வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் “ கௌரவமான
உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்” எனும்
100 நாட்கள் செயல்முனைவானது வடக்கு கிழக்கிலுள்ள 08 மாவட்டங்களிலும் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படவுள்ளது.
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மக்களையும், சிவில் அமைப்புக்களையும்
ஒன்றிணைத்து பல்வகையான கவனயீர்ப்பு, ஜனநாயகப் போராட்டங்கள், ஒன்று கூடல்கள், ஊடக சந்திப்புக்கள் போன்ற செயற்பாடுகளை பல
சவால்களுக்கு மத்தியில் மேற்கொண்டு வரும் வடக்கு கிழக்கு ஒருங்கிறணைப்புக் குழுவின் அடுத்த கட்ட செயற்பாடாக ,தமிழ் மக்களின் உரிமை சார்ந்த ரீதியில் மேற்படி செயல் முனைவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச் செயற்பாட்டில் வடக்கு கிழக்கு வாழ் பொதுமக்கள், கிராம அடிப்படை அமைப்புகள், விவசாய மற்றும் மீனவ சங்கங்கள், பெண்கள் அமைப்புகள், மாணவர் அமைப்புகள், சிவில் அமைப்புகள் என்பன இணைந்து
செயற்படவுள்ளன.
மேற்படி, 100 நாட்கள் செயல் முனைவின் முதலாம் நாள் மக்கள் குரல் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்று தொடர்ந்து ஏனைய மாவட்டங்களிலும்
மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக
இச்செயற்திட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் சார்பில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் க.லவகுசராசா தெரிவித்துள்ளார்.
இச் செயற்திட்டம் தொடர்பில் அவ்வமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள
ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“நாங்கள் நாட்டை துண்டாடவோ, தனியரசோ கேட்கவில்லை. இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம்”
“வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும்”
“13 வது திருத்தச்சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப் பரவலாக்கத்துக்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது”
இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் சிறுபான்மை தமிழ் மக்களான நாம் ஆட்சிக்கு வந்த சிங்களப் பெரும்பான்மை அரசுகளின் இனவாதக் கொள்கைகளால் பல்வேறு வழிகளிலும் அடக்கப்பட்டு வந்துள்ளோம். அது இன்றுவரை தொடர்கிறது. இதுவே தமிழ் மக்கள் தமக்கான அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப் பரவலாக்கம் குறித்து சிந்திக்கத் தூண்டியது. இதன் நியாயத்தன்மையை பிராந்திய நட்பு நாடான இந்தியாவும் சர்வதேச நாடுகளும் என்றோ ஏற்றுக்கொண்டுள்ளன. அதன் விளைவே இந்தியா, இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கம் சார்ந்து இலங்கை அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் (1987இன் இந்திய - இலங்கை உடன்படிக்கை), 1999 – 2008 வரையான காலப்பகுதியில் நோர்வேயின் மத்தியத்துவம் மற்றும் 2002இல் இலங்கையில் சமாதானம், புனர்வாழ்வு மற்றும் மீளக் கட்டுமானம் சார்ந்து பங்களிப்பு செய்வதற்கு ஜப்பானின் அமைச்சரவை திரு. யசூசி அகாசி அவர்களை நியமித்தமை ஆகியன குறிப்பிடத்தக்கனவாகும்.
1987 இன் பின்னர் இலங்கையில் ஆட்சிக்கு வந்த அரசுகள் எதுவுமே அதிகாரப்பரவலாக்கத்தை நிராகரிக்கவில்லை. விரும்பியோ விரும்பாம்பலோ அவர்கள் அதிகாரப் பரவலாக்க உரையாடலை மேற்கொள்ள வேண்டிய நிலை காணப்பட்டது.
- 1987இல் ஜனாதிபதி திரு. ஜே. ஆர். ஜயவர்தன இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் மூலமாக அதிகாரப் பரவலாக்கத்துக்கான 13வது திருத்தச்சட்டத்தை அரசியலமைப்பில் இணைத்தார்.
- 1990இல் அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அரசியல் தீர்வுகளுக்கான திட்டங்களை முன்வைத்தார். இவரின் காலத்தில், 1991இல், திரு. மங்கள முனசிங்க தலைமையில் 45 பேர் கொண்ட பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டு தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கபட்டன.
- 1994 திருமதி. சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாயிருந்த காலத்தில், 1995இல் திரு. நீலன் திருச்செல்வம் மற்றும் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தலைமையில் “ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு” அடங்கலான தீர்வுப் பொதி தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- 2001இல் ஆட்சிக்கு வந்த திரு. ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராகக் கொண்ட அரசாங்கம் நோர்வே மத்தியத்துவத்துடன் சுயாட்சி (பெடரல் ) முறையிலான அதிகார பரவலாக்கத்துக்கு
இணங்கியது நினைவுகூறத்தக்கது.
2015 இல் ஆட்சிக்கு வந்த விக்கிரமசிங்க – சிறிசேன “நல்லாட்சி” அரசு, ஐ.நா. மனிதஉரிமைப் பேரவையினால் ஏற்கப்பட்ட தீர்மானத்தின் இணைப்பங்காளியாக இருந்தது. இத்தீர்மானத்தின் செயற்பாட்டு உறுப்புரை 16 ஆனது, அரசியல் தீர்வை, அதிகாரப் பரவலாக்கத்தை இலங்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்துகிறது.
அவ்வகையில், வடக்கு கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு, அதிகாரப் பரவலாக்கம் என்பது இலங்கையின் அரசியலமைப்பின் அங்கமாயிருப்பதுடன், சர்வதேச சமூகத்தினாலும், ஐக்கிய நாடுகள் சபையினாலும் வரவேற்கப்படுகின்ற ஒன்றாகும்.
ஆகவே, எமக்கான உரிமையை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசுக்கும், நட்பு நாடான இந்தியாவுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் வலியுறுத்திக்கொண்டு வடக்கு கிழக்கு வாழ் மக்களான நாம், எமது சாத்வீகமாகன, ஜனநாயகமான நூறுநாட்கள் செயல்முனைவை ஆவணி மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கிறோம்.
“ வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment