கல்முனை சந்தையில் நியாய விலையில் பொருட்களை விற்க நடவடிக்கை;சந்தை வர்த்தகர் சங்கத்தின் முன்மாதிரி



அஸ்லம் எஸ்.மௌலானா-
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு கல்முனை மாநகர பொதுச் சந்தையில் நுகர்வோருக்கு நியாயமான விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்கு மாநகர பொதுச் சந்தை வர்த்தகர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தகர் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் நேற்று முன்தினம் ஆசாத் பிளாஸா மண்டபத்தில் நடைபெற்றபோது இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

சங்கத்தின் தலைவர் ஏ.பி.ஜமால்தீன் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுமார் 250 இற்கு மேற்பட்ட வர்த்தகர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கிழக்கு மாகாணத்தில் முன்னணி வர்த்தக மையமாகத் திகழ்கின்ற இந்த சந்தையை முன்னேற்றுவதற்கான விடயங்கள் பற்றியும் சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் கஷ்டங்களை கருத்தில் கொண்டு கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக்கர்கள் எதிர்வரும் காலங்களில் பெரிதாக இலாபங்களை எதிர்பார்க்காமல் நுகர்வோருக்கு உணவுப் பொருட்களை முடிந்தளவுக்கு குறைந்த விலையில் விற்பதற்கு முன்வர வேண்டுமென சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.கபீர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த வேண்டுகோளுக்கு அனைத்து வர்த்தகர்களும் இணக்கம் தெரிவித்ததுடன் எதிர்காலங்களில் நியாயமான விலைகளில் உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்கு உறுதியளித்துள்ளனர்.

இந்த விடயத்தை எமது சந்தை வர்த்தக சங்கம் மிகவும் கரிசனையுடன் கண்காணித்து, வழிநடாத்தும் என அதன் செயலாளர் ஏ.எல்.கபீர் தெரிவித்தார்.

கடந்த கொரோனா அசாதாரண சூழ்நிலையின்போது கல்முனை மாநகர பொதுச் சந்தையில் கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக அமுல்படுத்துவதிலும் பொது மக்களை பாதுகாக்கின்ற விடயத்திலும் இப்பொதுச் சந்தை வர்த்தகர் சங்கம், மாநகர சபையுடனும் சுகாதாரத்துறையினருடன் இணைந்து ஆக்கபூர்வமான செயற்பாட்டுகளில் ஈடுபட்டு, முன்னுதாரணமாகத் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :