஞர்கள் அம்மையாருக்கும் அவரது மகளுக்கும் தொந்தரவு கொடுத்தனர். அதன் காரணத்தினால் சாந்த சொரூபமான பத்தினி தெய்வ விக்ரகத்துடன் தனது மகளுடனும் தம்பிலுவில் என கிராமத்திற்கு இடம் பெயர்ந்து விக்கிரகத்தை வைத்து வழிபட்டு வந்தார்.
இந்நிலையில் காரைதீவு கிராம மக்களுக்கு கொள்ளை நோய் அம்மை நோய் என்பது துயரங்களை கொடுத்தன .இதன் காரணமாக மக்கள் தம்பிலுவில்கிராமத்துக்குச் சென்று தேவந்தி அம்மையாரை மன்றாடி மீண்டும் காரைதீவுக்கு அழைத்து வந்து பத்தினி தெய்வத்தை மீண்டும் பிரதிஷ்டை செய்து அம்மையாரின் வேண்டுகோளின்படி கற்புக்கரசி கண்ணகி குளிர்விக்கும் பொருட்டு பொங்கலிட்டு பெருவிழா எடுத்தனர்.
இப்பெரு விழாவில் கொம்பு முறித்தல் போர்த் தேங்காய் உடைத்தல் தட்டு வசந்தன் போன்ற நிகழ்வுகள் நிகழ்ந்தன என்பது வரலாறு கூறும் செய்திகள் ஆகும்.
பெருவிழா வைகாசித் திங்களில் வருடா வருடம் ஆரம்பிக்கின்றது. முதல் நாள் பட்டயம் கூறுகின்ற நிகழ்வும் இடம்பெற்று வந்தது. வைகாசிப்பொங்கல் திருக்குளிர்த்தி குழுத்தி எனும் நாமங்கள் அழைக்கப்பட்டு வந்த இந்த சடங்கு இன்றும் தொடர்ந்து நடைபெறுவது அம்பாளின் அனுக்கிரகமே.
திருக்குளிர்த்தி
பொதுவாக ஈழநாட்டிலுள்ள கண்ணகி அம்மன் ஆலயங்களில் திருவிழா தமிழ் மாத வைகாசி பவுர்ணமியில் இடம்பெறும் .ஆயினும் காரைதீவு மற்றும் வற்றாப்பளையில் கோயில் கொண்டிருக்கும் பத்தினி தெய்வத்தின் திருவிழா வைகாசி பௌர்ணமி திங்கட்கிழமை நடைபெறும். ஆயினும் திங்கட்கிழமை அல்லது வைகாசி பவுர்ணமியில் பௌர்ணமிக்கு அடுத்து வரும் திங்கட்கிழமை நடைபெறுவது மரபாகும்.
கண்ணகி வழக்குரையில்... 'வைகாசித் திங்கள் வருவேன் என்று '...என்று கூறுகின்றது. அதை அடியொற்றி திங்கள் என்பது பௌர்ணமியும் திங்கட்கிழமையும் குறிப்பதாகும்.
காரைதீவு கண்ணகி அம்பாள் ஆலயத்தில் தமிழ் மாதம் வைகாசி திங்கட்கிழமை நடைபெற்று வருவது மரபுவழி வந்ததாகும்.
முதல் நாள் நிகழ்வு
இவ்வாலயத்தின் திருவிழாவானது குளிர்த்தி நடைபெறும் திங்கட்கிழமைக்கு முன்வரும் திங்கட்கிழமை அன்று சமுத்திர தீர்த்தம் எடுத்தவுடன் கல்யாண கால் நடுவது உடன் ஆரம்பமாகின்றது.
இங்கு கல்யாண காலாக பூவரசம் மரமே தெரிவு செய்யப்படுவது மரபாகும்.
சமுத்திரத்திலே தீர்த்தம் எடுத்து வரும் பொழுது ஏலவே தெரிவுசெய்யப்பட்ட மெய்யன்பர் ஒருவரின் காணியில் உள்ள பூவரச மரத்தில் உள்ள பூவரசு மரத்தின் கிளையை ஆயுதம் பாவிக்காமல் முறித்து அதனை சமுத்திர தீர்த்தத்துடன் ஆலயத்திற்கு கொண்டு செல்வார்கள்.
ஆலயத்திலேயே பத்தினி தெய்வத்திற்கு முன்பாக பூவரசு மரககிளையை நட்டு கப்புகனார் கிரியைகள் செய்து கூறை சேலை அணிவித்து ஆலயத்தில் உணர்வு பூர்வமாக நடுவார்கள்.
அங்கு பூசைசெய்து முதல் நாள் நிகழ்வு நிறைவடையும்.
அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு கல்யாண காலுக்கும் அம்பாளுக்கும் பூஜைகள் நடைபெற்று பின்னர் உடுக்கை அடித்து ஊர் சுற்று காவியம் பக்தர்களால் பாடப்பெறும்.
மறுநாள் புதன்கிழமை தொடங்கி ஞாயிறு வரைக்கும் பகல் ஒரு மணிக்கு அம்பாளுக்கு பூசையும் மாலை 7 மணிக்கு மணிக்கு அம்பாளுக்கு உடுக்கை அடித்து ஊர்சுற்றுக்காவியம் பாடுதலுடன் 5 நாட்களில் நிகழ்வு நிறைவு வரும் .
ஐந்து நாட்களிலும் பத்தினி தெய்வத்தின் பகல்பூஜை செய்யும்போது அம்பாளுக்கு சோறும் கறியும் படைக்கப்படும். இதனை பச்சை கட்டுதல் என்று அழைப்பார்கள்.
இவ்வாலயத்தில் அம்பிகை அடியார்களுக்கு வழங்கப்படும் மரபுரீதியான சிறப்பான பிரசாதம் சோறும் கறியும் ஆகும் .
குளிர்த்தி
இறுதி நாளான திங்கட்கிழமை முழுநாளும் பூஜைகள் இடம்பெறுவதில்லை. அன்றைய தினம் பக்தர்கள் நேர்த்திக் கடன்களை செலுத்துவார்கள் ஆண்கள் அங்கப்பிரதட்சணம் செய்தும் பெண்கள் கற்பூரச்சட்டி எடுத்தும் காவடி எடுத்தும் நேர் கடன்களை செலுத்துவார்கள்.
அன்றைய தினம் பக்தர்கள் உபவாசமிருந்து பத்தினி தெய்வத்திடம் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்யுமாறு வேண்டி விரதம் அனுஸ்டிப்பார்கள்.திங்கள் முழு நாளும் பக்தர்களால் சிலப்பதிகாரக் கதைபாடப்படும்.
இறுதிநாள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பான விசேட பூஜை இடம்பெற்று தொடர்ந்து குளித்திபாடல் பாடி வழிபடுவர்.
பத்தினித் தெய்வமாம் கண்ணகி அம்மனை குளிர்விக்கும் பொருட்டு (குரச்சி) கலயத்தில் மந்திரிக்கப்பட்ட தூய நீரில் வெற்றிலை பாக்கு வாழைப்பழம் தாமரைப் பூக்கள் சிலம்பு அம்மானைக் காய் என்பவற்றுடன் அம்பாளின் தல விருட்சமான வேம்பு மரத்தின் பெறப்பட்ட இலைகளால் பாடல்களின் கருத்துகளுக்கு ஏற்ப கலயத்தில் எடுத்துச்செல்லப்படும் நீர் தெளிக்கபடும்.
அவ்வேளையில் இஎட்டு திசைகளிலும் இருந்து வழிபடும் அம்பிகை அடியார்கள் மீது கலயத்தில் உள்ள தீர்த்தம் வேப்பிலைக் கொத்தால் தெளிக்கப்படும். இறுதியில் குளிர்த்தி பாடல்கள் பாடி முடித்ததும் கப்புகனாரால் மங்கல கீதம் பாடப்பெற்று சிறப்பு பூஜைகள் நடைபெறும்..
குளிர்த்தி முடிவடைந்ததும் பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்படும்.
எட்டாம் சடங்கு
குளிர்த்தி முடிந்து. அடுத்து வரும் திங்கட்கிழமை (20)அம்பாளுக்கு எட்டாம் சடங்கு இடம்பெறும். பிற்பகல் 3 மணியில் இருந்து கிராமத்து மக்கள் அங்கு தனித்தனியாக புதிய நெல்லில் இருந்து பெறப்பட்ட அரிசியை கொண்டு பொங்கலிட்டு நேர்த்தி செய்வார்கள். இது ஆலயத்தின் விசேஷமான அம்சம் என்பதை குறிப்பிடலாம்.
யாழ் நூல் தந்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாவையும் சேவையின் சின்னம் சுவாமி நடராஜானந்தாவையும் இந்நாட்டிற்கு ஈன்றளித்த கற்பின் தெய்வம் கண்ணகி தாயை காரைதீவு தமிழ் கிராம மக்கள் குலதெய்வமாகவும் காவல் தெய்வமாகவும் வழிபட்டு வருகின்றார்கள்.
பாரம்பரிய வைகாசி திருக்குளிர்த்தி சடங்கு நாட்டு மக்கள் மனங்களில் நம்பிக்கை மிகுந்த வாழ்க்கையை உருவாக்குவதாக.
விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
0 comments :
Post a Comment