நாட்டினுடைய பொருளாதார நெருக்கடியினைக் கருத்திற்கொண்டு, கல்முனை பிராந்தியத்திலுள்ள வைத்தியசாலைகள், சுகாதார நிறுவனங்களில் பயன் தரும் மரங்கள் மற்றும் உணவுப் பயிர்களை நடுவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றினை முன்னெடுத்து வருவதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்தார்.
பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு சனிக்கிழமை (04) ஒருதொகுதி மருத்துவ உபகரணங்களை கையளித்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் ஏதிர்காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுகின்றது. உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையில் சுகாதார துறையினரும் நாட்டினுடைய பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்களாலான பங்களிப்புக்களைச் செய்ய வேண்டும்.
கல்முனை பிராந்தியத்திலுள்ள வைத்தியசாலைகள், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலங்கள் உள்ளிட்ட சுகாதார நிறுவனங்களில் போதியளவு நிலங்கள் காணப்படுகின்றன. குறித்த நிலங்களில் பயன் தரும் மரங்கள் மற்றும் உணவுப் பயிர்களை நடுவதற்குரிய விசேட வேலைத்திட்டமொன்றினை முன்னெடுத்து வருகின்றோம். அவற்றை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு சகலருடைய ஒத்துழைப்புக்களும் அவசியமாகும். நாங்கள் சுகாதாரத்துறையினர் என்றும் அதிகாரிகள் என்றும் கூறிக்கொண்டு சும்மா இருந்துவிடாதீர்கள்.
ஒரு சிறியதொரு பொருளையேனும் கொள்வனவு செய்ய முடியாத இக்காலகட்டத்தில் என்னுடைய தனிப்பட்ட செல்வாக்கினைப் பயன்படுத்தி பெற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவ உபகரணங்களில் சுமார் 4மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களை பொத்துவில் வைத்தியசாலைக்கு கையளித்துள்ளோம். குறித்த பொருட்களின் மூலம் மக்கள் உச்ச பயனடையும் வகையில் பணியாற்றுங்கள். இல்லையெனில் அவற்றை தேவையான இடங்களுக்கு வழங்கி ஏனையவர்களுக்கும் உதவுங்கள்.
மருந்துப் பொருட்களுக்கு அதிக விலை மற்றும் தட்டுப்பாடுகள் நிலவிவரும் இக்காலகட்டத்தில், அரசாங்க வைத்தியசாலைகளில் நோயாளர்களின் வருகையும் அதிகரித்துக் காணப்படுகின்றது. எனவே மருந்துப் பொருட்களை சிக்கனமாகப் பாவியுங்கள். ஒரு பிளாஸ்டர் துண்டையேனும் வீன் விரயம் செய்துவிடாதீர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment