17,18,19, 20 ஆகிய 4 சட்டங்களையும் ஆதரித்து வாக்களித்த ஒரேயொரு தமிழ் எம்.பி.
21ஐ ஆதரிக்கவும் தயார் நிலையில்
இலங்கை நாடாளுமன்றத்தில் 2001 ஆம் ஆண்டிலிருந்து நிறைவேற்றப்பட்டுள்ள 17 ,18, 19 மற்றும் 20 ஆவது திருத்தச்சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்த ஒரேயொரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக, டக்ளஸ் தேவானந்தா விளங்குகின்றார்.
அத்துடன், உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை ஆதரிக்கபோவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
1994 ஆம் ஆண்டில்தான் டக்ளஸ் தேவானந்தாவின், நாடாளுமன்ற அரசியல் பயணம் ஆரம்பமானது.
2001 இல் சந்திரிக்கா அம்மையார், தலைமையிலான கூட்டணி அரசில், 17 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஜனநாயக ஆட்சிக்கான ஆரம்ப புள்ளியாக கருதப்பட்ட 17 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக டக்ளஸ் தேவானந்தா வாக்களித்தார்.
2010 இல், ஜனநாயகத்துக்கு சாவுமணி அடித்து - சமாதி கட்டி - சர்வாதிகாரத்துக்கு சட்ட ரீதியாக அங்கீகாரம் அளிக்கும் வகையில் மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 18 ஆவது திருத்தச்சட்டத்துக்கும் டக்ளஸ் தேவானந்தா 'ஆமாம் சாமி' போட்டார்.
2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர், நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்தும் வகையில் மைத்திரி - ரணில் ஆட்சியில் முன்வைக்கப்பட்ட 19 ஆவது திருத்தச்சட்டத்தையும் டக்ளஸ் தேவானந்தா ஆதரித்தார்.
நாடாளுமன்றத்துக்கு பகிரப்பட்ட அதிகாரங்களை, மீண்டும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் கரங்களுக்குள் கொண்டுவரும் வகையில் 2020 இல் கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கும் டக்ளஸ் தேவானந்தா பச்சைக்கொடி காட்டினார்.
சர்வக்கட்சி அரசாங்கம் என பெயரிடப்பட்டுள்ள தற்போதைய ஆட்சியில் முன்வைக்கப்பட்டுள்ள 21 ஆவது திருத்தச்சட்டத்தையும் ஆதரிக்கும் நிலைப்பாட்டிலேயே அவர் உள்ளார். இது தொடர்பான அறிவிப்பையும் விடுத்துள்ளார்.
9 ஆவது நாடாளுமன்றத்தில் (தற்போதை) அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில், தினேஷ் குணவர்தன, காமினி லொக்குகே, பந்துல குணவர்தன உட்பட 24 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்படி 4 சட்டங்களுக்கும் ஆதரவு வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment