எமது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து எதிர்வருகின்ற காலங்களில் நாடும் நாமும் எதிர்கொள்ளவிருக்கும் உணவு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக நாடளாவிய ரீதியில் உணவு பாதுகாப்பு தொடர்பான தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அம்பாரை மாவட்டத்தில் ஏற்படவிருக்கின்ற உக்கிரமான உணவுப் பற்றாக்குறைக்கு தீர்வாக எதிர்காலத்தில் மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளையும் தழுவியதாக இதுவரையிலும் பல வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் மாவட்டத்தின் சகல அரச நிறுவனங்களுக்கும் சொந்தமான இடங்களில் உள்ள வெற்று நிலங்களில் துரித உணவு உற்பத்தி செயற்றிட்டத்தை அமுல் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப் பட்டுள்ளது. பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சகல அரச நிறுவனங்களுக்கும் சொந்தமான வெற்று இடங்களில் பயிர்ச்செய்கை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் அந்நிறுவனங்களால் பயிர் செய்கை செய்ய முடியாத நிலைமை இருப்பின் அந்த இடங்களை வேறு நிறுவனங்களுக்கு (படையினர், சிவில் பாதுகாப்பு திணைக்களம், இலங்கை பொலிஸ் போன்றன) அல்லது விவசாய சங்கங்களுக்கு ஒதுக்கி பயிர்ச்செய்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இவ்வேலைத்திட்டம் தொடர்பாக இறக்காமம் பிரதேசத்தில் உள்ள பாடசாலை அதிபர்கள், அரச நிறுவனத் தலைவர்கள் ஆகியோருக்கு உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான விரைவான வேலைத்திட்டத்தை தெளிவுபடுத்தும் கூட்டம் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி) தலைமையில் 2022.06.07 ஆம் திகதி பிரதேச செயலாளர் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் உட்பட விடயத்திற்கு பொறுப்பான திட்டமிடல் பிரிவு சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் யூல்.எல். ஆஹிர், விவசாய திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி எஸ்.ஸாஜிதா மற்றும் திருமதி எம்.ஏ. இர்பானா, உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச்.றகீப் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment