கல்முனை மாநகர பொது நூலகம் தொடர்பாக ஊடகங்கள் மற்றும் முகநூல்களில் பதிவேற்றும் செய்யப்பட்ட புகைப்படங்கள் தொடர்பில் கல்முனை மாநகர முதல்வரின் ஊடகப்பிரிவு என அடையாளப்படுத்தப்பட்ட முகநூல் கணக்கினூடாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கத்தில் மாநகர பொது நூலகம் தொடர்பாக ஊடகங்கள் மற்றும் முகநூல்களில் பதிவேற்றும் செய்யப்பட்ட புகைப்படங்களும் தகவல்களும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் அந்த அறிக்கையில்,
கடந்த 2018/2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நகர திட்டமிடல் அமைச்சின் நிதியொதுக்கீட்டில் இந்நூலகம் முழுமையாக புனரமைப்பு செய்யப்பட்டது. அப்போது நூலகத்தின் உட்பகுதிகளிலும் புனர்நிர்மாண வேலைகள் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் அங்குள்ள பெறுமதி வாய்ந்த புத்தகங்கள் சிறிது காலம் அலுமாரிகளிலும் பெட்டிகளிலும் பைகளிலும் வைக்கப்பட்டு, பேணிப் பாதுகாக்கப்பட்டிருந்தன. உள்ளக புனரமைப்பு வேலைகள் துரிதமாக பூர்த்தியடைந்த பின்னர் அப்புத்தகங்கள் வாசககர்களின் பாவனைக்காக வழமைபோல் புக்செல்ப்களில் முறையாக அடுக்கி வைக்கப்பட்டு, வாசகர்களினால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், புனரமைப்பு காலத்தில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்களை சில விஷமிகள் தற்போது முகநூல்களில் பதிவிட்டு, இப்பொது நூலகம் வாசகர்களின் பயன்பாட்டுக்கு பொருத்தமில்லாமல்- பெரும் அவல நிலையில் கிடப்பது போன்று சித்தரித்து மாநகர சபையை விமர்சித்துள்ளனர். இது மிகவும் கவலைக்கும் கண்டிக்கத்தக்கதுமான செயற்பாடாகும்.
இது மக்களை குழப்புவதற்காகவும் மாநகர சபை மீது தப்பபிப்பிராயங்களை ஏற்படுத்துவதற்காகவும் வேண்டுமென்றே பரப்பப்படுகின்ற பொய்யான- இட்டுக்கட்டப்பட்ட தகவல்கள் என்பதை இந்நூலகத்திற்கு வருகின்ற வாசகர்கள் நன்கறிவார்கள். மேலும், இதன் உண்மை நிலையை கண்டறிய விரும்புவோர் ஒரு தடவை நூலகத்திற்கு விஜயம் செய்து பார்வையிட முடியும்.
மிகவும் பழைமை வாய்ந்த இந்நூலகக் கட்டிடம் கல்முனை மாநகர சபையின் முயற்சியினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள்- நகர திட்டமிடல், நீர்வழங்கல் அமைச்சராக பதவி வகித்தபோது, அந்த அமைச்சின் நிதியொதுக்கீட்டில், புனரமைப்பு செய்யப்பட்டு, கடந்த சில வருடங்களாக மிகவும் சிறப்பாக இயங்கி வருகின்றது. கல்முனைப் பிராந்தியத்தில் முதன் முறையாக e library சேவையும் இந்நூலகத்திலேயே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது Smart Phone பாவனை அதிகரித்திருப்பதால் புத்தகங்கள், சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகளை படிப்பதற்காக வருகின்ற வாசககர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்திருக்கின்ற போதிலும், மாணவர்கள் கணிசமானளவு வருகைதந்து நூலகத்தை சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர். அவ்வப்போது வெளிவருகின்ற புதிய நூல்களும் மாநகர சபையினால் கொள்வனவு செய்யப்பட்டு, அறிவுத்தேடலுக்கு பாரிய பங்களிப்பு வழங்கி வருகிறது. நூலகத்தை நாடி வருகின்ற அனைத்து வாசககர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
கல்முனை பொது நூலகத்தின் தற்போதைய நிலை எந்தளவு சிறப்பாக இருக்கிறது என்பதற்கு இன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சாட்சி பகர்கின்றன.
இவ்வாறு கல்முனை மாநகருக்கு முத்தாய்ப்பாய் அமைந்திருக்கின்ற இந்நூலகம் தொடர்பில் பிழையான தகவல்களை வெளியிட்டு, அதனை ஓர் அசிங்கமான இடமாக சித்தரிப்பதன் மூலம் குறித்த விஷமிகள் அடைகின்ற இலாபம்தான் என்ன?
இது கல்முனை மாநகர சபையின் கீழ் வருகின்ற ஒரு விடயம் என்பதற்காக, அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்து முகமாகவே உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு, குறித்த விஷமிகள் வழமைபோல் எம்மீது அவதூறுகளை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றனர். இவர்களால் எப்போதும் இவ்வாறான பொய்களையும் அபாண்டங்களையும் கட்டவிழ்த்து விடுகின்ற துர்நடத்தைகளில் மாத்திரமே ஈடுபட முடியும். மாறாக கல்முனை மாநகரின் அபிவிருத்திக்கோ, இந்நூலகத்தின் வளர்ச்சிக்கோ ஒரு செங்கல்லைத்தானும் கொண்டு வர இவர்களால் ஒருபோதும் முடியாது என்பதை மக்கள் அறிவார்கள் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment