தற்போது க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை எழுதிக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கான, புதிய உயர்தர வகுப்புகளை,அம் மாணவர்களின் நலன் கருதி சற்று காலதாமதமாக ஆரம்பிக்குமாறு டாக்டர் நாஹுர் ஆரிப் கோரிக்கை முகநூல் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.
கல்முனை பிரதேச தனியார் கல்வி கூடங்கள் சாதாரண தர பரீட்சை முடிவடைந்த மறுநாளே உயர்தர வகுப்புகளை ஆரம்பிக்க விளம்பரம் செய்து வருகிறது. இது மாணவர்களின் உள உடல் நலத்திற்கு நல்லதல்ல என்று கல்வியியலாளர்களும் மருத்துவர்களும் கூறுகின்றனர்.
இந்நிலையில் முற்போக்கு சிந்தனை கொண்ட வைத்தியர் ஆரீப் இவ்வாறான ஒரு பதிவை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
தற்போது க. பொ. த. (சா/த) பரீட்சை நடந்துகொண்டிருக்கின்றது. இன்னும் பரீட்சை முடிவுறவில்லை. தனியார் கல்விக்கூடங்கள் முண்டியடித்துக்கொண்டு அடுத்த பருவகால உயர்தர கற்கைநெறிக்கான விளம்பரங்களை ஆரம்பித்துவிட்டனர்.
உங்களுக்கு ஏனிந்த அவசரம்?
நிச்சயமாக நீங்கள் மாணவர் நலனுக்காகவன்றி, பணம் சம்பாதிக்கும் இலக்கிலேயே குறியாகவும், வெறியாக இருக்கிறீர்கள்.
புனிதமான இரண்டு துறைகளான வைத்தியமும், கல்வியும் இன்று மாபியாக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன.
ஓரிரு மாதங்களுக்கு மாணவர்களை ஓய்வெடுக்கவிடுங்கள். அடுத்த மரதனுக்கு தயாராக சற்று மூச்செடுக்க விடுங்கள்.
ஆன்மீக ரீதியில் அவர்களை சற்று புடம்போட அவர்களுக்கு சற்று கால அவகாசம் கொடுங்கள்.
பெற்றோர் இந்த விடயத்தில் அக்கறை காட்டுங்கள்.
ஆன்மீக ரீதியான உந்துதல் இல்லாத வெறும் ஏட்டுக்கல்வியும் இன்றைய இளம் சந்ததியினர் போதைப்பொருள் உட்பட்ட பல்வேறு சீரழிவுகளுக்குள் வீழ்வதற்கு காரணமாகின்றது.
பெற்றோர்களே! பரீட்சை முடிந்தவுடன் ஓரிரு மாதங்களுக்கு உங்களுடைய பிள்ளைகளுக்கு ஆன்மீக ரீதியான வழிகாட்டுதல்கள் கிடைப்பதற்காகமுயற்சியுங்கள்.
தனியார் கல்விக்கூடங்களே! உங்களின் பணம் சம்பாதிக்கும் வெறியை கொஞ்சம் தளர்த்தி, பரீட்சை முடிந்த மறுநாளே உயர்தர கற்கையை ஆரம்பிக்காமல் சற்று பிற்படுத்துங்கள்!
கல்வியியலாளர்கள் என்று பீத்திக்கொண்டு சமூகத்தில் வலம் வருபவர்கள் இப்படியான விடயங்களிலாவது வாய்திறக்கலாமே!
0 comments :
Post a Comment