கல்முனையில் மண்ணெண்ணெய், எரிவாயு விநியோகத்தை சீரமைக்க நடவடிக்கை;அதிகாரிகள், விநியோகஸ்தர்கள் மாநகர சபையில் கூடித் தீர்மானம்



அஸ்லம் எஸ்.மௌலானா-
நாட்டில் எரிபொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்ற சூழ்நிலையில் கல்முனை மாநகர பிரதேசங்களில் மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு போன்றவற்றை விநியோகம் செய்யும்போது ஏற்படும் பிரச்சனைகளை நிவர்த்தி செய்து, பொது மக்கள் அவற்றை சிரமமின்றி பெற்றுக்கொள்ளும் பொருட்டு விநியோக நடவடிக்கைகளை சீராக ஒழுங்குபடுத்துவது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நேற்று புதன்கிழமை (01) மாலை, முதல்வர் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரம்ஸீன் பக்கீர், பிரதம பொலிஸ் பரிசோதகர் அப்துல் வாஹித், சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.பளீல், கல்முனை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் உட்பட கல்முனை மாநகர சபை எல்லையினுள் இயங்கி வருகின்ற எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகள், லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் பிராந்திய முகவர் நிலையத்தின் பிரதிநிதி, கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தகர் சங்கத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

இக்கலந்துரையாடலில் மண்ணெண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தின்போது நடத்துனர்களும் நுகர்வோரும் எதிர்நோக்குக்கின்ற பிரச்சினைகள், அழுத்தங்கள் மற்றும் குளறுபடிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டதுடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் நீண்ட நேரம் விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளுள் நடைமுறைக்கு சாத்தியமான விடயங்கள் தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு, சில முக்கிய தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடற்றொழிலில் ஈடுபடுகின்ற படகுகளுக்குத் தேவையான மண்ணெண்ணெய் விநியோகத்திற்கென
கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் தலா 02 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பிரத்தியேக நேரம் ஒதுக்கீடு செய்யபட்டு, அந்தந்த வேளையில் மாத்திரம் விநியோகம் செய்தல்.

பொதுமக்களுக்கு மண்ணெண்ணையை தட்டுப்பாடின்றி வழங்கும் பொருட்டு படகுகளுக்குத் தேவையான மண்ணெண்ணையை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இருந்து பிரத்தியேகமாக தருவித்து மேற்படி எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்க அவசர நடவடிக்கை எடுத்தல்.

உணவுப் பண்டங்கள் உற்பத்தி மற்றும் கைத்தொழில் துறைகளில் ஈடுபடுவோருக்கும் போதியளவு மண்ணெண்ணையை வழங்க விசேட ஒழுங்கு செய்தல்.

பஸ்கள் மற்றும் வாகனங்களின் பாவனைக்காகவும் வியாபார நோக்கங்களுக்காகவும் பெரிய கேன்களில் மண்ணெண்ணெய் வழங்குவதை கட்டுப்படுத்தல்.

எரிவாயு விநியோகத்தின்போது பதுக்கல் வியாபாரிகளுக்கு இடமளிக்காமல், தேவையான பொது மக்களுக்கு எரிவாயு கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு, கிராம சேவகர் பிரிவுகள் தோறும் அதனை விநியோகம் செய்வதற்கு அவசர நடவடிக்கை எடுத்தல்.

மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு விநியோகத்தின்போது குழப்பும் செயற்பாடுகளில் ஈடுபடும் தரப்பினரை கட்டுப்படுத்தி, குளறுபடிகள் இன்றி விநியோக நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுக்க பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரையும் கடமையில் ஈடுபடுத்தல் போன்ற தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :