சர்வ கட்சி தலைவர்கள் கூட்டம் கூறியதென்ன?



ஆர்.சனத்-
பிரதமரை ஜனாதிபதி பதவி நீக்க முடியாது
நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியம்
பாதுகாப்பு அமைச்சு பதவியை மட்டும் ஜனாதிபதி வகிக்க இணக்கம்
'இரட்டை குடியுரிமை தடை'க்கு எதிர்ப்பில்லை

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு - தனது இஷடத்துக்கேற்ப பிரதமரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்தை, அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் உள்ளடக்காமல் இருப்பதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை இறுதிப்படுத்தும் நோக்கில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று முன்தினம் (03) சர்வ கட்சி தலைவர்கள் கூட்டம், பிரதமரின் செயலகத்தில் நடைபெற்றது.
ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், 43 ஆம் படையணி, முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட பிரதான கட்சிகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை வகிப்பவர், தனக்கு தேவையான நேரத்தில் பிரதமரை பதவி நீக்கம் செய்யலாம் என்ற ஏற்பாடு அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தது.
எனினும், உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் அந்த ஏற்பாடு - சரத்து உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
'20' இல் இருந்த அந்த ஏற்பாடு '21' இலும் தொடர வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த கோரிக்கை கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
மாறாக பிரதமரை பதவி நீக்கம் செய்யும் யோசனையை, ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கலாம். அந்த யோசனைக்கு நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை இருந்தால் பிரதமரை பதவி நீக்கலாம். அதாவது, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன்தான் பிரதமரை ஜனாதிபதி பதவி நீக்கலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஒத்த நடவடிக்கையாக இது கருதப்படுகின்றது.
அடுத்ததாக ஜனாதிபதி அமைச்சு பதவிகளை வகிப்பது சம்பந்தமாக ஆராயப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் நீடிக்கும்வரை, அவர் பாதுகாப்பு அமைச்சு பதவியை மட்டும் வகிக்கலாம். அடுத்து வரும் ஜனாதிபதிக்கு அந்த ஏற்பாடு பொருந்தாது, ஜனாதிபதி பதவியை வகிப்பவர் அமைச்சு பதவிகளை வகிக்க முடியாது என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடு தொடர்பில் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
அதேவேளை, இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு தடை விதிக்கும் யோசனைக்கு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை. இதனால் அந்த ஏற்பாடும் திருத்தமின்றி 21 இல் உள்வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் 21 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்று - இறுதிப்படுத்தப்பட்டு, அச்சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும். அதன்பின்னர் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.
மொட்டு கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு
அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற, சர்வக்கட்சி தலைவர்கள் கூட்டத்திலிருந்து மொட்டு கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர் என அறியமுடிகின்றது.
இக்கூட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு) கட்சியின் சார்பில் பங்கேற்றிருந்த அக்கட்சியின் தவிசாளர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர், கூட்டம் நடைபெறும்போது அங்கிருந்து வெளியேறினர் என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
மேற்படி சந்திப்பில் இவரும் பங்கேற்றிருந்தார்.
ஜனாதிபதி தனக்கு ஏற்ற வகையில் பிரதமரை பதவி நீக்கம் செய்யலாம் என்ற சரத்தை, 21 இற்குள் உள்வாங்குவதற்கு கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்தே பீரிசும், தினேஷ் குணவர்தனவும் கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
" இவ்விருவருக்கும் பிரிதொரு கூட்டத்தில் பங்கேற்க இருந்ததால், இடையில் சென்றனர்." என நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :