சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தவறான கருத்துக்களை சரி செய்வதற்கு தூதரகங்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள திட்டம் வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருப்பது மிகவும் தாமதமான விழிப்பு என்பதுடன் வெளிநாடுகள் அதிலும் குறிப்பாக முஸ்லிம் நாடுகள் ஏன் நமது நாடு பற்றி தப்பாக நினைக்கிறார்கள் என்பதற்கான காரணத்தை எமது ஜனாதிபதி மிகத்தெளிவாக அறிய முற்பட வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சுற்றுலாத்துறை அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலில் ஜனாதிபதி உரையாற்றும் போது நாட்டின் சுற்றுலாத்துறை வீழ்ச்சி கண்டிருப்பதாகவும் அதனால் நாடு பற்றிய தவறான கருத்து பிரச்சாரங்களை தூதரகங்கள் மூலம் சரி செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அங்கு சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் வரலாற்றை பார்க்கும் போது கடன் இன்றி இலங்கைக்கு உதவிய நாடுகள் முஸ்லிம் நாடுகளே. அப்படியிருந்தும் முஸ்லிம் நாடுகள் நமது நாடு பற்றி கற்பனையில் தவறாக நினைக்கவில்லை.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை முஸ்லிம் நாடுகள் மிகவும் நேசித்தன. 2012ல் ஐநாவில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு எதிராக முஸ்லிம் நாடுகளே ஆதரவளித்தன. அப்படியிருந்தும் ஞானசார தேரர் போன்ற இனவாத தேரர்களின் இனவாத அட்டகாசங்களுக்கு மஹிந்த எதிர் நடவடிக்கை எடுக்காமை, தம்புள்ள பள்ளி தாக்குதல், அளுத்கம தாக்குதல் போன்றவற்றால் நமது நாடு இனவாத நாடு என்பதை முஸ்லிம் நாடுகள் புரிந்து கொண்டன. அதே போல் நல்லாட்சியின் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட அம்பாரை பள்ளி தாக்குதல், திகன, கண்டி தாக்குதல், ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு கெம்பசுக்கெதிரான சிங்கள, தமிழ் இனவாத அரசியல்வாதிகளின் இனவாத பரப்புரை, அரபு மொழிக்கெதிரான கோஷம், முஸ்லிம் பெண்களின் சுதந்திர ஆடைக்கெதிரான தாக்குதல் போன்றவை நமது முஸ்லிம்களை இனச்சுத்தி செய்கிறது என்பதை முஸ்லிம் நாடுகள் புரிந்து கொண்டன.
அதன் பின் கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற பின் முஸ்லிம்கள் மீது தனியான தாக்குதல்கள் நடைபெறாவிட்டாலும் கொரோனா என்ற பெயரில் முஸ்லிம்களின் ஜனாஸாவை எரித்தமை மிக மோசமான எதிர்வினையை உலகில் ஏற்படுத்தியது. இத்தகைய காரணங்கள்தான் நமது நாட்டைப்பற்றி மோசமான பார்வையை உலகுக்கு கொடுத்ததுடன் முஸ்லிம் நாடுகளின் உதவிகள் குறைந்தன. ஆகவே தூதுவர்களை அழைத்து விளங்கப்படுத்தினால் போதும் உலக நாடுகள் நம் நாடு பற்றி புரிந்து விடும் என நினைப்பது பிழை. இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு நடந்த அநியாயங்களுக்கு உடனடியாக தீர்வை பெற்றுக்கொடுத்து அதனை தூதுவர்கள் கண் முன் காட்ட வேண்டும்.
அந்த வகையில் மூடப்பட்டுள்ள மட்டக்களப்பு கெம்பசை தனியார் பல்கலைக்கழகமாக இயங்க அனுமதிக்க வேண்டும். பயங்கரவாததில் சம்பந்தப்படாத தவ்ஹீத் ஜமாஅத்துகள் மீதான தடைகளை நீக்க வேண்டும். முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டமைக்காக அரசு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். முஸ்லிம் திருமண சட்டத்தில் கைவைக்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தை அரசு வழங்க வேண்டும். எமது கட்சியின் இந்த ஆலோசனைகளை நடைமுறை படுத்தும் வகையில் எமது கட்சியின் தலைமையில் குழுவொன்று அமைக்க வேண்டும். இதையெல்லாம் செய்யாமல் தூதுவர்களை அழைத்து பேசுவது முஸ்லிம் நாடுகளை ஏமாற்றுவதாக அந்நாடுகள் புரிந்து மேலும் மேலும் நமது நாடுபற்றி தப்பபிப்பிராயமே பரவும் என கூறி வைக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment