சபை முதல்வர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்து முன்னாள் எம்.பி திலகர் வேண்டுகோள்
எப்போதாவது ஏற்படும் தேசிய உணவு நெருக்கடிக்கடிணியின்போது மாத்திரம் பெருந்தோட்டக் காணி பயன்பாடு குறித்துப் பேசாது, எப்போதுமே பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரம் குறித்தும், காலங்காலமாக நிலவிவரும் பெருந்தோட்ட மக்களின் காணி விவகாரம் குறித்தும் காத்திரமான கொள்கைத் தீர்மானம் ஒன்று அவசியம் எனவும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் உணவு நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் பெருந்தோட்டப்பகுதிகளில் பயிரிடப்படாத நிலங்களில் உணவு உற்பத்திகளை மேற்கொள்ளுதல் வேண்டும் என்ற ஜனாதிபதியின் அறிவிப்பை அடுத்து, அத்தகைய திட்டத்தை சாத்தியமான முறையில் நடைமுறைப்படுத்ததுவதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண்பது தொடர்பிலும் நுவரெலியா மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு விடயத்தில் காட்டப்பட்டுள்ள பாரபட்சம் தொடர்பில் நியாயமான தீர்வு காண்பது தொடர்பிலும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரும் சபை முதல்வருமான தினேஷ் குணவர்தனவை மலையக அரசியல் அரங்கப் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடி உள்ளனர்.
மேற்படிச் சந்திப்பு வியாழன் (9/6) அன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள சபை முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ள முன்னாள் எம்பி திலகர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் உணவு நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் பெருந்தோட்டப்பகுதிகளில் பயிரிடப்படாத நிலங்களில் உணவு உற்பத்திகளை மேற்கொள்ளுதல் வேண்டும் என்ற ஜனாதிபதி கோட்டபாய வின் ஆலோசனையை நாம் வரவேற்கின்றோம். அதே நேரம் இப்படியான நெருக்கடியான நேரங்களில் மாத்திரம் பெருந்தோட்டபபகுதியில் பயிரிடப்படப்படாத காணிகளில் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளும் தற்காலிக தீர்மானமாக இது அமைதல் கூடாது.
1972-1977 பஞ்ச காலப்பகுதிகளில் இவ்வாறான ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே மக்கள் மரவள்ளிச் செய்கையில் ஈடுபட்டதான வரலாறுகள் மலையகத்தில் உண்டு. ஆனாலும் அந்த காணிகள் மக்களுக்கு நிரந்தரமாக்கப்படவோ மாற்றுவாழ்வாதார வழிகளோ நிரந்தரமாகச் செய்யப்படவில்லை. மாறாக அரச காணிகள் மீண்டும் 1992ல் தனியார் கம்பனிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டு மக்கள் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுள்ளனர்.
மலையகப் பெருந்தோட்ட மக்களின் காணி உரிமை குறித்து நீண்டாகாலமாக பேசப்பட்டுவருகின்றது. தென் சப்ரகமுவ மாகாணங்களைப் போன்று
மலையகத்திலும் சிறுதோட்ட உடமையாளர் முறைமை அறிமுகம் செய்யப்படுதல் வேண்டும் எனும் கோரிக்கையை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். இப்போதைய அறிவிப்பினைத் தொடர்ந்து மலையகப் பகுதிகளில் இளைஞர்கள் இந்தத் திட்டத்துக்கு தயாராகிவிட்டனர். சில தோட்டப் பகுதிகளில் பயிரிடப்படாத நிலங்களை தோட்டப்பகுதி இளைஞர்கள் அடையாளம் கண்டும் உள்ளனர். மஸ்கெலியா சாமிமலைப் பகுதிகளில் இவ்வாறு காணிகளை அடையாளம் கண்டு எல்லைப்படுத்திய இளைஞர்கள் தோட்ட முகாமைத்துவத்துக்கு முறையான எழுத்து மூலமான வேண்டுகோளை விடுத்துள்ளனர். ஆனாலும் அவர்களுக்கு உரிய அனுமதிகள் வழங்கப்படுவதற்கு மாறாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படடுள்ளதாக அறியக்கிடைக்கிறது. இந்த நிலைமை மேலும் பல்வேறு வகையான சிக்கல்களைத் தோற்றுவிக்கலாம்.
எனவே பெருந்தோட்டப்பகுதிகளில் பயிரிடப்படாத காணிகளை அங்கே வேலைவாய்ப்புகள் இன்றி ஆங்காங்கே சமயாசமய வேலைகளைச் செய்துகொண்டிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு முறையான வகையில், ஒப்பந்த அடிப்படையில் பகிர்தளித்து அந்த மண்வளத்தையும் மனித வளத்தையும் முறையாகப் பயன்படுத்தும் நிகழ்ச்சித் திட்டம் ஒன்று அவசியம்.
இத்தகைய திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்துவதில் பிரதேச செயலக அதிகாரங்களை பெருந்தோட்டப் பகதிகளில் பயன்படுத்துவத்துவது தொடர்பில் வரலாற்று ரீதியாகவே பிரச்சினைகள் உள்ளன. நுவரெலியா மாவட்டப் பிரதேச செயலக அதிகரிப்பு விடயத்தில் கூட காலி, இரத்தினபுரி மாவட்டங்களைவிட பாரபட்சமான முறையில் இடம்பெற்றுள்ளது தொடர்பில் நாம் ஏற்கனவே நாடு தழுவிய கவனத்தைக் கோரியுள்ளோம்.
இந்த நிலையில் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் தோட்டப் பகுதி இளைஞர், யுவதிகளுடன் முறுகலை ஏற்படுத்தும் திட்டமாக ஜனாதிபதியின் அறிவிப்பை மாற்றிக்கொள்ளாது, அரசாங்கம் அதன் நிர்வாக ஒழுங்க முறையான மாவட்ட செயலக, பிரதேச செயலக, கிராம உத்தியோகத்தர் அதிகாரங்கள் ஊடாக பரமப்பரை பரம்பரையாக தோட்டங்களில் வாழும் குடும்பங்களின் வழித்தோன்றல்களாக் வாழும் இளைஞர், யுவதிகளை இந்தந்திட்டத்தில் உள்வாங்க வேண்டும் எனும் வேண்டுகோளை நாம் முன்வைத்துளளோம். இது குறித்து அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டு செல்லவும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மட்டத்தில் அதனைக் கலந்துரையாடவும் நடவடிக்கை எடுப்பதாகவம் அமைச்சர் தினேஷ் குணவர்தன உறுதியளித்தார்.
இச்சந்திப்பில் மலையக அரசியல் அரங்கத்தின் செயலாளர் நா.கிருஷ்ணகுமார் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணரத்ன ஆகியோரும் கலந்தகொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment